பதிவு செய்த நாள்

21 டிச 2017
11:30
எழுத்தாளர். ஜீ முருகன்

  சிறுகதை, புதினம் , கவிதை, இதழியல், கணினிமென்பொருள் எனப் பல தளங்களில் இயங்கும் ஜீ. முருகன் 1967-ல் திருவண்ணாமலை மாவட்டம் கொட்டாவூரில் பிறந்தவர். செங்கத்தில் பள்ளிக்கல்வியையும், திருக்கழுகுன்றத்தில் கல்லூரியும்ப முடித்தவர். 1990களில் எழுத்தொடங்கிய இவர் பல சிற்றிதழ்களில் இன்றும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

““1986, அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் வசிய எழுத்துக்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த காலமது. திருக்கழுக்குன்றத்தில் டிப்ளமோ படிப்பின் மூன்றாவது வருஷத்தை நிறைவு செய்துகொண்டிருந்தேன். முன்பே ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், லா.சா.ரா. என்று வாசித்திருக்கிறேன். என்றாலும் முதலில் சொன்ன மூவர்களைப் போல இவர்கள் அவ்வளவுக் கவர்ச்சியானவர்களாக எனக்குத் தோன்றவில்லை.
அப்துல் ரகுமானைப் பின்பற்றி கவிதை எழுதவும் கட்டுரைகள் எழுதவும் முயன்று கொண்டிருந்தேன். படிப்பு முடித்து கோவைக்கு வேலைக்குச் சென்றபோது‘விஜயா பதிப்பகம்’ வாயிலாக இலக்கியநூல்கள் அறிமுகம் கிடைத்த்து. கோவை நகருக்கு அது ஒரு பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்குதான் நிகழ், கனவு,கிரணம் போன்ற சிறுபத்திரிகைகளைப் பார்த்தேன்.
 ‘நிகழ்’ விலாசம் நான் தங்கியிருந்த பகுதியிலேயே இருந்ததால் அவ்விலாசத்தைத் தேடிப்போனேன். கி.பழனிச்சாமி’ என்கிற மனிதரை அங்குதான் சந்தித்தேன். அப்போது அவர் முற்றாகப் பார்வையை இழந்திருந்தார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகுதான் ‘கோவை ஞானி’ என்பவர் அவர்தான் என்று எனக்குத் தெரிந்தது.
கோவை ஞானி என்ற அந்தக் கதவுதான் பல கதவுகள் திறக்கக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், பிரசாதம், நடுநிசி நாய்கள், பள்ளம், புளியமரத்தின் கதை போன்ற புத்தகங்களை அப்போதுதான் நான் வாசித்தேன்”.ஒரு தரமான வாசகராக இலக்கிய உலகில் நுழைந்து சிறந்த படைப்பாளியாகப் பரிணமித்திருக்கும் ஜீ.முருகன் இரண்டு புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுளார். 
இவரது கதைகள் “மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளையும், ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை.
உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைபவை. மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இவரது நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன”. என்று இவரது படைப்புகள் குறித்து அவற்றை வெளியிட்டுள்ள பதிப்பாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
“ஜீ.முருகனின் கதைகள் புதிய வடிவங்களுக்காக முயற்சிசெய்பவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜீ.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது.
அவரது கதைகள் ஓர் எதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. ‘கருப்பு நாய்க்குட்டி’ ‘அதிர்ஷ்டமற்ற பயணி’ போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீ.முருகன் வழக்கமான கதைவடிவத்தை அடைவதற்கு முன்னாலேயே கதையை நிறுத்திவிடுதல், கதைக்குள் பிரக்ஞைபூர்வமாக தலையிட்டு பேசுதல் போன்றவற்றையே உத்திகளாக செய்திருக்கிறார்”. என்று ஜீ.முருகன் கதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.ஜீ.முருகன் வனம் என்ற இலக்கிய இதழை 2005 இல் தொடங்கி ஏழு இதழ்கள் வெளியிட்டுள்ளார் . தவிர்க்க முடியாத காரணங்களால் ‘வனம்’ இதழ் அச்சில் வெளிவருவது தற்காலிகமாக நின்று போயுள்ளது. அனைத்து இதழ்களும் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படைப்பாளியாக மட்டுமின்றி சிறந்த விமர்சகராகவும் திகழும் ஜீ.முருகன் ஜீவா என்ற தமிழ் எழுத்துருவை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது சிறுகதை நூலான ‘கண்ணாடி’ மற்றும் மரம் நாவலின் இரண்டாம் பதிப்பை யாவரும்.பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  
ஜீ.முருகன் படைப்புகள்: மின்மினிகளின் கனவுக்காலம் (நாவல்) -1993சாயும்காலம் (சிறுகதை) - 2000கறுப்பு நாய்க்குட்டி (சிறுகதை) - 2002சாம்பல் நிற தேவதை (சிறுகதை) - 2008காட்டோவியம் (கவிதை) - 2009மரம் (நாவல்) – 2009

கண்ணாடி - 2017
நன்றி : இரத்தின புகழேந்திவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)