பதிவு செய்த நாள்

11 டிச 2017
11:59

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. அதுதான் இலக்கியத்தின் மகிமை. இளம் எழுத்தாளர் என்பவர் வயதைக் கொண்டு அளவிடப்படுபவர் அல்லர், எழுதத் தொடங்கும் காலத்தால் அறியப்படுபவர்” என்று தலைமை உரையோடு இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சியைத் தொடங்கிவைத்தார் வெ.இறையன்பு.
சாகித்ய அகாதெமி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
முதல் அமர்வில் “தமிழ்ச் சிறுகதைகள் - படைப்பும் பார்வையும்” என்ற தலைப்பில் உரையாற்றிய முகிலை ராசபாண்டியன், சிறுகதைகளின் வகைகள், அவற்றின் தொடக்கம் எப்படி அமைய வேண்டும், உள்ளடக்கம், முடிவு மற்றும் நவீன சிறுகதைகளின் வடிவம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
“மொழியும் கதையும்” என்ற தலைப்பின் கீழ் எழுத்தாளர் சா.கந்தசாமி கருத்துரை வழங்கினார். செவ்விலக்கியங்களில் இருக்கும் மொழிச் சிறப்புகள் குறித்துச் சொல்லி, கதைகள் ஏன் பொதுமொழியில் எழுதப்பட வேண்டும் என்று விளக்கினார்.
எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் “சிறுகதையைச் செப்பனிடுதல்” குறித்துப் பயிற்சியளித்தார். ஒரு கதையில் இருக்கும் தேய்வழக்குகள், பார்வைக் கோணங்களில் உள்ள தவறுகள், கதைப்போக்கைத் தாமதப்படுத்தும் பகுதிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து நீக்குவது எப்படி என்று விளக்கினார்.
அதன் ஒரு பகுதியாகச் சிறுகதை ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கியபின் கிடைக்கும் கச்சிதமான வடிவத்தால் வாசகருக்குக் கிடைக்கும் அநுபவத்தை உணரச்செய்தார். பதிப்பாசிரியர்களால் எப்படி இந்தச் சிறுகதைகள் அவற்றின் நோக்கம் சிதையாமல் சுருக்கப்படுகின்றன என்று சொன்னதுடன், ஒரு படைப்பாளி சிறுகதைகளின் அளவு குறித்து யோசிப்பதைவிடவும் வடிவம் குறித்தே அதிகம் கவனம் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
இரண்டாம் நாள் அமர்வில், “கற்றுத் தரும் கதைகள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஒரு கதையின் கருவைப் பெறுவது எப்படி, அதை வெவ்வேறு கோணங்களில் அணுகுவது, அதன் தொடக்கம் எப்படி அமைய வேண்டும், உள்ளடக்கம், விவரணைகள், நுட்பமான விஷயங்களைக் கதைக்குள் கொண்டு வருவது, கதையின் முடிவு ஆகியவற்றைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார்.
கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள்பற்றியும் எளிமையாக எடுத்துச் சொன்னார். ஒரு வாசகனாக மூத்த படைப்பாளிகளின் படைப்புகளைப் வாசிப்பதற்கும், ஓர் இளம் படைப்பாளி அவற்றில் இருக்கும் நுட்பங்களைக் கண்டறிவதற்காக வாசிப்பதற்குமான வித்தியாசங்களைக் கூறினார். நிறைவாக ஓர் இளம் படைப்பாளி தொடர்ந்து எழுதுவதன் வழியாகவே சிறப்பான சிறுகதைகளைப் படைக்கமுடியும் என்று அழுத்திச் சொன்னார்.
அதைத் தொடர்ந்து “சிறுகதை: கருவும் உருவும்” என்கிற தலைப்பில் எழுத்தாளர் மாலன் உரையாற்றினார். பாரதியின் சிறுகதை ஒன்றில் வெள்ளையர்களுக்கு எதிரான கருத்துகள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொல்லி, கரு ஒரு கதையாக உருவாகும் மாயத்தைத் தன் சொற்களாலேயே காட்சிப்படுத்தினார்.
இரண்டு நாட்களும் இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை நல்லமுறையில் செம்மைப்படுத்திக்கொண்டனர்.
- பா.சரவணன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)