பதிவு செய்த நாள்

13 டிச 2017
16:52

 “ஒருநாள் பழைய பேப்பர் கடைக்குப் போயிருந்தேன். ஒரு மூட்டை நிறைய புத்தகங்கள் ஒரமா கிடந்தது. என்ன புத்தகங்கள்னு எடுத்துப் பார்த்தேன். எல்லாமே 1920களில் வந்த தமிழின் மிக முக்கியமான இலக்கியங்கள். அதை யாரு அங்கே கொண்டு வந்து போட்டதுன்னு தெரியாது. அதைப் பார்த்ததும் எங்க வீட்டுல அடைக்கலம் கொடுக்கணும்னு தோணுச்சு. அப்படியே காசு கொடுத்து வாங்கிட்டு வந்து அடுக்கி வச்சுட்டேன்.
தெனமும் அதில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். அப்படி படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் அதை நம்ம கையிலேயே வச்சிருந்தா நல்லா இருக்காது. மக்களுக்குப் பயன்படனும்னு யோசிச்சு தொடங்கியதுதான் முகநூலில் பரிவாதினி நூலகம் பக்கம்.” புத்தகங்களின் மீது தீராக் காதலுடன் பேசுகிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

https://www.facebook.com/old.rare.tamil.books.sale.online/
மதுரையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் இவர்.
பழைய பேப்பர் கடைக்குப் போகும்போதெல்லாம் அங்கே கிடைக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிவந்து, அதனுடைய அட்டைப் படத்தை புகைப்படம் எடுத்து முகநூலில் இருக்கும் ‘பரிவாதினி நூலகம்’ பக்கத்தில் பதிவிடுகிறார்.
அந்தப் புத்தகங்கள் தேவைப்படுவோர் இவரைத் தொடர்புகொண்டு, விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். பழைய பேப்பர் கடையில் எவ்வளவு விலைக்கு வாங்கினாரோ, அதே விலைக்கு கூரியர் சார்ஜுடன் சேர்த்து தேவைப்படுவோரிடம் விற்பனை செய்கிறார். தமிழின் கிடைத்தர்கரிய புத்தகங்கள் இவரின் வீட்டின் அறையில் நிறைந்து கிடக்கிறது.
“பழைய பேப்பர் கடைக்கு வர்ற புத்தகங்கள் எல்லாம் அரவைக்கோ இல்லை சிவகாசி பட்டாசு கடைகளுக்கோ போயிடும். அதில் சில புத்தகங்கள் எல்லாம் பதிப்புலேயே இருக்காது. திரும்பவும் எங்கே தேடினாலும் கிடைக்காது.
அப்படிப்பட்ட புத்தகங்களைப் பார்த்தா நம்ம மனசு பதறும் இல்லையா. அதனால எவ்வளோ ஆனாலும் பரவாயில்லைன்னு வாங்கிட்டு வந்துடுவேன். சில நேரத்துல விலை அதிகமா சொல்லுவாங்க, பணம் இருக்காது. அதை அப்படியே வச்சிருக்க சொல்லி, காசு வந்ததும் மொத வேலையா அந்த புத்தகங்களை வாங்கிட்டு வந்துடுவேன்.
அப்படி வாங்கிட்டு வந்த புத்தகங்களோட அட்டை கிழிந்து கந்தலான நிலைமையில இருக்கும். அதை ஒட்டி சரிசெய்து. புத்தகம் வேணும்னு கேட்கிறவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். புத்தகம் வித்துதான் சம்பாதிக்கணும்ங்கிற அவசியம் இல்லைங்க. ஆனா நான் விலை கொடுத்து வாங்கினதை சும்மாவும் தூக்கி கொடுத்துட முடியாது. அப்புறம் அந்தப் புத்தகத்துக்கு மதிப்பில்லாம போயிடும். அதான் நான் பழைய பேப்பர் கடையில வாங்கிட்டு வந்த விலைக்கே கொடுத்திடுறேன். இது புண்ணியமான்னுலாம் தெரியாது. இதை செய்யும் போது, அனாதையாகக் கிடக்கிற குழந்தைங்கள அவங்க பெத்தவங்க கிட்டேயோ இல்ல காப்பகத்திலோ கொண்டு போய் சேர்த்த நிம்மதி கிடைக்குது.” என பேசி முடித்தார் பெருமிதமாக.
புத்தகப் ப்ரியர்களுக்கு இவருடைய முகநூல் பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)