பதிவு செய்த நாள்

19 ஜன 2018
10:02

நம்மூரில் மாடுகளுக்கு எவ்வளவு வரலாறு இருக்கிறதோ அதே அளவு வரலாறு எருமைகளுக்கும் இருக்கின்றது. நிரை என்றால் மாடுகள் மட்டுமன்று, எருமையும் தான் என்று பொருள் சொல்கிறது நெடுநல்வாடை. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால பக்தி இலக்கியங்கள் வரை, எருமைகள் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அன்றைய சேரநாட்டின் பெரும்பகுதியான இன்றைய கேரளாவில் எருமைகளைக் கொண்டே உழவுப்பணிகளைச் செய்துவந்தார்கள். 

நம்மூர் ஏறு தழுவுதலைப் போல எருமை பூட்டிய சேற்றுழவுப் போட்டிகள், ஆவணி ஓணத்தில், கேரளத்தின் மரபுசார் விளையாட்டுகளில் ஒன்று. மருதநிலத்தின் (வயலும் வயல் சார்ந்த இடமும்) தவிர்க்கமுடியாத குறியீடாக எருமைகள்தாம் இருந்திருக்கின்றன. தாம் ஈன்ற கன்றை மற்ற விலங்குகளுக்கு இரையாகப் பறிகொடுத்துவிட நேரிடும் காட்டெருமைகளுக்குத் தானாகவே பால் சுரந்து மடியும், பால் காம்புகளும் வீங்கிவிடும்போது அவைகள் கனைத்து அலறும் சத்தம் காடு முழுதும் எதிரொலிக்குமென்றும், சிலசமயங்களில், மடியிலிருந்து வழிந்த பாலானது பாறைக்குழிகளில் தேங்கித் தயிராகி நிற்குமென்று என் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

மாட்டின் பாலிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துகளோடு ஒப்பிடுகையில் எருமைப்பால் எவ்விதத்திலும் குறைந்தது அன்று. சுண்ணாம்பு (Calcium), கொழுப்பு (Fat) உள்ளிட்ட திண்மங்கள் நிறைந்ததால் எருமைப்பால் அடர்ந்து (கெட்டியாக) இருக்கும். ஆனால், மாட்டுப்பாலில் மேற்சொன்ன பொருட்கள் குறைவாக இருப்பதால் கெட்டியாக இல்லாமல் நீர்த்துத்தான் இருக்கும். எருமைத்தயிரின் கெட்டித்தன்மை மாட்டுத்தயிரில் இல்லை. எருமைத் தயிரிலிருந்து எடுக்கும் வெண்ணெய் வெண்மையாக நீர் பொதிந்த குழைமமாக (Creamy) இருப்பதிலிருந்தே அதில் நீரில் கரையவல்ல புரதங்கள் (Hydrophilic Proteins) அதிகமென்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதோடு, மாட்டுப்பாலோடு ஒப்பிடும்போது, எருமைப்பாலில் கொழுப்பு அதிகமென்றாலும், உடலுக்குத் தீங்கிழைக்கும் கொலஸ்ட்ரால் குறைவு என்கிறது ஆய்வுகள்.

 மாட்டுத்தயிரிலிருந்து எடுக்கும் வெண்ணெய் சற்றுக் கடினமாக வெளிர்மஞ்சள் நிறத்தில், பந்துபோல உருட்டும்படியாக இருக்கும், காரணம் நீரில் கரையாப் புரதங்கள் (Hydrophobic Proteins) அதிகமாக இருப்பதால் தான். 

மாடுகளைப்போல எருமைகளுக்குத் தனியே குடில்கள் அமைக்கவேண்டியதில்லை. மரத்தடிகளிலேயே பராமரிக்க முடியும். நம் மண்ணுக்கான மாடுகள் வெப்பம் தாங்க வல்லவை. ஆகவே நாட்டு மாடுகளின்/காளைகளின் கொம்புகளுக்கு வேதிப்பொருளாலான வண்ணம் பூசினால் தீங்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிந்து, ஜெர்சி உள்ளிட்ட கலப்பின மாடுகளின் கொம்புகளுக்கு வேதி வண்ணங்கள் ஒத்துக்கொள்வதில்லை. அதுபோலவே, எருமைகளின் தோல் நிறம் கருமை என்பதால் வெப்பம் தாங்கவொண்ணாதவை. ஆகவே, எருமைகளின் கொம்புகளுக்கு, வேதி வண்ணங்களைத் தவிர்த்து, குளிர்ச்சி தரும் வண்ணங்களான சுண்ணாம்பும், காவிக்கல்லும் பூசப்படுகிறது. 

மேய்நிலங்கள் ஈரமாக இருந்தாலோ, நீர் வற்றிய குளங்களின் சேற்றில் நின்றுகொண்டோ மாடுகள் மேயாது. ஆனால் எருமைகள் மழை வெயிலென்று எல்லாக் காலத்துக்கும் ஏற்றாற்போலத் தங்களை மாற்றிக்கொள்பவை, ஆகவே வறண்ட மண்ணிலும், தண்ணீரில் நின்றுகொண்டும் மேய்ந்துகொள்ளும். 

மாடுகளுக்கு எவ்விதத்திலும் மாற்றுக்குறையாத எருமைகள் எப்போது முதல் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கக் கூடுமென்று தெரியவில்லை. என் சிறுவத்தில் எங்கள் ஊர்ப்புறங்களில் ஒவ்வொரு ஊருக்கும் நூற்றுக்கணக்கில் எருமைகள் வளர்த்த நிலைபோய், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, இன்று எருமைகளே இல்லை எண்ணுமளவுக்கு, வளர்ப்பாரின்றி எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டாகக் குறைந்துவிட்டன. நம் மண்ணுக்கே உரிய சில பாரம்பரிய மாட்டினங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதைப் போல, பாரம்பரிய எருமை இனங்களை நாம் பாதுகாக்காமல் தவறிவிட்டோம் என்பதே உண்மை. 

