பதிவு செய்த நாள்

11 ஜன 2018
11:20

    நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை நூல் மொத்தமும் காதல் கடிதங்களால் ஆனது. அவை அத்தனையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதை அரங்கனுக்கு எழுதியது. சக ஆண்டு 1375 பிரமோதூத--பங்குனியில் ஆரம்பித்து, நள வருட 1376ல் பிரஜோர்பதி ஆனியில் முடிவடைகிறது இந்தக் கடிதப் போக்கு வரத்து.

ஆண்டாள் எழுதும் 39 கடிதங்களும் அதற்கு அரங்கன் எழுதும் 38 பதில்கடிதங்களும் அவர்களுக்குள்லான ஊடலும் கூடலும் காதலும் கவிதையும் கெஞ்சலும் கொஞ்சலும் மிரட்டலும் பணிதலும் என ஏகக் களேபரமானவை. ஆண்டாளின் பாடல் அறிந்த நமக்கு இந்தக்கடிதங்கள் வேறு களத்திற்கு இட்டுச்செல்பவை. இந்தக் கடிதம்விடு தூதில் கோதையில் கிண்டல் அதிகம். “உனக்கோ கால்வலி அக்கைக்கோ கைவலி” என்று கால்பிடிக்கிற மகாலஷ்மியிலிருந்து மாய கண்ணன் வரை சாடலும் எள்ளலும் ஏராளம்
அதுவே, சாமானியப் பெண்ணின் வெள்ளந்திக்குரலாய் ஒலித்து நம்முள் இறங்குது படு தாராளம்! இந்தத் தொகுப்பில் படித்து ஆனந்தித்தது அரங்கன் ஆண்டாளின் புலமையை கவித்திறத்தை மெச்சும் இடங்கள் பாசுரங்களின் தனித்துவத்தை ஒத்திருப்பது கடித ஆசிரியர் தன்னை ஓர் ஆய்ச்சியராகவே எண்ணிச் சூடிக்கொண்ட தருணங்களாகின்றன. ஒரு பெண்ணாய் ரசித்து கர்வம் கொள்ள வைக்கிற கற்பனையே ஆனாலும், கண்ணனே ரசிப்பதும் பிரமிப்பதுமாய் வருகிற வாசகங்கள் மகிழ்ச்சியூட்டுவன.

ராஜாமகள்
ராஜாமகள்

 புகழ்ச்சிக்கு மயங்காத மனமும் உண்டோ? ஆண்டாளின் காதலுக்கு புதுமுறையில் கடித வடிவில் உருவம் தந்த ராஜாமகளின்  “இப்படிக்கு கோதை” நூலில்  ஸ்ரீவில்லிப்புத்தூர்கோயில் வரைபடம், ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியின் பாடல் வடிவம், அவளுக்கு எழுதின ஜாதகம், எனப் பல செய்திகள் மறைந்திருக்கின்றன. மொத்த நூலும், படிக்கப் படிக்கத் திகட்டாத அச்சு வெல்லச் சொற்களாலானவை.  
இப்படிக்கு கோதை நூலின் ஆசிரியர் ராஜாமகள், ஆண்டாள் குறித்து திரைப் பாடலாசிரியர் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை குறித்துத் தெரிவித்ததாவது, “திருவரங்க கோபுரம் காக்க அக்கோபுரத்திலிருந்தே கீழே விழுந்த வெள்ளையம்மான் என்னும் தேவதாசியை அறிவீரா? ஆட்சி மாற்றத்தாலும், சூழ்நிலைகளாலும் மாற்றார் வசப்பட்ட திருவரங்கத்தைக் காத்தது அம்சலேகா என்னும் ஒரு தாசிதான். இதற்கு பிராயச்சித்தமாய் தேவதாசிகள் இறந்த போதெல்லாம் கோவில் மடப்பள்ளியிலிருந்து வாய்க்கரிசியும், கொள்ளியும் போடப்பட்டது குறித்து கேள்வியேனும் பட்டதுண்டா கவிப்பேரரசு வைரமுத்து? ஆண்டாள் துளசிவனத்திலே கண்டெடுக்கப்பட்டாள். அவள் தன் பிறப்பின் மூலத்தை ஆராய்ந்துகொண்டு இருக்கவில்லை. கண்டெடுத்த பெரியாழ்வாரும் அவள் பிறப்பைக் குறித்து ஆராயவில்லை. வளர்த்த தாய் விரஜையும் ஆராயவில்லை. அவளைப் போற்றும் நானோ அன்றி அவர்களோ ஆராயவில்லை. கண்ணாலங் கோட்டித்துக்கொண்ட அரங்கனும் ஆராயவில்லை. அவரவர் தாய் தன் குழந்தைக்கு யாரைச் சுட்டிக்காட்டுகிறாளோ அவனையே தந்தையென்று ஏற்றுக்கொள்கிறது. அதுவே வாழ்வாதாரத்தின் நம்பிக்கை. நாங்கள் வைத்தது அவள் மேல் நம்பிக்கை. வைரமுத்து வைத்தது அவநம்பிக்கை.” என்றார்.

தன்னுடைய முப்பது வயதுகளில் திருப்பாசுரம் முழுவதும் காணாப்பாடம் செய்து, தமிழை ஆண்டாளின் பாசுரங்களை அதன் வடிவம் மாறாமல், அதாவது பச்சை மலையாளத்தில் சமஸ்கிருதம் கலவாமல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர் குளச்சல் மு.யூசுப். அவர் தன்னுடைய அனுபவங்களைக் குறிப்பிட்டதாவது..

“எம்.எல். வசந்த குமாரியின் குரலில் முப்பது பாசுரங்களையும் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன். மார்கழித் திங்களில் மதிநிறைந்த புலர் காலையில், பாணர்கள் இசைத்துச் செல்லும் பாசுரங்களைக் கேட்பதற்காக, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொள்வேன்! நான் அறிந்தவரையில், அதாவது படித்தறிந்த வகையில் ஆண்டாள், ஆழ்வாரின் வளர்ப்பு மகள்தான். இதை வெள்ளைக்காரன் ஒருவன், ஆய்வு செய்து வேறு வகையில் கருத்துச் சொல்லியிருக்கலாம்; அந்தக் கருத்து இன்றைய காலகட்டத்தில் தவறான பொருள் தருவதாகவும் இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தின் பொருள் அதுவல்லவே?  மேலும், தமிழின் பக்தி இலக்கியங்கள் குறித்து நாம் பேசிவரும் பெருமைகள் அனைத்தையும் குலைத்துத் தள்ளி விடுவாரோ என்ற அச்சம் மேலிடுகிறது. வையத்து வாழ்விர்காள்! நாமும், நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ?” என்றார்.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)