தலைப்பு : இனி நான் உறங்கட்டும்
ஆசிரியர் : ஆ. மாதவன் (தமிழில்)
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி வெளியீடு
விலை : 100/-

பதிவு செய்த நாள்

09 டிச 2017
14:41

 வ்வளவு முறை படித்தாலும் புதிதாக ஏதோ ஒன்று மஹாபாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எந்தக் காலக் கட்டத்திலும் / எத்தனை முறை படித்தாலும் அதை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட முடியும் என்று தோன்றவில்லை.

“எனக்கு ஓய்வே தராத வகையில் ஸ்லோகங்கள் சொல்லப்பட வேண்டும்” விநாயகர். “அப்படியே ஆகட்டும். ஆனால் சொல்லப்படும் ஸ்லோகங்களின் பொருள் உணர்ந்தே எழுதப்பட வேண்டும்” வியாசர். புரிந்துகொண்டு எழுதும்படி கண நாயகனுக்கே கட்டளை இடுகிறார் முனி! 
சாமானியர்களால் மஹாபாரதத்தை அவ்வளவு எளிதில் புரிந்துகொண்டுவிட முடியாது என்பதை மேற்கண்ட உரையாடல் சுட்டுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அது (மஹாபாரதம்) பல்லாயிரம் விதைகள் உறங்கும் ஒரு நிலம். வாசகனின் கற்பனையின் நீர் பட்டு அவையெல்லாம் முளைக்க வேண்டும். – ஜெய மோகன்.

சாமன்யர்களான நாம் ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது அது குறித்து மற்றவர்களிடம் சொல்கிறோம். அதற்கடுத்த நிலையாக அதைப் படித்திருப்பவர்களுடன் உரையாடுகிறோம். இன்னும் ஒரு படி மேலே போய் அந்த வாசிப்பனுபவம் குறித்து எழுதுகிறோம்.

தேர்ந்த எழுத்தாளர்கள் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை வாசித்துவிட்டு, அவை குறித்துக் காத்திரமான கட்டுரைகள் எழுதுகின்றனர். சிலபடிகள் மேலேபோய் அதில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விஷயங்களைக் கற்பனை கலந்து புனைவாக மறு ஆக்கம் செய்கின்றனர் – சில பகுதிகளையோ அல்லது மொத்த இதிகாசத்தையோ.

இது கத்தி மேல் நடக்கும் வித்தை. நிறைய கற்பனைகள் கலந்து எழுதினால் ‘மூலப் பிரதி சிதைந்துவிட்டது’ என்ற குற்றச்சாட்டு எழும். இதிகாசத்தை ஒட்டியே எழுதினால் ‘புதிதாக என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள நேரிடும்.

சட்டங்களைப் புரிந்துகொள்வது பற்றிய பாடத்தில் இவ்வாறு வரும்: One is allowed to iron the creases out and should not alter the clothe. இதிகாசங்களை மறு ஆக்கம் செய்வதற்கும் இந்த விதியைப் பொருத்திக் கொள்ளமுடியும். சிறப்பான முறையில் மறு ஆக்கம் செய்யப்பட்ட பாரதக் கதைகள் நிறைய உண்டு. இவற்றை வாசிப்பதால் பாரதம் பற்றிய நம் புரிதல் அடுத்த நிலைக்கு நகர்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் ‘இனி நான் உறங்கட்டும்’.

திரௌபதிக்கு மற்றவர்கள் (தருமன், குந்தி, சஞ்சயன், கிருஷ்ணர்) கர்ணனைப் பற்றி எடுத்துச் சொல்வதாகவும், அவளும் அவன் குறித்த நினைவுகளை அசைபோடுவதாகவும் நாவல் அமைந்துள்ளது.

