பதிவு செய்த நாள்

25 மார் 2017
12:43
வல்லிக்கண்ணனின் நடைபயணம்

 

“புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஆலிவர் கோல்ட் ஸ்மித் நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார்.  ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி நடந்து, நடந்தே ரஷ்யாவின் நீள, அகலங்களைக் கண்டறிந்தார்.  இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினி பையில் மூன்றே மூன்று இத்தாலிய காசுகளோடு தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே இத்தாலியின் தலை நகரை அடந்தான்” என்றெல்லாம் வரலாற்றில் வரும் நிகழ்வுகளைப் படித்திருந்த வல்லிகண்ணனும், ‘அவர்களைப் போல நடந்து சென்றே தனக்கென ஒரு பத்திரிக்கைத்துறை வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று தன் மனதளவில் முடிவெடுக்கிறார்.

 1942, மே 24-ம் நாள் இரவு வீட்டிலும் வெளீயிலும் யாருக்கும் தெரியாமலும் யாரிடமும் தெரிவிக்காமலும் ஒரு துணிப் பையில் தன் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ், ஒரு பேனா, சில பேப்பர்கள், இரண்டு சட்டைகள், இரண்டு வேட்டிகள், ஒரு துண்டு இவற்றோடு, பசி வந்தால் சாப்பிடுவதற்கு என்று ஒரு பொட்டலம் நிறைய அவல் முதலியவற்றைச் சேகரித்து ஒரு பையில் யாருக்கும் தெரியாமல் மறைவான ஒரு இடத்தில் வைத்துக் கொள்கிறார்.

 வீட்டில் அம்மா உட்பட்டவர்கள் தன்னைக் காணோமே என்று கவலைப் பட்டுத் தேடி அலையக் கூடாது என்பதற்காக ‘நான் வேலை தேடி வெளியூர் செல்கிறேன்’ என்ற விபரத்தை ஒரு கடிதத்தில் எழுதி, அக்கடிதத்தை வீட்டில் உள்ளவர்கள் கண்ணில் படும் படியான ஒரு இடத்தில் வைத்து விட்டுத் தூங்கினார்.

 மறுநாள் அதிகாலையில் எழுந்து மறைத்து வைத்திருந்த துணிப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு நடக்கத் தொடங்குகிறார்.  நடந்தே சென்னைக்குச் சென்று விட வேண்டும் என்ற வெறியோடு மதுரை ரோட்டில் நடக்கத் துவங்குகிறார்.  சிறிது தூரம் சென்றதும் ஒரு குளம் வருகிறது.  அக்குளத்தின் அருகிலேயே காலைக் கடனைக் கழித்து விட்டு, அக்குளத்திலேயே பல் துலக்கி, குளித்து விட்டு, சிறிது அவலையும் காலை உணவாகச் சாப்பிட்டுக் கொண்டு நடை பயணத்தைத் தொடர்கிறார்.

 சாலையின் இரு மருங்கிலும் மருத மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்ததால் சாலையில் நிழல் பரவி இருந்தது.  எனவே, மத்தியான நேரத்து வெயிலின் கடுமை வரும் வரை சாலை ஓரமாய் நடக்கிறார்.  இடையில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தாகம் தீர தண்ணீரும் குடித்துக் கொள்கிறார்.  நண்பகல் நேரம் ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு பின் வெயிலின் தாக்கம் குறைந்த பிற்பகல் நேரத்தில் மீண்டும் சாலை ஓரமாய் நடக்கத் தொடங்குகிறார்.

 இப்படியே கால் வலியும் களைப்பும் வந்த போது மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு சாலை ஓரமாகவே, மதுரையை நோக்கி நடக்கிறார்.  இப்படியே நடந்து நடந்து மூன்றாவது நாள் மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அடைகிறார்.  அங்குள்ள குளத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவரும் குளத்தில் இறங்கி குளித்து விட்டு மீண்டும் நடந்து மதுரை நகருக்கு ஒரு மைல் வெளியே உள்ள ஒரு கட்டிடத்தை அடைகிறார்.  அது ஒரு அரசு பயிற்சிப் பள்ளியாகும்.  அங்கு, ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் பயின்று வருவது இவரின் நினைவுக்கு வருகிறது.  எனவே அவரைச் சந்தித்து அவரிடம் சிறிது பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, மதுரையில் இருந்து ரயில் மார்க்கமாக காரைக்குடி சென்று விடலாம் என்று அவர் மனம் கணக்குப் போடுகிறது.  ஏனெனில் அதற்கு மேல் நடக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் கால்கள் வீங்கிப் புண்ணாகி விடுகிறது.

