இயற்பெயர்: கி. ராஜநாராயணன்
பிறந்த ஆண்டு: 1922
சொந்த ஊர்: கோவில்பட்டி
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ”நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்” என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். தொண்ணூறு வயதைக் கடந்த கி.ரா. தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.