சகோதர ஹத்தியால் துக்கத்திலிருக்கும் யுதிஷ்டிரன், புத்திரனை இழந்த சோகத்தில் இருக்கும் குந்தி, ஆனால், அந்தத் துக்கத்தை முழுமையாகக் கொண்டாட முடியாத சூழல் (கர்ணனுக்கு அநீதி இழைத்தவள் எப்படி அவன் சாவிற்கு துக்கம் கொண்டாட முடியும் என்ற விதத்தில்), தான் பட்ட அவமானங்கள், கஷ்ட நஷ்டங்கள், தன் புத்திரர்கள் இறந்தமை குறித்து எவரும் வருந்தவில்லை என்றும் தான் தனிமைப்படுத்தப் பட்டதாகவும் உணரும் பாஞ்சாலி என்று பல கோணங்களை இந்த நாவல் விரிவாகக் காட்டுகிறது.
*
துரியோதனனின் அழிவுடன் போர் முற்றிலும் முடிந்துவிட்டதென தூதுவர்கள் வாயிலாக அறிந்துகொண்ட திரௌபதி தனக்கு உறக்கம் வேண்டுமென்ற பிரார்த்தனை செய்கிற காட்சியோடு நாவல் ஆரம்பமாகிறது.

“இறைவனே! குலைந்த கூந்தலும், எரியும் மன நிலையுமாக ஆயிரம் இரவுகளைக் கடத்தியவள் நான். பல ஆண்டுகள் கணவனருகில் நித்திரையின்றிக் கடத்தியவள் நான். ஜீவராசிகளுக்கெல்லாம் கருணையோடு நீ தந்துள்ள நித்ரா சுகத்தைச் சரியாக அறியாதவள் நான். கெட்ட கனவுகள் இல்லாத பயமற்ற ஆழ்ந்த உறக்கத்தை நீ எனக்குத் தருவாயாக...”

பாஞ்சாலிக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல். ஐவருக்கு மனைவியாதல். சபையில் அனைவர் முன்னிலையிலும துச்சாதனன் ஆடையை உருவ முயலுதல். வனவாசத்திலும் அவள் நிம்மதியைக் குலைத்த பல சம்பவங்கள் உண்டு. உதாரணமாக, துர்வாசர் விருந்துக்கு வருதல், ஜயத்ரதன் வலுவில் கூட்டிச் செல்லுதல் ஆகியன.
அஞ்ஞாத வாசத்தின்போதும் கீசகனால் தொல்லை. தருமபுத்திரர் மீண்டும் மீண்டும் சமாதானத்தையே நாடியதால் எங்கே தன் சபதங்கள் நிறைவேறாது போய்விடுமோ என்ற கவலை. உப பாண்டவர்கள் துருபதனிடமே வளர நேரிட்டதால் புத்திரர்களைப் பிரிந்திருந்த சோகம் வேறு. யுத்தம் நடந்த நாள்களிலும் வெற்றி யார் பக்கம் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாத நிலை. பாஞ்சாலிக்கு உறக்கமென்பது நிச்சயம் இருந்திருக்க முடியாது.

மெல்ல நித்திரையில் ஆழ்ந்தபோது, உரத்த அலறல்கள் கேட்டு எழுகிறாள். நதியின் எதிர்க்கரையில் கூடாரங்கள் எரிந்து கொண்டிருந்தன. உப பாண்டவர்களையும், மற்றவர்களையும் பற்றி நினைத்துப் பார்த்து பயந்தாள். வாய்விட்டழவும் முடியாத உறைந்த நிலை. வந்த உறக்கம் தொலைந்தது.