 அந்த உறவினரின் பெயர் கோபால். இவருக்கு நண்பரும் கூட.  இவர் நினைத்தது போலவே அவர் பயிற்சிப் பள்ளிக்கு் போகும் நேரத்தில் அவரைச் சந்தித்து விபரம் கூறுகின்றார்.  கோபாலும் நிலைமையைப் புரிந்து கொண்டு ‘வ.க’விடம் சிறிது பணத்தைக் கொடுத்து, “முதலில் சாப்பிட்டு விட்டு வந்து இங்கு ஒரு கட்டிடத்தின் வராண்டாவில் ஓய்வெடுங்கள்.  நான் வகுப்பு முடித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகிறார்.  சாப்பிட்டு மூன்று நாளாகி இருந்ததால் வ.க.வும் கோபாலின் யோசனைப்படியே, அவரிடமிருந்து பணத்தை வாங்கி காலைச் சிற்றுண்டியை ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறாரச் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அந்தப் பயிற்சிப் பள்ளியின் கட்டிட வராந்தா ஒன்றில் படுத்துக் கொள்கிறார்.

 மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தில் ‘வ.க’ படுத்திருக்கும் இடத்திற்கு வந்து அவரின் கால்கள் வீங்கி இருப்பதைக் கவனித்து, “நீங்கள் இன்றைக்கு எங்கும் செல்ல வேண்டாம்.  என்னுடன் விடுதிக்கு வந்து மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு விடுதியின் அறையிலேயே படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.  நாளைக்கு நீங்கள் காரைக்குடி செல்லலாம்” என்கிறார்.  நண்பரின் யோசனையை ஏற்று அன்று முழுவதும் அந்த விடுதியின் அறையிலேயே படுத்து ஓய்வெடுக்கிறார்.  எனவே அவரின் கால் வீக்கம் குறைகிறது.

 மறுநாள் காலையில் நண்பனுடன் சேர்ந்து குளித்து துணி மாற்றிக் கொண்டு சாப்பிட்டு விட்டு, அவர் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து நடந்தே மதுரை ரெயில்வே ஸ்டேசனை அடைகிறார்.  அங்கு காரைக்குடி செல்லும் ரெயில் வரும் வரைக் காத்திருந்து அதில் ஏறி கரைக்குடி செல்கிறார்.

 ‘நடந்தே சென்னை செல்ல வேண்டும்’ என்ற ‘வ.க.’வின் கனவு அவரின் உடல் நிலை காரணமாக மதுரையுடன் நிறைவடைகிறது.

 பிற்காலத்தில் சினிமா இயக்குனராகிப் புகழ் பெற்ற ப.நீலகண்டன் தான் அன்று காரைக்குடியில் இருந்து வெளிவந்த ‘இந்திரா’ என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.  இதழின் வெளியீட்டாளராக பழனியப்ப செட்டியார் இருந்தார்.

 ‘வ.க.’ இந்திரா பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு ப.நீலகண்டனுடன், மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற ஆர்.சண்முகசுந்தரமும், இந்திரா பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான கோ.த.சண்முகசுந்தரமும் இருக்கிறார்கள்.  அவர்களிடம் ‘வ.க.’ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் பயண நோக்கத்தைத் தெரிவிக்கிறார்.

 ‘வ.க.’ வீட்டை விட்டுக் கிளம்பிய அன்று அவரைக்காணாமல் அவரின் தாயார் கலங்குகிறார்.  தற்செயலாக ‘வ.க.’ எழுதி வைத்து விட்டு வந்த கடிதம் அவர் சகோதரர் கோமதி நாயத்தின் கண்ணில் பட்டிருக்கிறது.  உடனே அவர், ‘இவன் பத்திரிக்கைகளில் பணிபுரியும் நோக்கத்தில்தான் சென்றுள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு, தன் வீட்டில் உள்ள பத்திரிக்கைகளின் முகவரிக்கெல்லாம் “இன்ன மாதிரி என் தம்பி பத்திரிக்கையில் பணி புரியும் நோக்கத்தில் வீட்டில் கூட சொல்லாமல் புறப்பட்டு வந்து விட்டான்.  அவன் கையில் காக்காசு கூட கிடையாது.  எனவே அவன் அங்கு வந்தால் அவனை ஆதரித்து அவனுக்கு வேலை கொடுங்கள்.  இல்லை என்றால் அவனை வேறு ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பி வையுங்கள் அதுவும் முடியதென்றால் அவனை திருநெல்வேலிக்கே அனுப்பி உதவுங்கள்.  பணத்தேவைக்கு என் முகவரிக்கு கடிதம் எழுதுங்கள் நான் மணியார்டர் மூலம் உடனே அனுப்பி வைக்கிறேன்” என்ற நீதியில் கடிதங்களை எழுதி இருக்கிறார்.  ‘வ.க’ கரைக்குடி வந்து சேரும் முன்பே ‘வ.க.’வின் சகோதரர் எழுதிய கடிதம் காரைக்குடியில் உள்ள ‘இந்திரா’ பத்திரிக்கை அலுவலகத்தை வந்து சேர்ந்திருந்தது.  எனவே, ‘வ.க.’ ஒன்றும் சொல்லாமலேயே அவரின் நிலமை அங்கிருந்தவர்களுக்குப் புரிந்து விடுகிறது.

