தலைப்பு : பான் கி மூனுன் றுவாண்டா
ஆசிரியர் : அகரமுதல்வன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

பதிவு செய்த நாள்

17 டிச 2017
17:22

 இந்தப் புத்தகத்தின் தலைப்பு உலகம் முழுமையும் புகழ் பெற்ற ஒரு சொல்லாடல். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘றுவாண்டா’ நாட்டில், ஹூடு, டுட்சி இனத்தாருக்கு இடையில் நடைபெற்ற மோதல்களில் அரசு ஆதரவோடு எட்டு இலட்சம் மக்கள், சுட்டும் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்டபோது ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்தவர் பான் கி மூன். அந்த நாட்டில் இன பேதத்தை ஏற்படுத்தியவர்கள் பெல்ஜியம் திருச்சபையினர். இந்தப் படுகொலைகளின் பின்னணியில் பிரான்ஸ் இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. பான் கி மூன் மீதும் குற்றச்சாட்டுகள். அதுதான் இந்த நூலுக்குத் தலைப்பு ஆகி இருக்கின்றது.

பான்கிமூனின் றுவாண்டா தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் ‘பெயர்’ சிறுகதை இளம் அகதி ஒருத்தியின் வாசனையின் வேட்கையைக் கோரி நிற்கும் பெயரில்லா அகதியின் புலன்வேட்கைக்குள் ஊடுருவுகிறது. கள்ளு கதையில் வரும் கதைசொல்லி, கண்டிவீரனையும் தெய்வானையையும் குறியீடாக்கும் இடங்களும், தாய்நாடும் இல்லை, தாய்களுக்கு முலைகளும் இல்லை என பாஸ்பரஸ் குண்டுகளால் போருக்குப் பின்னும் வதைபடும் மக்களின் இயல்பு, பிறழ்வுகளை காட்சிகளில் உதிக்காத வெளிச்சம் போல கலந்தும் புனைந்தும் சொல்லிப் போகும் முறை அடுத்த கதைகளிலும் நீட்சிபெறுகிறது.

‘தீபாவளி’ சிறுகதை, நிலத்தின் மீதும் போராட்டத்தின் மீதும் நீங்காத நம்பிகை கொண்டிருந்தவனின் இழப்புகளுக்குள் நின்று இந்தியாவின் ‘அமைதி’யைக் கேள்வி கேட்கிறது. புத்தனின் அமைதியைவிட கோரமானதாக உங்களுடைய அமைதி இருந்ததேயடா என்று கதிர்காமன் மண்வாரித் தூற்றுகிறார். தான் சந்திக்கும் 14வது இடப்பெயர்வு என்று ஒரு மனிதர் சாதாரணமாகப் புகையும்போது, காலடியின் நிலம் நழுவிவிடாமல் பற்றிக் கொள்ளத்தோன்றும். ‘இந்திராவின் தாய், இவாவையும் இந்திய ஆர்மிக்காரன்தான் சுட்டவன்’ என்ற அந்தக் குற்றச்சாட்டுக்கு வரலாற்றில் வயதாவதேயில்லை.

இந்த தொகுப்பின் தாழம்பூ, முயல்சுருக்குக் கண்கள், கரைசேரா மகள், குடாநாட்டில் எம்.ஜி.ஆர் கடத்தப்பட்டார் ஆகிய மூன்று கதைகளில் திரைக்கதை தன்மையும், காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றிமாற்றிச் சொல்லிச் சொல்லும் முறையும் சுவாரஸ்யமாக அமைகின்றன. காட்டுக்குள் வேட்டைக்குப் போகும் முயல்சுருக்குக் கண்கள்சிறுகதை அவ்வளவு கவிதையாக விரிந்தபோது அதற்குள் அமலன் பேசுகிற இடங்கள் தான் ஈழத்தில் எரிந்து, புதையுண்ட ஆன்மாக்களின் நினைவலைகள்.

 “இந்த நிலம் முழுக்க வெவ்வேறு வேட்டைகளாலானது. எல்லோர் கூடாரங்களிலும் பலியின் கொடி அசைந்து கொண்டேயிருக்கிறது. ஆதவி எங்களை யுத்தமும் குண்டுகளும் வேட்டையாடுகின்றன. கொடூரத்தின் கண்களில்தான் நாம் தவழத் தொடங்குகிறோம். இன்றைக்கு இந்தக் காட்டில் இதுவரை கேட்காத துவக்குகளின் பேரொலி அடுத்த கணத்தில்கூட வெடிக்கலாம். நம்மைச் சுற்றிக் காவல் செய்யும் போராளிகளை மரனம் சுற்றியிருக்கிறது. வளர்ந்த இந்த காட்டுமரங்களைப் போல எங்களின் தியாகம் உயர்ந்திருக்கிறது. ஆதவி! நீ கலங்காதிரு  உன் அப்பாவை இந்த வனத்தின் காந்தள் மலர்கள் ஒவ்வொன்றிலும் பார்” எனும்போது மொத்த தொகுப்பும் சிறப்பிற்குள்ளாகுகிறது. 

-நூல்வெளி. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)