அடுத்து வருவது துக்கமான காட்சி. திருதராஷ்டிரர், விதுரர், சஞ்சயர் முன்னால்வர, நூற்றுக்கணக்கான விதவையர் உயிரற்ற உடல்களைக் கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொள்ளும் ஆர்வப் பெருக்கால் குருக்ஷேத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். வானவர் கூடப் பார்த்திருக்க முடியாத அரசிளங் குமரியர் அழுதும் அரற்றிக் கொண்டும் சென்றனர். முன்பு யுத்த வெறியில் திமிர்ப்புடன் மன்னர்கள் சென்ற காட்சிகளைக் கண்டிருந்த ஹஸ்தினாபுரத்து வீதிகள் இந்தக் கண்ணீர் ஊர்வலத்திற்கும் சாட்சிகளாயின.
யுதிஷ்டிரன் தர்ப்பணம் செய்யுமுன் கர்ணன் அவனுக்கு மூத்த சகோதரன் என்றும் அவனுக்குத்தான் முதலில் அந்திமக் கிரியை செய்யப்படவேண்டும் என்று குந்தி சொன்னதும் தருமன் திடுக்கிடுகிறான். சகோதர ஹத்தியால் ஏற்படக்கூடிய பாவம் பற்றிய பயம் அவனை பீடித்தது. தானும் நகுல, சகதேவர்களும் பீமனும் உயிருடனிருப்பது அவனிட்ட பிச்சை என்ற எண்ணமும் மிகுந்த வருத்தம் தருவதாய் இருந்தது. தபோவனம் சென்றுவிட முடிவெடுத்தான். தம்பியர் அனைவரும், திரௌபதியும் தேற்றியும் சமாதானம் அடைந்தானில்லை.

கர்ணன் உயிரோடிருந்தபோது, அவனால் நிம்மதி இல்லை. அவன் இறந்தும் மிச்சமிருக்கும் தங்கள் வாழ்க்கையின் அடிவேர் வரை அகன்று எடுத்துத் தகனம் செய்யப் பார்க்கும் அவனது நினைவை எண்ணித் திரௌபதி படபடத்தாள். நாவலின் இந்தப் பகுதி வரை திரௌபதிக்குக் கர்ணன் மேல் இருந்தது வெறுப்பு மட்டுமே.

கௌரவர் சபையில் நடந்துகொண்டதை வைத்துப் பார்த்தோமானால் கர்ணன் செய்தது இழிவான செயலே. மற்ற குணங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, கர்ணன் நல்லவனே என்ற முடிவை எட்டத் தோன்றுகிறது. நல்லவனான கர்ணன் ஏன் சபையில் அவ்வாறு நடந்துகொண்டான் என்பதற்கும் இதிகாசத்தில் விடை இருக்கிறது, வெளிப்படையாக இல்லாமல் கொஞ்சம் மறைவாக.
‘நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்’ என்று பல இடங்களில் கர்ணன் கூறுகிறான். கௌரவர் சபையிலும் அவ்வாறுதான் இருக்கிறான். சூதாட்டத்திற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது திரௌபதி. அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் துரியோதனன், துச்சாதனன், கர்ணன். முதல் இருவரின் இறப்பு யுத்தம் முடிந்தபிறகு சிக்கலாக இல்லை. கர்ணனின் இறப்பு சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது. 
இனி நிம்மதியாக உறங்கலாம் என்ற திரௌபதியின் எண்ணம் ஈடேறுவதில்லை. எப்போது உறக்கம் வரும்? கர்ணன் குறித்த திரௌபதியின் மதிப்பீடுகள் மாறும்போது. அந்த மாற்றம் ஏற்பட்ட விதத்தை பாரதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த நாவல் சொல்கிறது.

கர்ணன் பிறந்தது முதலே சிக்கல். தாய் ஆற்றோடு விட்டுவிடுகிறாள். வித்யா மண்டபத்தில் அவமானம். சுயம்வரத்தின்போது, ‘தேரோட்டி மகனுக்கு மாலையிட மாட்டேன்’ என்று திரௌபதி கூறிவிடுகிறாள். தொடர்ச்சியாக பீஷ்மரால் அவமானப்படுத்தப்படுகிறான். இவ்வளவு துன்பங்களுக்கு ஆளான ஒருவன் பழிவாங்குதல் மட்டுமே வாழ்க்கை என்று இருந்திருக்க வேண்டும். 
மாறாக இந்திரன் கேட்டதும் தன் கவச குண்டலங்களைத் தானமாக அளிக்கிறான். குந்தி கேட்கும் வரத்தைத் தருகிறான். பலமுறை தன்னை அவமதித்த பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்தபோது, அவரிடம் இதமாகப் பேசுகிறான். போர்க்களத்தில் பல சந்தர்ப்பங்களில் பாண்டவர்களைக் கொல்லாது விடுகிறான். கிருஷ்ணன், குந்தி ஆகியோர் ராஜ்ய ஆசையைக் காட்டியபோதும் மறுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாகத் திரௌபதியைச் சேரலாம் என்ற வாய்ப்பிருந்தும் மறுத்துவிடுகிறான்.

