பதிவு செய்த நாள்

16 ஜூன் 2017
14:50

 தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி. படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும் சொல்லப் போனால் மூன்று தலைமுறைகளாக இலக்கியப் பரிச்சயம் கொண்ட குடும்பம் தொ.மு.சியுடையது. தாத்தா சிதம்பரத் தொண்டைமான் புகழ் பெற்ற அறிஞர். அவர் பாடிய நெல்லைப்பள்ளு, ஸ்ரீரங்க நாதர் அம்மானை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். 

வைர வியாபாரியாக செல்வச் செழிப்புகளோடு வாழ்ந்த இவர் தன் இறுதிக் காலத்தில் வறுமையுற்றார். ஆனாலும் தன் பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தை வாரி வழங்கியதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. தொ.மு.சியின் தந்தை  ‘தொண்டைமான் முத்தையா’ இயல்பிலேயே சிறந்த ஓவியர். கவிஞர், மொழிப் பெயர்ப்பாளர், புகைப்படக் கலைஞராகவும் கூட பரிமளித்தவர். அவருடைய ஆங்கிலப் புலமையின் காரணமாகவும், அன்றைய ஆங்கிலேய அதிகாரிகளிடம் (சென்னை ஆளுநர் வெல்லிங்டன் பிரபு) அவருக்கிருந்த நற்பேருமாகச் சேர்ந்து, தொண்டைமான் முத்தையா வீட்டை ‘இங்க்லீஷ்காரர் வீடு’ என்றே அடையாளம் காட்டியது.

அந்த வீட்டில்தான் தொண்டைமான் முத்தையா -முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டாம் மகனாக 1923 அக்டோபர் 20ல் தொ.மு.சி.ரகுநாதன் பிறந்தார். அண்ணன் தங்கைகளென ரகுநாதனோடு உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் மாவட்ட ஆட்சியாளர், பெரும் பேச்சாளர், எழுத்தாளர், கல்கி கிருஷ்ண மூர்த்தி, பேராசிரியர் அ.சீனிவாச ராகவன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ‘வட்டத்தொட்டி’ டி.கே.சி., என்று அக்காலத்துப் பெரும் அறிஞர்கள் அத்தனைபேரோடும் நட்பு பேணியவர். ஆனால், ரகுநாதனோ இவை அத்தனைக்கும் நேர் எதிர் திசையில் பயணித்தான். 

தீவிர புத்தக வாசிப்பாளராக இருந்த தொ.மு.சி., தன் அப்பாவின் நூலகத்தை அவருக்குத் தெரியாமல் திருட்டுச் சாவி போட்டுத் திறந்து, பல நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியங்கள், ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்கள், மலையாள, கன்னட, வங்க, இந்தி  மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியங்கள் எனத் தேடித் தேடி வாசித்தார்.  சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப் பித்தன் காலம் வரை அவரிடம் தேர்ந்த வாசிப்பனுபவம் இருந்தது. லத்தீன் அமெரிக்க இலக்கியப் பார்வையும், மேலை இலக்கியங்கள் மீதான விமர்சனங்களும், பக்தி இலக்கியங்களிடையே உள்ள ரசமும் நெருடலும், பாலியல் நாட்டார் செய்திகளில் பகடியும் என்று பலதரப்பட்ட இலக்கியக் கலவையாக இருந்தார் ரகுநாதன். 

அவருடைய உரையாடல்கள் கூட இலக்கியத்தை மறுவாசிப்பு செய்வதுபோல காத்திரமானவை. பொய்மை சமூகத்தை வெறுப்பதற்கு காரணங்கள் அடங்கிய அளவு நேர்மையும், கறார்த்தன்மையும், மதிப்பீடுகளும் கொண்ட அறிஞன் அவர். சரியாகச் சொன்னால் நகை செய்யப் பயன்படாத சுத்தத் தங்கம் என்பார் எழுத்தாளர் பொன்னீலன். பாதிப் படிப்பிலே கல்லூரியிலிருந்து வெளியேறியவர் தொ.மு.சி., இலக்கியமும் அரசியலும் அவருக்கு இரு கண்கள். நெல்லையில் நண்பர்களோடு இணைந்து இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினவர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ‘கம்பனில் யார்  சத்யாகிரஹி’ என்ற தலைப்பில் ஆங்கிலேய அதிகாரத்தை இரணிய வதத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். மேடை அதிர்ந்தது. வாரண்ட் பிறப்பிக்கப் பட்டு சிறைக்கும் போனார். 

 கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. அம்மாதிரியான நூல்களைக் கண்ணால் பார்க்கவே அன்றைய இளைஞர்கள் பயந்தார்கள். அரசின் கெடுபிடி அப்படி. அந்தச் சூழலில் தன் பேராசிரியரிடம் போய் மூலதனைத்தைக் கையில் வாங்கி,  ‘கொடுங்கள் தொட்டாவது பார்த்துவிட்டுத் தருகிறேன்’ எனக் கையில் வாங்கி ஒரே மூச்சாக வாசித்து முடித்தார்.  தம்பிக்கு இருந்த இந்த முற்போக்குத் தனங்கள் அண்ணனுக்குத் தெரியவந்தது. கண்டித்துப் பார்த்தார், கேட்கவில்லை. அண்ணனின் வழிகாட்டலின் பேரில்  அகில இந்திய வானொலியில் வேலைக்கு பரிந்துரைக்கப் பட்டார். சிறைக்குப் போனவர் என்பதாலும், வேலை கிடைக்கவில்லை. கல்கியில் சேரும்படி டி.கே.சி சிபாரிசு செய்தார். ஆனாலும் அவருக்கு அந்தக் கூடாரம் பிடிக்கவில்லை 

சா. கணேசனின் பரிந்துரையில் தினமணியில் வேலை கிடைத்தது. பி.ஸ்ரீ.ஆச்சார்யாவுக்கு உதவியாளராக இருந்தார். மாதம் 65 ரூபாய் சம்பளம். சொந்தமாக எழுதினால் கூட 15 ரூபாய் ஊக்கத் தொகை. அங்கேதான் முதன்முதலாக புதுமைப் பித்தனை நேரே சந்தித்தார் ரகுநாதன். தன் ஆசிரியர் முத்துசிவம் எழுதின ‘அசோகவனம்’ என்ற நூலை தடாலடியாகத் தாக்கி விமர்சனம் செய்திருந்த புதுமைப் பித்தனை, இது விமர்சனம் பண்ணும் முறையல்ல என்று எதிர்த்து எழுதியிருந்தவர் தொ.மு.சி ரகுநாதன். முன்பாக, தொ.மு.சி எழுதிய ‘பிரிவு உபசாரம்’ என்கிற சிறுகதையை நெல்லையில் அ.சீ.ரா.,வின் நண்பர் துறைவன் (வானொலி இயக்குநர்) புதுமைப் பித்தனுக்கு வாசித்துக் காட்ட, யார் இந்த ரகுநாதன் என்று தேடிக் கொண்டிருந்தார் பு.பி., “நீ நம்ம ஆளு, உன்னைத்தான் இத்தனை காலமா தேடிக்கிட்டு இருந்தேன்” என்று ரகுநாதனை வாரிக் கொண்டார்  புதுமைப் பித்தன். நவீன இலக்கிய உலகமும் கூடவே சேர்த்தணைத்துக் கொண்டது. 

தினமணியிலும் ரகுநாதனால் நிலைக்க முடியவில்லை. பிறகு, லா.ச.ரா., கு.அழகிரிசாமி, எம்.வி.வெங்கட் ராம் முதலிய இலக்கிய ஆளுமைகளின் கூடாரமாக இருந்த  ‘முல்லை’யில் புதுமைப் பித்தனின் பரிந்துரையின் பேரின் வேலைக்குச் சேர்ந்தார் தொ.மு.சி. கம்பராமாயணத்தில் கும்பகர்ணனும் விபீடனனும் சந்திக்கும் காட்சியை ‘அண்ணனும் தம்பியும்’ என்ற தலைப்பில் நாடகமாக எழுதினார். நெல்லை மண்ணின் விருந்தோம்பலை நையாண்டி செய்யும் ‘அத்தான் வந்தார்’, வறுமையைச் சொல்லும் ‘பஞ்சப் பாட்டு’, ‘மருது பாண்டியர்’ என தொ.மு.சியின் நாடகங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன. 

