பதிவு செய்த நாள்

11 டிச 2017
16:16

மிழ் இலக்கணத்தை எழுதுகிறவர்கள் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டுவார்கள். தொல்காப்பியம்தான் காலத்தால் மூத்த இலக்கண நூலாகும். நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல் இலக்கிய நூலன்று. இலக்கண நூலாம் தொல்காப்பியம்தான்.
தொல்காப்பியத்திற்கு அடுத்தும் பல இலக்கண நூல்கள் தொடர்ந்து தோன்றியவாறு இருந்தன. அப்படிக் காலந்தோறும் தமிழுக்கு இலக்கண நூல்கள் இயற்றுவதைப் பெரும்புலவர்கள் தம் கடமையாகக் கருதினர். அத்தகையோரைப் புரந்து காப்பது அரசர்க்கும் உரிய கடமையாக இருந்தது. அவ்வாறு தொல்காப்பியத்திற்கு அடுத்ததாய்த் தற்காலத் தமிழறிஞர்கள் மேற்கோள் காட்டுகின்ற செம்மையான இலக்கண நூல் 'நன்னூல்'.
நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர் ஆவார். 'பல்கலைக்குரிசில் பவணந்தி' என்று அவரைச் சிறப்பித்துக் கூறுவர். பவணந்தி முனிவர் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருடைய காலம் கி.பி. 1178ஆம் ஆண்டு தொடங்கி 1218ஆம் ஆண்டு வரை என்பது, ஒரு தரப்பினரின் கருத்து. மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலம் அது.
பவணந்தியார் எவ்வூரைச் சேர்ந்தவர் என்பதில், மூன்று கருத்துகள் இருக்கின்றன. சனகாபுரம் அவரது ஊர் என்பது குறிப்பு. கொங்கு நாட்டில் பெருந்துறையிலிருந்து திங்களூர் செல்லும் வழியில், சனகாபுரம் என்னும் ஊர் இருக்கிறது. அவ்வூர்ப் பெயர் சனகாபுரம் என்பதிலிருந்து மருவி சீனாபுரம் என்று இன்று வழங்கப்படுகிறது. சமண மதத்தவரான பவணந்தியார் அவ்வூரைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் பெருந்துறைக்கு அருகில் இருக்கும் விஜயமங்கலம், கொங்கு நாட்டின் சமண சமயத் தலைநகர் என்று கூறத்தக்கவாறு அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது.
பவணந்தி முனிவரைப் புரந்து காத்தவர், சீயகங்கன் என்னும் சிற்றரசன். குலோத்துங்கனின் ஆளுகைக்குட்பட்டு குறும்பு நாட்டை அம்மன்னன் ஆண்டு வந்தான். கங்கன் என்ற பின்னொட்டு உள்ளதால், அம் மன்னன் மைசூருக்கு அருகிலுள்ள கங்க நாட்டுச் சிற்றரசன் என்று கூறுவோரும் உளர். அதனால்தான் உ.வே.சாமிநாதய்யர், பவணந்தியாரை மைசூருக்கு அருகிலுள்ள நரசிங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்.
தொண்டை நாட்டிலும், சனகாபுரம் என்று ஊர் இருக்கிறது. தொண்டை மண்டல சதகத்திலும் நன்னூல் எழுதிய பவணந்தியார் வாழ்ந்த சனகாபுரத்தைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதன்படி, பவணந்தியார் தொண்டை நாட்டுச் சனகாபுரத்தவர் என்றும் கூறுகிறார்கள்.
பவணந்தியார், தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த புலமை மிக்கவர். அதனால்தான் தமிழுக்கு வடமொழி இலக்கணக்கூறுகளைத் தழுவியவாறு ஓர் இலக்கண நூலை ஆக்க முடிந்தது. மொழி என்பதைப் பதம் என்று கூறுவதிலிருந்து அவருடைய வடமொழிச்சார்பு தொடங்குகிறது.
நன்னூலானது பிங்கல நிகண்டுக்குப் பிற்பாடு தோன்றியது. தொல்காப்பியத்தைப்போல் ஐவகை இலக்கணங்களை எழுதியிருந்தாலும், இப்போது நமக்குக் கிட்டியிருப்பது நூற்பாயிரமும், எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும்தான். பிற அதிகாரங்கள் காலத்தால் அழிந்து போய்விட்டன. பவணந்தியார் எழுதிய நன்னூலால்தான், தமிழ் மொழியின் பகுபத உறுப்பிலக்கணக் கூறுகள் தெளிவாயின.
-மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)