படிப்படியாக கர்ணனைப் பற்றிய திரௌபதியின் மதிப்பீடு மாறுகிறது. ஆயுத வித்யா காட்சி விழாவில் கர்ணன் நிகழ்த்திக் காட்டிய சாகசங்களை யுதிஷ்டிரன் விளக்குகிறான் (“அர்ஜுனனை விடவும் கைவேகத்துடன் யந்திர மிருகத்தின் வாயுள் அம்புகளை ஏவிக் காட்டினான். கயிற்று நுனியில் தொங்கும், மாட்டினது கொம்பில் அர்ஜுனனின் சரங்களுக்கு ஊடாக இருபத்தோரு அம்புகளை அலட்சிய வேகத்தில் அவன் எய்துவிட்டான்”). பதிமூன்று வருடங்களையும் யுதிஷ்டிரன் கர்ணனைப் பற்றிய பயத்தோடுதான் கழித்ததாக ஒப்புக்கொள்கிறான்.

இறந்த மகன்களையும் பந்துக்களையும் எண்ணித் துக்கம் கொண்டாடும் உரிமை பாஞ்சாலி, காந்தாரிகளுக்கு உண்டு. தனக்கு அது இல்லை என்று குந்தி புலம்புகிறாள். ஒரு வகையில் கர்ணனின் சாவிற்கு அவளே காரணம் என்று நினைக்கிறாள். பிறந்ததும் எந்தப் பாவமும் அறியாத சிசுவை ஆற்றோடு விட்டுவிட்டதை நினைவுகூர்கிறாள்.

எல்லா நேரத்திலும் தான் தனிமைப் படுத்தப்படுவதாக திரௌபதி எண்ணுகிறாள். அதுபோன்ற நேரங்களில் உதவுவது கண்ணன் மட்டுமே என்று நினைக்கிறாள். தன் மக்கள் இறந்தது குறித்துப் பெரிதாகக் கவலை கொள்ளாமல் கர்ணனின் இறப்பு குறித்து மட்டுமே யுதிஷ்டிரன் துயரப்படுகிறான் என்று திரௌபதி எண்ணுகிறாள்.

தருமன் கர்ணனைப் பற்றித் துயரப்படுவது சரியானதே என்று கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார். கர்ணனைத் திரௌபதி சபையில் கண்டது ஒரு துரதிர்ஷ்டமான வேளையில். விதியின் ஆக்கினையை மீறுதல் யாருக்குமே சாத்தியமன்று. அந்தப் பொல்லாத வேளையில் கர்ணன் நிலை மறந்து மதி கெட்டவனாக நடந்து கொண்டான். 
தனிமையில் அவனைச் சந்தித்து அவனுடைய பிறப்பு ரகசியங்களைப் பற்றி எடுத்துச் சொன்னபோதும் அவன் பாண்டவர் பக்கம் இணைய மறுத்தான். திரௌபதியைப் பழிக்கும்போது, அவன் கண்டது அவளை அன்று. பீஷ்மர் பெரிதும் புகழ்ந்த பீமார்ச்சுனர்களின் சிதிலமாகிப் போன வீரத்தை. அவளைப் பழித்தது குறித்து வெட்கப்படுவதாகவும், ஆயுட்காலத்தில் அதற்கு நிவாரணம் கிடையாதென்றும் கர்ணன் கூறியதாகப் பரந்தாமன் திரௌபதியிடம் எடுத்துரைத்தான்.

