தலைப்பு : தகனம் - நாவல்
ஆசிரியர் : ஆண்டாள் பிரியதர்ஷினி
பதிப்பகம் : என்.சி.பி.எச்

பதிவு செய்த நாள்

09 டிச 2017
15:25

 ண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தகனம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. மயானத்தில் பிணங்களை எரித்தும், புதைத்தும்  தொழில் செய்யும் வாழ்வியல் குறித்துப் பேசும் காத்திரமான புதினம். நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தவர் கி.ராஜநாராயணன். நாவலின் மையக் கருத்தியலான மயானத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விரிவாகவே எழுதப்பட்ட அணிந்துரை. ஊர் குடிமகன்களாலும், அவர்கள் வழக்கொழிந்துபோனபிறகு வெட்டியான்களாலும் கிராமங்களில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆச்சியின் சாவின்போது, கிட்டத்தில் வேறொறு சவம் எரிந்துகொண்டிருக்க என் தலைமுடி வழிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

வடக்கே கால்நீட்டிப் படுத்திருந்த ஆச்சியின் தலைமாட்டில் கங்குக் குச்சியினை திரும்பிப் பார்க்காமல் சொருகிவிட்டு தகன மேடையிலிருந்து நடையைக் கட்டச் சொன்னார்கள். வீட்டுக்கு வந்தபிறகுதான் உரைத்தது ஆச்சி இனி வரப்போவதே இல்லை. அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமென.

மறுநாளைக்கான காரியங்கள் செய்யப் போனபோது சுக்குச் சுக்காக எலும்புகள் கரிந்துபோன மிச்சம் தான் ஆச்சி என்றார்கள். மண் கலயத்தில் அள்ளிப்போட்டு தாமிரபரணி ஆற்றடி நீரோட்டத்தில் திரும்பிப் பார்க்காமல் கொட்டிவிட்டு வந்தேன். இனி ஆறுதான் ஆச்சி. ஆச்சிதான் ஆறு.

பிறகு நிறைய சாவுகள் பார்த்துவிட்டபோது மயான பூமி இருக்கிற திசை மீது ஊருக்குள் எல்லோருக்குமே அழியாத பயம் இருந்தது. ஆனாலும் அங்கேயே பிழைப்பழிந்து, வாய்க்கரிசிப் பருக்கைகள் எண்ணி, கோடித் துணி எடுத்து, ஊருக்குள் ஒருத்தரும் சீந்த மறுக்கிற, கண்கொண்டு காண மறுக்கிற வெட்டியான்களின் வாழ்க்கைப் பாடு குறித்து எந்த சிந்தனையுமே இல்லாமல் கடந்துவிட்டிருக்கிறோம்.

உலகவாழ்வின் உச்சம் அரசபோகம் என்றால் அதன் கடைக்கோடி மயானபூமி. அந்த மயான பூமியில் உழைத்துப் பிழைக்கும் சனங்களின் வாழ்க்கையை படம்பிடித்துப் பார்த்தமாதிரி அசலான எழுத்தாக தகனம் நாவல் இருக்கிறது. அதிலும் நாவலில் வரும் சின்னப் பொண்ணுவின் கதாப்பாத்திர உருவாக்கம் மனத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

பெத்த பிள்ளையின் புதைத்த சடலத்தை தகப்பனே கூட தொடமாட்டான். தொட்டுப் புரட்டி தோண்டி எடுத்துத் தந்தவர்களுக்கு ஐம்பது ரூபாயைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நீட்டும்போது சின்னப் பொண்ணு பேசுகிற பேச்சு சுள்ளெனத் தெறிக்கிறது.

நாவலில் மையம், கதையாடல், இலக்கு, பாத்திரப் படைப்பு எல்லாமும் ஒன்றுசேர்ந்து, ஒருமித்து எழுந்து நிற்கும்போது அதன் வீச்சு வாசிக்கிற மனங்களைப் புயலாகக் கடந்துபோகிறது.

தான் சார்ந்திராத பின்புலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை கிட்டேபோய் அனுபவித்து எழுதுவதில், ராஜம் கிருஷ்ணன் மாதிரியானவர்களிடம் இருந்திருந்த உன்னதமான அந்த ஈடுபாடு தகனம் நூலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களிடமும்   இருந்தது கண்டு வியந்துபோனேன். பல்கலைக் கழகப் பாடமாக இந்நாவலை வைத்திருக்கிறார்கள். சரியான காரியம் தான்.  -கார்த்திக்,  திருநெல்வேலி.

 

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)