பதிவு செய்த நாள்

12 ஜன 2018
11:17
தமிழ் நாவலர் சரிதை

 ங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் பற்றிப் பல அரிய விவரங்கள் கிடைக்கின்றன. அந்நாட்களில் இங்கே வளர்ந்த தாவரங்களில் தொடங்கி மன்னர்களின் ஆட்சிமுறை, மக்கள் பின்பற்றிய நெறிகள், தொழில்கள், உணர்வுகள், நம்பிக்கைகள் என்று பலவற்றை அறிகிறோம்.

அதன்பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் மிகச்சிறப்பான தமிழ்ப்பாடல்கள், காவியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றின் வழியே நம்முடைய வரலாற்றை ஓரளவு நன்கு அறிந்துகொள்ளலாம்.

ஆனால், இந்தப் பாடல்களையெல்லாம் பாடியவர்கள் யார்? அவர்களைப்பற்றி நமக்கு என்ன தெரியும்?

சில நூற்றாண்டுகளுக்கு முன்னே ஒரு புலவர் இப்படிச் சிந்தித்திருக்கிறார்; பல முன்னோடிப் பாவலர்களைப்பற்றிய விவரங்களைத் தொகுத்திருக்கிறார். அவர்களுடைய சிறப்பான பாடல்கள், அவை எந்தச் சூழ்நிலையில் பாடப்பட்டன என்பதுபோன்ற கூடுதல் விவரங்களையும் சேர்த்து நூலாக்கியிருக்கிறார்.'தமிழ் நாவலர் சரிதை' என்ற அந்த நூலை எழுதியவர் யார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அதன்வாயிலாக, இறையனார், நக்கீரர், கபிலர், திருவள்ளுவர், ஔவையார், கம்பர், தொல்காப்பியர், சயங்கொண்டார், புகழேந்தி, காளமேகம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பாவலர்களைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்நூல் ஆரம்பத்தில் பலரால் பதிப்பிக்கப்பட்டிருந்தது. தமிழ்க்கல்வி பயிலும் பலருக்குப் பாடமாகவும் இருந்தது. ஆனால், இதில் முழுமையான ஆராய்ச்சிக்குறிப்புகள் இல்லாததால் இதைப் படிப்பதில் பல சிரமங்கள் இருந்தன.

1940களில் அறிஞர் ஔவை சு. துரைசாமி இந்நூலின் திருத்திய பதிப்பொன்றை வெளியிட்டார். இதற்காகக் கல்வெட்டுகள், பிற வரலாற்று நூல்களை ஒப்பிட்டுக் குறிப்புகளைச் சேர்த்துச் சிறப்பாக்கினார் அவர். இப்பதிப்பு வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

எனினும், 'தமிழ் நாவலர் சரிதை'யில் இடம்பெறாத புலவர்கள் ஏராளம். அதில் இடம்பெற்றுள்ள புலவர்களைப்பற்றியும் இன்னும் ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்து கூடுதல் விவரங்களைச் சேர்க்க இடமிருக்கிறது. இப்பணிகளைப் பின்னர் பல அறிஞர்கள் செய்தார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன்பிறகும், பலர் விடுபட்டுள்ளார்கள்.

அவ்வளவு ஏன், 'தமிழ் நாவலர் சரிதை'யை எழுதியவரைப்பற்றியே நம்மிடம் விவரங்கள் இல்லையே!

இன்றைக்குத் தமிழில் ஆண்டுதோறும் சில ஆயிரம் புதிய நூல்கள் வெளியாகின்றன. அவற்றைப் பிரசுரிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கையே நூற்றுக்கணக்கில் நீள்கிறது. இவைதவிர தனிப்பட்டமுறையில் தங்கள் நூல்களைத் தாங்களே பதிப்பிப்போரும் அதிகம். பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இணையத் தளங்களில் எழுதுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், 'தமிழ் நாவலர் சரிதை' போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். நம்முடைய மொழிக்கு ஆழமான, அழகிய படைப்புகளைத் தந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கை விரிவாகப் பதிவுசெய்யப்படவேண்டும். அது பிற மொழிகளுக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும். அப்போதுதான் நாம் ஓர் அறிவார்ந்த சமூகமாவோம், பழைமையின் அடித்தளத்தில் புதுமைச்சிந்தனைகளோடு முன்னேறுவோம்.

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)