இது நாவலின் முக்கியமான கட்டம். கிருஷ்ண – கர்ண சந்திப்பு பாரதத்தில் வருகிறது. கர்ணன் தன் நடத்தை குறித்து வருந்தவும் செய்கிறான். ஆனால் அது மேலே நாவலில் உள்ளது போல விஸ்தாரமாக இல்லை.

For those harsh words, O Krishna, that I said before unto the sons of Pandu for the gratification of Dhirarashtra’s son,-for that wicked conduct of mine, - I am consumed with repentance.

மஹாபாரதத்தில் சபையில் நடந்து கொண்டது குறித்துக் கர்ணன் பேசியதாக வருவது மேலே உள்ளது மட்டுமே. நாவலாசிரியருக்கு உள்ள கற்பனா சுதந்தரப் படி, பழித்தது திரௌபதியை என்றாலும் அவன் கண்டது பீமார்ச்சுனர்களின் வீரமழிந்த செயலற்ற நிலையை என்பதாகக் கொண்டு செல்கிறார்.

பீமார்ச்சுனர்களைப் பழிக்கக் கர்ணனுக்கு முகாந்திரங்கள் உண்டு. அர்ஜுனனை விற்போரில் வெல்வதுதான் கர்ணனின் வாழ்நாள் லட்சியம். அவனுடைய வீரம் சரிவைக் காணும் எந்தக் கட்டத்தையும் கர்ணன் கொண்டாடவே செய்வான். துரியோதனன் பீமனைப் பரம வைரியாகக் கருதுகிறான். துரியோதனனை மகிழ்வூட்ட பீமனையும் பழிக்கிறான்.

ஒருவேளை ‘தேரோட்டியின் மகனுக்கு மாலையிட மாட்டேன்’ என்று திரௌபதி சுயம்வரத்தின்போது, கர்ணனைப் பார்த்துக் கூறியதை மனதிற்கொண்டு கர்ணன் திரௌபதியைப் பழித்திருக்கலாமே என்ற கோணத்தில் கொஞ்சம் யோசிப்போம். தேரோட்டியின் மகன் என்று கர்ணனை யார் விளித்தாலும் அவர்களை அவன் புறக்கணித்தே வந்திருக்கிறான். 
சுயம்வரத்திற்குப் பிறகு, கர்ணன் திரௌபதியின் மேல் கோபம் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் பால் கொண்ட வெறுப்பை இன்னொருவர் மேல் காட்டுவதா என்பதைப் பார்ப்போம். எல்லாம் அறிந்த பீஷ்மரே துரியோதனனைக் கண்டிக்க முடியாது கர்ணனைப் பல சமயங்களில் ஏசுகிறார். குலநாசம் வந்துவிடக் கூடாது என்று கர்ணனின் வீரம் பற்றிக் குறைத்தே பேசுகிறார். ஒரு கட்டத்தில் கர்ணன் கொல்லப்பட்டுவிட்டான் என்று தவறாக உணர்ந்துகொண்ட தருமர் பின்னர் அவன் இன்னும் கொள்ளப் படவில்லை என்ற உண்மை தெரியவரும்போது அர்ஜுனனை ஏசுகிறார். அது முழுக்க முழுக்கக் கர்ணன் மீதுள்ள வெறுப்பு மட்டுமே. இன்னும் கொஞ்சம் தேடினால் பாரதத்தில் மேலும் சில உதாரணங்கள் இருக்ககூடும்!

கர்ணன் – குந்தி சந்திப்பின்போது, “எவருக்குமே தானம் மறுக்காத நீ சுயநலக்காரியாகிய தாய்க்கு ஏன்தான் சுயநலத்தை மறுக்கிறாயோ” என்று குந்தி சொன்னபிறகும் கர்ணன் பாண்டவருடன் இணைய மறுக்கிறான். பாண்டவரில் அர்ஜுனனைத் தவிர மற்றவரைக் கொல்வதில்லை என்று வாக்களிக்கிறான். கர்ணன் எப்போதுமே அவனாகவே இருக்க விரும்பினான்.

