பதிவு செய்த நாள்

03 டிச 2017
14:35
பிருந்தாசாரதியின்  மீன்கள் உறங்கும் குளம்

 மிட்சுபிஷி, சுசிகி, சோனி இப்படி ஜப்பானியத் தயாரிப்புகளே இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. ஆனால், இவை வருவதற்கு முன்பே தமிழ்நாட்டுக்கு ஹைக்கூவை தனது சுதேசமித்திரன் இதழ் (1916) வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி.தமிழக் கவிதை வரலாறு கி.முவிலேயே தொடங்கிவிடுகிறது. ஜப்பானும் ஒரளவு பழைய மொழிதான், என்றாலும் அதன் சோக்கா வடிவ கவிதைகள் கிபி 7 ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகின்றன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மரபில் எப்படி முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கங்களிருந்ததோ அவ்வாறு ஜப்பானிய கவிதை அதனுடைய தலைநகர மாற்றங்களுக்கேற்ப ஆறு நிலைகளில் வளர்ந்திருக்கிறது.

இவ்வகையில் ஹைக்கூ ஜப்பானில் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கிறது. ஜப்பானின் கம்பன் எனச் சொல்லக்கூடிய பாஷோ ஒரு சாமுராய். ஜென் ரசம் மணக்கும் அவரது கவிதைகள் உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. தனது செர்ரிப் பழங்களைக் கவர வந்த நரியையும் ஹைக்கூ சொல்லிக் கவர்ந்தவர் பாஷோ.(பாஷோ - வாழைமரம், ஹைக்கூ - அணுத்தூசு ) 

ஜப்பானியர்கள் ஹைக்கூவில் பைத்தியமாய்த் திரிந்தவர்கள். பெண்பார்க்க போனபோது கூட பெண்ணுக்கு ஹைக்கூ எழுத வருமாவெனக் கேட்டார்கள்.நாம் தவளைகளை இழிவாகக் கருதுகிறோம். ஆனால், பாஷோ கவிதைகளில் தவளை ஒரு நீங்காப் பாத்திரம். ஜப்பானியர்கள் தவளையை பாட்டுப் பறவை எனக் கொண்டாடுகிறார்கள். இப்போது எனக்குப் பிடித்த பாஷோவின் இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1

கழுவிட விரும்புகிறேன் நான் 
இந்த உலகத்தின் அழுக்கினை 
சிறு சிறு பனித் துளிகளால்

2

என்னைப் போல பாவனை செய்யாதே 
அது அலுப்புத் தரும் 
பாதி பாதியான பூசணி போல

ஹைக்கூவைப் பற்றி தனது சீடர்களுக்கு பாஷோ கூறும்போது, உனக்கும் உனது கருப்பொருளுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது. நீயே ஹைக்கூவாக மாறிவிடு என்கிறார். ஹைக்கூ ஒரு புதிரை அவிழ்ப்பதல்ல. ஒரு தும்பியின் பாதையைப்போல அது வெகு இயற்கையாக அர்த்தத்தை நோக்கிச் செல்லவைப்பது. 

இவ்வுலம் ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று பங்கு நீராலுமானது. ஆனால், பாஷோ உலகின் அழுக்கை சிறு சிறு பனித்துளிகளால் கழுவ விரும்புகிறார். இரண்டாவது கவிதை உண்மையும் தத்துவமும் இணையப் பெற்றது. முழுப் பூசணி யென்பது வேறு. இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட பூசணியை இணைத்து முழுப்பூசணியாகக் காட்டுவது வேறு.

அது ஒன்று சேர்வதற்கு இயலாத இரண்டு பகுதிகள். பாஷோ இயற்கையோடு ஒன்றியவன். பாஷோவைப் போல் பாவிப்பவர்கள் ஈகோவில் ஒரு காலை பிரபஞ்சத்தில் ஒரு காலை வைத்திருப்பவர்கள். இவர்களால் பாஷோவாக மாறுவது கடினம். இப்படி ஜப்பானில் 5,7,5 என்கிற அசை வடிவில் உலகை பித்துப்பிடிக்கச் செய்த கவிதை தமிழுக்கு வந்தது. தமிழர்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் அதிக மசாலாவைக் கலப்பவர்கள். ஹைக்கூவிலும் கலந்தார்கள். நிறைய பொய்க்கூக்கள் தோன்றின. 

ஜப்பானில் இது ஜென் சாயம் கொண்டிருந்தது. தமிழில் வழக்கம்போல் வரதட்சணையில் தொடங்கி வேலையில்லாத் திண்டாட்டம், டிமானிடிசேஷன் வரை ஹைகூவில் போட்டுத் தாக்கினார்கள். ஞானக்கூத்தன் ஹைகூ ஒரு சுண்டெலியைப்போல தூக்கத்தில் உள்ளங்காலை சொறிவதாகக் கவலைப்பட்டுக் கொண்டார். பாஷோவுக்கு தவளையென்றால் தமிழர்களுக்கு இருக்கவே இருக்கிறது வண்ணத்துப் பூச்சி. 

கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்த நண்பர்களுள் பிருந்தாசாரதி முக்கியமானவர். நண்பன் ரவிசுப்ரமணியன் வழி அறிமுகமாகியிருந்தார். திரைப்படத் துறையில் பணியாற்றும் கவிஞர். நேற்று அவரது மீன்கள் உறங்கும் குளம் (டிஸ்கவரி வெளியீடு) கவிதைத்தொகுப்பை அனுப்பியிருந்தார்.

மீன்கள் உறங்குமா? மூன்றுவயது மகள் சுடர் கேட்டபோது, என் அறியாமையில் சவுக்கடி விழுந்தது. பொதுவாக உயிரிகளுக்கு உறக்கம் தேவை. சிலவகை சுறாக்கள் தவிர்த்து மீன்களுக்கு இமைகளிருப்பதில்லை. ஆனாலுமவை துடுப்பில் நிலைபெற்று சிறிதுநேரம் தூங்கவே செய்கின்றன. இவை விரைவிழி இயக்க உறக்கமன்று . சற்றே ஜாக்கிரதையான விழிப்புடன் 'நாப் ஸ்லீப்' (Nap sleep) என்ற குட்டித் தூக்கம் போடுபவை மீன்கள்.

பாஷோ சோறு இல்லையென்றாலென்ன கிண்ணத்தில் பூக்களையாவது நிரப்பு என்கிறார். ஆனால், நாமோ மண்புழுக்களையும் மீன்களையும் அழித்தவர்கள். பிருந்தா ஒரு தூண்டில்காரனைக் காட்டுகிறார். அவனுக்கு ரசனையுமிருக்கிறது. பசியுமிருக்கிறது. பசிக்கு மீன். ரசனைக்கு விண்மீன். இவர்களால் அழிந்ததில்லை நம் மீன்கள் என யோசிக்க வைக்கிறார். 

பாஷோவுக்கு வாய்த்த அதே பற்றற்ற பார்வை கொண்டு எழும்பிய ஹைக்கூ உலகம் பிருந்தாசாரதியுடையது. நான்கோ ஐந்தோ சொற்கள். ஆனால், அவ்வளவு லகுவாக கடந்துபோக முடியவில்லை. இவரது ஹைக்கூக்களின் அர்த்தம் சொல்லியதில் இல்லை.சொல்லாமல் விட்டதிலுமாக இருக்கிறது. சொல்லத் தெரிந்தால் மட்டும் போதாது ஹைக்கூவுக்கு.எதை மௌனமாக கடக்கவேண்டும் என்பதையும் பிருந்தா அறிந்து வைத்திருக்கிறார். 

நாம் கூட்டத்தில் பார்த்தவள்தான் மணப்பெண்.மேடையில் அவள் மட்டுமே கவனத்துக்கு வருகிறாளே எப்படி? ஹைக்கூவில் சொற்கள் அப்படி ஆகவேண்டும். இந்த வித்தை பிருந்தாவுக்கு கைவரப்பெற்றிருக்கிறது.  இரவு நெடுநேரம் உள்நோக்கி பயணித்து அர்த்தங்களைத் தேடவைத்த இவரது சில ஹைக்கூக்களை இங்கே தருகிறேன்.

1
பூக்கிறது காய்க்கிறது
கனிகிறது
மயானத்து மரமும்
2
ஊமைத் தாய்க்குப் 
பிறந்த குழந்தைக்கும் உண்டு
தாய்மொழி
3
தீராத தனிமை
பொட்டல் காட்டில்
ஒற்றைச் செருப்பு
4
வானில் பறந்தபடியே
ஏரியில் நீந்துகின்றன
பறவைகள்
5
உறங்குகிறான் வண்டியோட்டி
விழித்திருந்து வழிநடத்துகிறது
லாந்தர் விளக்கு


வானில் பறந்தபடியே ஏரியில் நீந்தும் பறவைகளைப்போல் நாம் வாழக் கற்கவேண்டும். நாம் விழுந்தால் சிறகு முளைக்க வேண்டும். மூழ்கினால் துடுப்பு வளரவேண்டும். வாழ்வு நம்மை பறக்கவைக்கிறது. பிரபஞ்சம் எனும் மாபெரும் ஏரி நம்மை நீந்த வைக்கிறது.  அதுபோலவே, வண்டியோட்டி உறங்கலாம்.லாந்தர் அணைந்து விடக்கூடாது என்கிறார் பிருந்தா. மனிதன் கண்மூடலாம்.அவனுக்குள் உறைந்திருக்கும் கடவுள் எப்போதும் விழித்திருக்க வேண்டும்.

-கரிகாலன், கவிஞர்.   

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)