பதிவு செய்த நாள்

25 ஜன 2018
09:00

சிலி நாட்டில் சான்டியாகோ நகரில் கவிஞர் நிகோனார் பர்ரா, நேற்று, ஜனவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை, தனது 103வது வயதில் மத்திய கடற்கரைக் கடலோரம் இருந்த அவரது வீட்டில் இறந்தார்.  

சிலியின் ஜனாதிபதி மிக்கேல் பாச்சிலேட் தனது இரங்கல் குறிப்பில் “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக்குரல் அவருடையது’ என்று புகழஞ்சலி செலுத்தினார். தேசிய கோடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

1914 செப்டம்பர் 15ம் நாள் பிறந்த இவரது அப்பா ஒரு இசை ஆசிரியர். அம்மா ஒரு நாட்டுப்புற இசைப் பாடகி. எட்டுக் குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்த இவரது சகோதரி வயலேட்டா சிலியில் புகழ் பெற்ற நாட்டுப்புற இசைப் பாடகி. இவரது சகோதரர் ராபர்ட்டோவும் ஒரு பாடகர். 
சான்டியாகோவில் மாணவராக இருந்த போது 1937ல் “ஒரு பெயரில்லாத பாடல் புத்தகம்” என்னும் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அச்சமயம் நிலவிய அலங்கார மொழிநடையை உடைத்து நேரடியான சாதாரணப் பேச்சுவழக்கில் கவிதைகளை முதன்முதலாக எழுதினார்.  

ஆக்ஸ்ஃபோர்டில் பிரபஞ்சவியல் (cosmology) படித்துக் கொண்டிருந்த போது தனது புகழ் பெற்ற “கவிதைகளும் எதிர் கவிதைகளும்” தொகுப்பை 1954ல் வெளியிட்டார். அமெரிக்கக் கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க் மற்றும் சிலி எழுத்தாளர் ராபர்ட்டோ பொலோனா ஆகியோரின் நண்பர். The Roller Coaster (1962), Poet to fight Baldness (1993) ஆகியவை இவரது பிற புகழ் பெற்ற தொகுப்புகள். 

பௌதிகத்திலும் கணிதத்திலும் நிபுணராக இருந்த இவரது கவிதைகளில், ஆங்கிலத்தில் கருப்பு நகைச்சுவை என அழைக்கப்படும் வருத்தத்துடன் கூடிய எள்ளலும் பகடியும் நிறைந்திருந்தன. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டையைத் தகர்த்தெறிந்தார். 

நிகானோர் பர்ராவுக்குத் தமிழ்க் கவிதை உலகம் சார்பில் எனது அஞ்சலிகள்.

-கவிஞர். சமயவேல் கருப்பசாமிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)