சஞ்சயன் திரௌபதிக்கு பீஷ்ம – கர்ண சந்திப்பு பற்றி விளக்குகிறான். பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் நடைபெறும் உரையாடலில் கர்ணனைக் குறைத்துப் பேசியதற்கான காரணங்கள் பற்றி அவர் விளக்குகிறார். “...இத்தனையும் அறிந்த நான் குலநாசம் தடையும் முகத்தான் – அறிந்துகொண்டே உன்னைத் தேஜோவதம் செய்தேன்.”

குல நாசத்தைத் தவிர்ப்பது என்பதே பீஷ்மரின் ஸ்வ தர்மமாக இருந்தது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, பீஷ்மர் பொதுநலம் வேண்டினார் என்ற பொருள் தொனித்தாலும் உள்ளடக்கத்தில் அது சுய விருப்பின் வெளிப்பாடே. அதை நாவலில் அவரே சொல்கிறார். இந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சம் Ayn Rand – இன் வாடையும் அடிக்கிறது!

“தார்மீக வழி நடப்பவர்களும், சத்திய வழி நடப்பவர்களும் ஆகிய மானிடர்க்கு சுயநலத்திற்கு வெளியே விரிந்த வாழ்க்கை வெளியில் பரந்து கிடக்கும் விருப்பங்கள் ஏற்படுகின்றன. பரந்து விரிந்த அவ்விருப்பங்களை உயரிய லட்சியமென, மானிடர்கள் அழைத்துக் கொள்கின்றனர். அழகு சுந்தரமான புருஷ ரூபத்திற்கும், அரூபமான புருஷ ரூபத்திற்கும் உள்ளடக்க எலும்புக்கூடு ஒரே மாதிரியானதுதான். இந்த சிரேஷ்டமான லட்சியத்தின் அடிப்படையும், சாமானிய விருப்பத்திற்கு மட்டுமானதே”

பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்த களத்தில் கர்ணன் தாய்க்குக் கொடுத்த வாக்கினால் பஞ்சபாண்டவர்கள் தப்பிப் பிழைக்க நேர்ந்ததையும் சஞ்சயன் திரௌபதிக்கு விளக்குகிறான். ஒரு கட்டத்தில் கர்ணன் கொல்லப்பட்டுவிட்டான் என்று தவறாக உணர்ந்துகொண்ட தருமர் பின்னர் உண்மை தெரியவரும்போது அர்ஜுனனை ஏசுகிறார். ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுமாறு கூறுகிறார். அது முழுக்க முழுக்கக் கர்ணன் மீதுள்ள வெறுப்பு மட்டுமே. தருமனால் அவ்வாறு கோபப்பட முடியும் என்று பாஞ்சாலியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. (“மனிதன் எப்பொழுதுமே மனிதன்தான். எந்த மனிதனும் பலவீனமானவன்தான்” அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன).

நடந்தவை எல்லாவற்றையும் அறிந்த திரௌபதிக்குக் கர்ணன் சந்தித்த நிர்பாக்யங்களோடு ஒப்பிடும்போது, தன்னுடையவை சாரமற்றவை என்ற முடிவை எட்டுகிறாள். யுதிஷ்டிரனின் வேதனைகளின் முன்னிலையில் தனது வேதனைகள் ஒன்றுமே இல்லை என்றும் தெளிகிறாள். தனக்கு வைதவ்ய நிலை ஏற்படாததற்குக் காரணம் கர்ணனின் மிகப் பெரிய கிருபாகடாக்ஷம் என்பது அவளுக்குத் தெரிய வருகிறது.