அதற்காகவோ என்னவோ நம் பெற்றோர் தலைமுறை கல்லூரி (கால்நடைக் கல்லூரிகளில் கலப்பினம் செய்யப்பட்ட) எருமைகளை வளர்க்கத் தலைப்பட்டனர். இந்தத் தலைமுறையில் அதுவும் இல்லை. இன்றைக்கு இருக்கும் முர்ரா, பந்தர்புரி, நாக்பூரி, நிலிரவி, கோதாவரி, பாதவாரி, ஜப்பரப்பாடி, சுருட்டி, தோடா போன்ற வடஇந்திய எருமை இனங்கள் தாம் (இவற்றில் கலப்பினங்களும் அடங்கும்) இந்தியாவெங்கும், தமிழ்நாட்டில் ஆங்காங்கு வெகுசில இடங்களில் வளர்க்கப்படுகின்றன. 

பாரம்பரியமாக, நம் மருதநிலத்தில்  வாழ்ந்த எருமை இனங்கள் இன்று எதுவுமே இல்லை என்றுதான் தரவுகள் கூறுகின்றன. அந்த எருமையினங்கள் யாவை என்றே தெரியாது அழிந்தே போய்விட்டன. அதோடு, அவற்றின் பண்புநலன்கள் பற்றிய குறிப்புகளும் இல்லை என்றே நினைக்கிறேன். எருமை இனங்கள் அழிந்துபோனதற்குப் பராமரிப்புக் காரணங்கள்தாம் என்று கூறப்பட்டாலும், எருமைகள் அதிகம் பால்கொடுப்பவை என்பதை மறுக்க முடியாது. எருமைப்பாலின் விலையும் அதிகம். ஆனாலும், எருமைகள் புறக்கணிக்கப் படுகின்றன. 

எருமைகளின் பால் கோவில்களில் பூசைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. எருமை இனங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமேயின்றி, இனவளர்ப்புக்கு இன்றியமையாத போத்தெருமைகளை (எருமைக்கடா) சில பெண்தெய்வக் கோவில்களுக்குப் பலியிட்டுக்கொன்று, கிணறு தோண்டிப்புதைக்கும் மூடப்பழக்கம், இன்றும் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

இன்று மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஆந்திரத்தில், தெலுங்கானாவில் எருமைகளை அதிகம் வளர்க்கின்றார்கள். அங்கு எருமைப்பண்ணைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆந்திராவில் மோர் கிடையாது. அதைச் சள்ள, அதாவது நீர்த்துப் போனது என்று தெலுங்கில் கொச்சையாகச் சொல்வார்கள். தெலுங்கு மக்கள் ஆசையாக உண்ணும் காரத்தின் வீரியத்தை எருமைத்தயிர்தான் கட்டுப்படுத்துகிறது. நான் கரீம்நகரில் ஆசிரியப்பணி செய்து கொண்டிருக்கும்போது, ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான எருமைகளை மேய்ப்பர்கள் கீழ்-மாநாயர் அணையின் அருகிலிருக்கும் வயல்வெளிகளில் மேய்ப்பதற்காக ஓட்டிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

வாரங்கல்லிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கரீம்நகருக்கு பேருந்தில் பயணிக்கும்போது நூற்றுக்கணக்கான எருமைப் பண்ணைகளைப் பார்த்துக்கொண்டே செல்லலாம். ஊருக்கு வரும்போது வாரங்கல்லில் இருபூர்த்தி ஏறியமர்ந்தால் தமிழ்நாட்டு எல்லை வரும்வரை, அங்குள்ள வேளாண்மை, பயிர்கள், நீர்வளம், உப்புக்களங்கள், கால்நடைகள், எருமைப் பண்ணைகள் என்று பார்த்துக்கொண்டே வருவேன். 

இன்று எருமைப் பண்ணைகள் அருகிவிட்டன என்று என் மாணவர்கள் சொல்கிறார்கள். என் சிறுவத்தில் எருமைகளைத்தாம் வளர்த்துவந்தோம். பொங்கலன்று எருமைகளுக்குத்தான் பொங்கலை ஊட்டி வழிபட்டோம். இன்று எங்களிடத்தில் பத்து உருப்படிகள் மாடுகள் கன்றுகள் இருக்கின்றன. எருமைகள் இல்லை. காலையும் மாலையுமென, ஒரு நேரத்துக்கு 8 படிகள் பால்கறந்த காரெருமை யொன்றை விற்றுத்தான் நான் கல்லூரிக்குப் போனேன். நாட்டு மாடுகள் வளர்ப்போம் என்று துணிந்த இளவல்கள் எருமையையும் வளர்க்கலாம். 

சிந்தித்துப் பார்த்தால், இவற்றுக்கெல்லாம் எருமையின் நிறம் கறுப்பு என்பதாலும், வெள்ளை மீதான வீண் மோகத்தாலும், மகிஷாசுரன் (எருமைத்தலையன்) போன்ற கதைகளாலும் தானன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்? சற்று ஆழ்ந்து சிந்தித்தால் புரியும், நம் வாழ்வியலிலிருந்து மருத நில எருமையினங்கள் சான்றுகளின்றி அழிந்து போனதெவ்வாறு என்று. 
-தேவனூர்புதூர் முனைவர். செ. அன்புச்செல்வன் வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)