 அது யுத்த காலம், காகிதங்களுக்கும் கடும் கிராக்கி, அத்தோடு பத்திரிக்கைகளின் விற்பனையும் மந்தமாக இருந்தது.  ப.நீலகண்டன் “இப்போதைக்கு இந்திரா பத்திரிக்கைக்கு ஆள் தேவையில்லை!  ஏற்கனவே இருக்கிற ஆட்களையே கழற்றி விட்டு விடலாமா” என்ற நிலமைதான் இருக்கிறது.  எனவே இதே ஊரில் உள்ள ‘சக்தி’ மாத இதழின் அலுவலகம் சென்று கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி துணைக்கு ஆர்.சண்முகசுந்தரத்தையும் அனுப்பி வைக்கிறார்.  பிற்காலத்தில் “நாகம்மா வா” என்ற நாவலை எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.சண்முக சுந்தரம் தான் அவர்.

 ‘சக்தி’ பத்திரிக்கையின் ஆசிரியராக வை.கோவிந்தன் இருந்தார்.  உதவி ஆசிரியராக ‘தி.ஜ.ர.’ என்று அழைக்கப் படும் தி.ஜ.ரங்கநாதன் இருந்தார்.  சக்தி பத்திரிக்கையும் அப்போது தள்ளாட்டத்தில் தான் இருந்தது.  எனவே அங்கும் வேலை காலி இல்லை ‘வ.க’வின் சகோதரர் எழுதிய கடிதம் சக்தி பத்திரிக்கைக்கு வந்திருந்தது.  எனவே, தி.ஜ.ரா., வ.க.வின் சகோதரர் கோமதி நாயகத்திற்கு வ.க. “இங்கு வந்திருந்த விபரத்தையும், இங்கு பத்திரிக்கைத் துறையில் வேலை காலியில்லை எனவே அவரை திருநெல்வேலிக்கே திரும்ப அனுப்பி விடுகிறோம், அது வரை அவர் இங்கே தங்கி இருப்பார்.  அவரின் வழிச்செலவுக்குத் தேவையான பணத்தை அவர் பெயருக்கு ‘சக்தி’ காரியாலய முகவரிக்கே அனுப்புங்கள்” என்று கடிதம் எழுதுகிறார்.

 சக்தியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரவநல்லூர்க்காரர், சுந்தரம் என்பவர் விற்பனைப் பிரிவில் பணி புரிந்து வந்தார்.  அவர் காரைக்குடிக்கு அருகில் உள்ள நேமத்தான்பட்டியில் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கும் வீ.தி.சொக்கலிங்கம் என்பவருடன் வ.க.வை தங்க வைய்த்தார்.  வீ.தி.சொக்கலிங்கம் என்பவருக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது.  அவரும் வீரவநல்லூரைச் சேர்ந்தவர்தான்.

 ஒரு வாரம் கழிந்து திருநெல்வேலியில் இருந்து ‘வ.க.’ பெயருக்கு மணியார்டர் வருகிறது.  அது வரை நேமத்தான்பட்டியில் உள்ள ஆசிரியருடன் தங்கிக் கொண்டு படிப்பது, எழுதுவது என்று பொழுதைக் கழிக்கிறார்.

 மணியார்டர் மூலம் பணம் கைக்கு கிடைத்த பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, திருநெல்வேலிக்கு பஸ்ஸில் செல்கிறார்.  “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணக்க...” என்ற கதையாக தோல்வியுடன் வ.க. திநெல்வேலி திரும்பினாலும், சொல்லாமல் பிரியாமல் சென்ற மகன், “நலமாக வீடு தேடி வந்து விட்டானே!” என்று அவரின் தாய் அகமகிழ்கிறார்.
- கழனியூரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)