பதிவு செய்த நாள்

25 டிச 2017
14:19

வீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி பிறந்த  ஊர் நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்கிற கிராமம் . பிறப்பு: மே 30, 1931ம் ஆண்டு மே 30 தேதி பிறந்தார்.

எழுத்தாளர் சுந்தரராமசாமி
எழுத்தாளர் சுந்தரராமசாமி

 

பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். வாழ்க்கை துணைவியார் பெயர் கமலா. தந்தை கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் பர்மா எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். இதனால் இவரது குழந்தைப் பருவமும் அங்குதான் கழிந்தது. தாய்மொழி தமிழாக இருந்தாலும் கேரளாவில் இருந்ததால் மலையாளம் கற்றார். இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்பம் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தது. 

அப்போது கன்யாகுமரி மாவட்டமும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் இங்கும் இவரது கல்வி மலையாளத்திலேயே தொடர்ந்தது. சம்ஸ்கிருதமும் பயின்றார். 18 வயதில்தான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தானே முயன்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினார். இவரது அம்மா மணிக்கொடி இலக்கிய இதழையும், நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும் இவருக்குப் படித்துக் காட்டினார். 21 வயதில் தமிழில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார். 

இவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய ‘செம்மீன்’ நாவலையும் மொழிபெயர்த்தார். 1953 ஆம் ஆண்டு ‘சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ‘தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார், அரவிந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது.  அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும், அவரை எழுத்தாளராக வளர உதவியது அவ்விதழ்.
 'எழுத்து' பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. 1975-ல் ‘நடுநிசி நாய்கள்’ மற்றும் 1987-ல் ‘யாரோ ஒருவனுக்காக’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 1995ல் அனைத்துக் கவிதை களும் அடங்கிய ‘107 கவிதைகள்’ என்ற நூலும் வெளிவந்தன. முதலில் முற்போக்கு யதார்த்தவாத கதைகளையும் பின்னர் அதிலிருந்து மாறுபட்ட கதைகளையும் எழுதினார். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.

1967 முதல் ஆறு ஆண்டு காலம் சொந்த வாழ்வின் நெருக்கடியால் எதையும் எழுதாமல் இருந்தார். அதன் பிறகு புதிய வேகத்துடனும் மேலும் புதிமையான நோக்குடனும் எழுத ஆரம்பித்தார். 1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது. ஜோசப் ஜேம்ஸ்என்ற கலைஞன்- சிந்தனையாளன் பற்றிய கலக வாழ்வை இவர் ஜே ஜே சில குறிப்புகள் என்ற நாவலில் வெளிப்படுத்தி தமிழ் இலக்கிய உலகை அதிர்வலைகளை ஏற்படுத்தினார்,பெரும்பாலும் கம்யூனிச சிந்தனை கொண்ட அத்தகைய இலக்கிய,விமர்சன சூழலில்,கம்யூனிஸ்ட்கள் பற்றியும் மனித இயல்பு குறித்து அந்த நாவலில் இவர் தோலுரித்துக் காட்டினார். 

கட்டுரை கதை கவிதை எதுவாயிருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு சரளமான மொழி நடை இவருக்கு கைகூடியது இவரது சிறப்பம்சம். இவரது பல்லக்கு தூக்கிகள் சிறுகதை உலக இலக்கிய மேதையான பிரான்ஸ்காப்காவின் கதைக்கு ஒப்பானதாக கருதலாம். இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், பத்தி எழுத்து எனப் பலதரப்பட் டவை. இவரது கூர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சூழலின் இலக்கிய அளவுகோல்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
எம் என் ராய், லெனின் ஆகியோரது அரசியல் தத்துவங்களில் ஆழ்ந்த வாசிப்பும் நம்பிக்கையும் கொண்டவர் சுந்தர ராமசாமி. 1988ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. 1998ல் இவரது மூன்றாவது நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. 

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனடா டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்.

பிற்காலத்தில் இவர் மீது பல தாக்குதல் விமர்சனங்கள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் தொடுத்த போதும் எவரையும் கீழ்த்தரமாக நடத்தும், சிந்திக்கும் தன்மைகளை முற்றிலும் களைந்த மனித சுய மரியாதை என்பதை முற்றிலும் மதித்த சமரசமாகாத ஒரு சிறந்த மனிதார்த்தவாதியாக விளங்கியது தான் சுந்தர ராமசாமியின் வாழ்வு. தமிழின் நவீனத்துவ இயக்கத்தை வலுப்படுத்தியவர்களுள் ஒருவர் என்று போற்றப்பட்ட சுந்தர ராமசாமி, 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74வது வயதில் காலமானார்.

விருதுகள் 
குமரன் ஆசான் நினைவு விருது, இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார், கதா சூடாமணி விருது (2004)
படைப்புகள் 
நாவல்கள் :
ஒரு புளியமரத்தின் கதை (1966)
ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள் :
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை :
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
இவை என் உரைகள் (2003)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
மூன்று நாடகங்கள் (2006)
வாழும் கணங்கள் (2005)

கவிதை :
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

மொழிபெயர்ப்பு :
செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

நினைவோடைகள் :
க.நா.சுப்ரமண்யம் (2003)
சி.சு. செல்லப்பா (2003)
கிருஷ்ணன் நம்பி (2003)
ஜீவா (2003)
பிரமிள் (2005)
ஜி.நாகராஜன் (2006)
தி.ஜானகிராமன் (2006)
கு.அழகிரிசாமி.

தொகுப்பு : வேணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)