பதிவு செய்த நாள்

29 ஜன 2018
12:13

சொற்களைப் பற்றிய வகைப்பாடுகளில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கினை அறிவோம். இவற்றில் பெயர்ச்சொற்கள் என்பவை மொழிக்குத் தலையானவை. பெயர்ச்சொற்களே யாவற்றுக்கும் முதலாக நிற்பவை. எவ்வொன்றையும் பெயரைக்கொண்டுதான் குறிப்பிட வேண்டும். மொழி தோன்றியதற்கு முதற் காரணமே ஒவ்வொன்றையும் பெயரிட்டு வழங்கியாக வேண்டும் என்னும் கட்டாயம்தான்.

பெயர்கள் தோன்றிய பிறகு அப்பெயர்க்குரியவை என்னென்ன செயல்களைச் செய்தன என்று வெளிப்படுத்தத் தொடங்கினோம். அந்த வெளிப்பாடுகளைத் தெரிவிக்க வினைச்சொற்கள் தோன்றின. பெயர்க்குரிய ஒன்று செய்யும் தொழிலை வினைச்சொற்கள் விளக்கின. பெயரும் வினையும் தோன்றியபோது நாம் பேசுவதற்குரிய எல்லாச் சொற்களையும் அடைந்துவிட்டோம். எவ்வொன்றையும் பெயர் சொல்லிக் குறிப்பிடலாம். அங்கே நடைபெறும் தொழிலையும் உணர்த்திவிடலாம்.

விண்ணிலிருந்து விழும் நீர்த்துளிகளுக்கு 'மழை' என்ற பெயரை வைத்தவுடன் அந்த மழை என்னென்ன தொழிலைச் செய்யும் என்று சொல்லத் தொடங்கினோம். “மழை பெய்தது” என்று சொன்னோம்.

மழை தோன்றினால் அதை “மழை பெய்யத் தொடங்கியது” என்று சொன்னோம். மழை பெய்து முடித்துவிட்டால் 'மழை ஓய்ந்தது' என்று குறிப்பிட்டோம். மழை கூடுதல் என்றால் 'மழை கொட்டியது' என்றோம். வேண்டிய அளவு மழை பெய்யவில்லை என்னும்போது 'மழை குறைந்துவிட்டது” என்றோம். “மழை போதாது” என்றோம். நன்கு பெய்யும் மழையைப் “பொழிந்தது” என்றோம். குறைவான அளவில் சிறு சிறு துளிகளாய்ப் பெய்தால் அதைத் “தூறியது” என்போம். ஆக, மழை என்ற ஒரு பெயர்ச்சொல் எண்ணற்ற வினைகளைச் செய்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

ஒரேயொரு பெயர்ச்சொல்லை உருவாக்கினால் போதும். அந்தப் பெயர்க்குரியது செய்யும் பல்வேறு வினைகள் வெவ்வேறு வினைச்சொற்களை உருவாக்கித் தந்துவிடும். இப்படித்தான் மொழிக்குள் தோன்றும் பெயர்ச்சொற்கள் வினைச்சொல் வளத்தை உருவாக்கின. அதனால்தான் பெயர்ச்சொற்கள் ஒவ்வொன்றும் மொழிக்கு இன்றியமையாதவை. ஒரு பெயர்ச்சொல் இல்லாமல் போனால் அத்தோடு தொடர்புடைய எண்ணற்ற வினைச்சொற்கள் பயன்பாடின்றிப் போகும். பயன்பாடு குன்றிய வினைச்சொற்கள் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து முதலில் அகன்றுவிடும். ஒரு தலைமுறை பயன்படுத்திய சொற்கள் அடுத்த தலைமுறைக்குத் தெரியாமல் போகின்ற பேரிடர்ப்பாடும் உண்டு.

அழிகின்ற ஒவ்வொரு பழம்பொருளும் அந்தப் பொருளுக்கு மொழிப்புலத்தில் வழங்கப்பட்டிருந்த இடத்தையும் சேர்த்தே அழித்துச் செல்கிறது. காத்துப் போற்றப்படுகின்ற ஒவ்வொரு பொருளும் மொழியையும் காத்து நிற்கும்.

எடுத்துக்காட்டாக தானியங்களில் கலந்திருக்கும் உமியையும் தூசுகளையும் பொடிக்கற்களையும் புடைத்து அகற்றுவதற்கு “முறம்” என்ற மூங்கிலில் முடைந்த அகன்ற தட்டுகளைப் பயன்படுத்தினார்கள். முறத்தின் பயன்பாடு காலப்போக்கில் குறைந்தது. இன்று முறத்தைப் பயன்படுத்தி தானியம் புடைப்போர் இல்லையென்றே சொல்லலாம். முறம் என்ற பொருள் வழக்கொழிந்தால் அந்தச் சொல்லும் பயனற்றுப் போகும். முறத்தினால் செய்யப்படுகின்ற தொழிலைக் குறிக்கும் வினைச்சொற்களும் அருகிப்போகும். முறத்தால் புடைத்தாள், முறத்தில் சலித்தான், முறத்தில் தூற்றினான் என்று வினைச்சொற்களைப் பயன்படுத்துவது குறையும். பிறகு இச்சொற்கள் அருஞ்சொற்களாகி அகராதிகளில் மட்டுமே இடம்பெறும். முறத்தை அறியாத பிற்காலத் தலைமுறையினர்க்கு அச்சொல்லின் பொருள் விளங்காது.

இப்படித்தான் மொழியின் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் தோன்றி வளர்ந்து பயன்பட்டு, பிறகு மறைந்து வழக்கொழிந்து அருஞ்சொற்களாக மாறுகின்றன.

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)