கிருஷ்ண – கர்ண சந்திப்பின்போது, கிருஷ்ணன் அவனுக்கு ராஜ்ஜிய பதவி, ரதத்தில் திரௌபதியுடன் அருகில் அமர்ந்து செல்லுதல் (திரௌபதியோடு கூடும் வாய்ப்பு) குறித்தெல்லாம் பேசியதாகச் சொல்லியதை பாஞ்சாலி நினைவு கொண்டாள். அதே காட்சிகளைக் காட்டிக் குந்தியும், பீஷ்மரும் கர்ணனை பாண்டவருடன் சேர்ந்துகொள்ளுமாறு கூறியதையும் எண்ணிக்கொண்டாள்.
பலநூறு விதவையரின் பதறிய பிரார்த்தனை அவள் நினைவோட்டத்தைத் தடுக்கிறது. தான் கூட அந்த விதவையரிடையே ஒரு விதவையென ஒரு நீண்ட பெருமூச்சுடன் நினைக்கலானாள்! நாவலில் தொடர்ச்சியாகத் திரௌபதி கெட்ட கனவுகளைக் காண்கிறாள். நாவலின் முடிவில் அர்ஜுனனும் கர்ணனும் விற்போர் புரிவதாகக் கனவு காண்கிறாள். கர்ணனின் தோள் மேல் உப பாண்டவர்கள் அமர்ந்திருக்கின்றனர். காண்டீபத்தில் இருந்து புறப்பட்ட அம்புகள் கர்ணனின் தோளிலிருந்த ஆறு சிரசுகளையும் குறி வைத்துப் பறந்தன.
“வேண்டாம் அர்ஜுனா வேண்டாம் அர்ஜுனா” என்ற அழுகை ஓலம், பிளவுபட்ட கழுத்து வழியாக வெளிவந்தது எனவும், அந்த ஓசைத் தெறிப்பில் – தான், பொடிப் பொடியாக உடைந்து சிதறியதாகவும் அவளுக்குத் தோன்றியது. நெருப்பில் விழுந்தவனைப் போல் படபடப்போடு எழுந்தேன். இருளை நோக்கித் திறந்த கண்களுடன் இருந்த தனக்கு முன்னால், பயங்கரமான அந்தக் காட்சி, பயங்கரமான சொந்தத் துயரம், துடிப்புடன் தெளிவுடன் நின்றது.

திரௌபதியின் மனமாற்றத்தை இவ்வாறு படிப்படியாகக் காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளது. அந்தக் கொடுங் கனவிற்குப் பிறகு ‘இனி நான் உறங்கட்டும்’ என்று சொல்வதோடு நாவல் முடிகிறது. உறக்கம் வேண்டிப் பிரார்த்தனை செய்வதாக ஆரம்பித்து ‘உறங்கப் போகிறேன்’ என்று முடிவது மிகப் பொருத்தம்.
*
நாவலாசிரியர் கர்ணனின் கதையைக் கூற முற்படுகிறார். அதைத் திரௌபதியின் பார்வையில் மறு ஆக்கம் செய்கிறார். ஏன் திரௌபதி? கர்ணனின் இறப்புக்குப் பின்னரும் அவனால் சிக்கல்கள் தோன்றுகின்றன. அவளைப் பொறுத்தவரை கர்ணன் தண்டிக்கப்பட வேண்டியவன். இழிந்தவன் என்கிற முனையில் இருந்து நிர்பாக்கியசாலி / போற்றப்பட வேண்டியவன் என்ற இன்னொரு முனைக்கு அவனைப் பற்றிய புரிதலை வாசிப்பவருக்கு ஏற்படுத்தத் திரௌபதியின் பாத்திரம் வழியே கதையைச் சொல்வதை விடச் சிறந்த வழி வேறேதும் இருக்குமென்று தோன்றவில்லை.

பாரதம் பற்றிய பரிச்சயம் இல்லாதவரும் நாவலைப் படித்து முழுதும் புரிந்து கொள்ளலாம் என்பது நாவலின் மற்றொரு சிறப்பு.
- பழனி மனோஜ் 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)