நாடகங்களைத் தொடர்ந்து தொ.மு.சியின் சிறுகதைகளும், புதினங்களும் வரவேற்புகளைப் பெற்றன. புயல் (1945), முதலிரவு (1949), கன்னிகா (1950), பஞ்சும் பசியும் (1953) என நான்கு நாவல்களும், பல்வேறு ஒப்பிலக்கிய மற்றும் ஆய்வு நூல்களும், இலக்கிய விமர்சனங்களும், பாரதி ஆய்வு நூல்களும், மொழியாக்கங்களும் பண்ணினார். சாகித்ய அகாடமி, இலக்கியச் சிந்தனை, என எண்ணற்ற விருதுகளை அவர் பெற்றபோதும் தன் படைப்புகளை தன்னுடைய விருதுகள் எனச் சொன்னவர்.

 ‘ஆன இவையெல்லாம் அழகாகக் கூடிவர

கூனுடைய பூமாந்தர் குறையெல்லாம் போக்கி - அவர்

மானிடராய் வாழுமொரு மார்க்கம் தனை வகுக்கும்

காரியத்தில் ஈடுபட்டுக் கவிதைப் பணிபுரியும் 

வீரியர்க்கே தமிழ்க்கன்னி விரும்பி அருள் புரிவாள்’

என்ற தொ.மு.சியின் கவிதையை அன்றைக்கு காலக் கட்டத்தில் பலப்பேர் மனனம் செய்துகொண்டிருந்தார்கள். அவர் எழுதிய கவிதைகள் பல அழிந்துபோனாலும், இம்மி பிசகாமல் அப்படியே மனப்பாடமாய்ச் சொல்லுகிறவர்கள் தமிழகத்தில் பலர் உண்டு. தான் பிறந்த நெல்லையைப் பற்றிய அவருடைய பாடலின் கடைசி இரண்டு அடிகள் பற்றி கா. சிவத்தம்பி சொல்லிச் சொல்லி மகிழ்வாராம். 

‘எண்ணற்ற புகழ் மணக்கும் எங்கள் திருநெல்லையில் 

அண்ணாச்சி மதினியுடன் ஆவணியில் வாரீகளா’

அன்றைய கவியரங்க மேடைகளில் ஒளி வீசியவர்களில் முக்கியமானவர்கள் அண்ணாச்சி கே.சி.எஸ் அவர்களும், தொ.மு.சி. ரகுநாதனும். கே.சி.எஸ்., தேன் குரல் என்றால்,  ரகுநாதன் சிம்மக்குரலோன். மேடைப் பாடல்கள் போக அழகுமிக்க கவிதைகள் பல எழுதினார் தொ.மு.சி.

பாரதியையும் புதுமைப் பித்தனையும் தன் எழுத்துக்களின் வழி நின்று ஆர்ப்பரித்தார். தன் சொந்த வாழ்க்கையில் அவருக்கிருந்த அன்பும் முரண்களும், குடும்பத்தினருடன் பழகிய முறைகளும், யாருக்கும் வணங்கிப் போகாத குணநலனும், ஆங்கில அரசுக்கு தன் அண்ணன் இணங்கிப் போகிறார் என அவரையே மதிக்காத தன்மையும், தன் குடும்பப் பெருமைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என முன்னெழுத்துகளைத் தவித்து  ‘ரகுநாதன்’ என்றுமட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டதும் என  ‘ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளனாகவே’ வாழ்ந்து மறைந்தார். 

தான் வாசித்த புத்தகங்களை எல்லாம் சேர்த்து தனக்கென்று ஓர் நூலகத்தையே உருவாக்கிக் கொண்டார். இரவலோ, இலவசமோ யாருக்கும் புத்தகங்கள் கொடுத்ததில்லை. பல லட்சங்கள் தருகிறேன் என்று அந்தப் புத்தகங்களை விலைபேச வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பியவர், தன் முதுமையில் தன் சேகரிப்பு நூல்கள் அத்தனையையும் எட்டையபுரம் பாரதி நூலகத்துக்குக் கொடையளித்தார். தான் வாழ்ந்த காலம் முழுக்க அந்த நூல்களின் நினைவுகளுடனேயே வாழ்ந்து மறைந்தார். 

- க.புவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)