நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ள ஒன்பது இந்திய மொழிச் சிறுகதைகளில் தமிழ் சிறுகதைகளைத் தொகுத்தவர் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி’ குருஸ். புதிய தலைமுறை எழுத்து (நவலோகன்) என்ற தலைப்பில் உருவான இந்நூல் குறித்து ஜோ டி’ குருஸ் கூறியதாவது,
“தமிழர் வாழ்வில் ஊடாடும் அறம்: வரலாற்றையும், கலாச்சாரத்தையும் புவியியல்தான் முடிவு செய்கிறது என்று ஒரு கூற்று உண்டு. இந்தக் கருத்தில் நான் முரண்படுகிறேன் காரணம் நாகரீகங்கள் மாறலாம் மண் சார்ந்து, சூழல் சார்ந்து நடக்கும் நிகழ்வுகள் மாறலாம் ஆனால் மனித இயல்புகளும் அவர்தம் குண நலன்களும் எப்போதும் உன்னதமாகவே இருக்கிறது. அன்புதான் அனைத்தையும் வழி நடத்துகிறது. இது நல்லது, இது கெட்டது எனப் பிரித்துப் பார்க்க நாம் யார்?
தமிழர் காலத்தால் முந்தையோர், பழையோர், பண்டையோர்… காணக் கிடைக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வாழ்வில் அறம் சார்ந்த நம் முன்னோரின் வாழ்வே வெள்ளிடை மலையாய் பிரகாசிக்கிறது. மதமாச்சரியங்களைக் கடந்து நோக்கினால் தமிழரின் வாழ்வு ஒரு கலாச்சார முழுமையும், முதன்மையும் கொண்டது என்பது புரியும்.
உணவில், உடையில், உறைவிடத்தில், பழக்க வழக்கத்தில் பண்பாடு காத்தவர் தமிழர். தேசிய புத்தக நிறுவனத்தாரின் புது எழுத்து – தமிழ்ச் சிறுகதைகளில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளின் படைப்பாளிகளில் பலரோடு எனக்கு நேரடி தொடர்பு இல்லை. ஆனால், அவர்தம் பாடுபொருளும், கதைமாந்தர்களும் என் போன்றோரை வெகுவாய் ஈர்த்ததன் விளைவே அவர்களின் படைப்புகள் இந்த தொகுப்பில் இடம்பெறுவதற்கான காரணம்.
சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் பழம் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி ஒன்றிற்கு சென்றிருந்தேன். கலாச்சாரச் சின்னங்களாய் இருக்கும் இந்தப் பழம் பொருட்களைத் தேடிச் சேகரிப்பதில் அலாதி பிரியம் எனக்கு… அங்கு மூலையில் இருந்த ஒரு மண் கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அதன் அருகே சென்று மெய் மறந்து நின்றிருந்தேன். நான் வெகு நேரம் அங்கே நின்றிருப்பதைப் பார்த்த கடை உரிமையாளர் அனக்கமில்லாமல் என்னருகே வந்து கேட்டார்,
“இந்தக் கடிகாரம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?’’
“ஆனால் விலை அதிகமாக இருக்கிறதே.’’
“உங்களை யார் வாங்கச் சொன்னது.’’
“…’’
“அதைத் தொடவேண்டும் போலிருக்கிறதா.’’
“ஆம்.’’
“கண்களை மூடி அதைத் தொட்டு உணருங்கள்’’
நான் கண்களை மூடியபடி அந்த மண் கடிகாரத்தை தொட்டபடியே நின்றிருந்தேன். மெல்லிய குரலில் அவர் கேட்டார்,
“இந்தக் கடிகாரத்தை ரசித்து, ரசித்து வடித்தவனின் இருப்பை இப்போது உணர்கிறீர்களா?’’ ‘’உணர்கிறேன் நண்பரே.’’
“இதைப் பயன்படுத்தியவர்களோடு தொடர்பு ஏற்படுகிறதா?’’
“ஏற்படுகிறது நண்பரே. உள்ளமெல்லாம் பூரிப்பால் அக்களிக்கிறது’’
இந்தத் தொகுப்பிற்காகத் தமிழகத்தின் இளம் படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தொகுக்க நேர்ந்தபோதும் இதே பரவசம் என்னுள்… பல்வேறு நிலப் பரப்பின் கதைமாந்தர்கள் ரத்தமும், சதையுமாக என்னருகே வந்து என் தோளோடு தோளுரசித் தங்களது இருப்பை, பண்பாட்டை எனக்குச் சொல்லாமல் சொல்லிச் சென்றார்கள். படைப்பாளர்களுக்கு நன்றி.
முடிந்தவரை அனைத்து நிலப்பரப்பின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. போதிய கால அவகாசம் இல்லாமை என்ற சவாலை எதிர்கொண்ட போதிலும், இது போன்றதொரு அரிய வாய்ப்பில் இளம் தமிழ் படைப்பாளர்களை இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்ற உந்துதலே, இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றது.
ஒரு வாசகன், சரியான தளத்தில் இந்தக் கதைகளுள் ஊடாடும் அறத்தை, வாழ்தலின் உணர்தலை தரிசிப்பானேயானால் அதுவே இம் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பேன். வாய்ப்பளித்த தேசிய புத்தக நிறுவனத்தாருக்கு நன்றி. -வாஞ்சையுடன், ஆர். என். ஜோ டி குருஸ் .”
புது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள் நூல் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ம்ருதி இராணி அவர்களால் வெளியிடப்பட்டு, சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.