பதிவு செய்த நாள்

29 ஜன 2018
18:11

''அண்ணாச்சி, அரைக்கிலோ வெல்லம் வேணுமே'' என்றான் முகுந்தன்.
''வெல்லம் தீர்ந்திடுச்சே தம்பி''என்றார் கடைக்கார அண்ணாச்சி. ''மத்தியானம் வந்துடும். அப்புறமா வந்து வாங்கிக்கறீங்களா?''
''எத்தனை மணிக்கு வரும்?''
''அது நிச்சயமாச் சொல்றதுக்கில்லை'' என்று யோசித்தவர், ''ஒண்ணு செய்ங்க, உங்க வீட்டு டெலிஃபோன் நம்பரைச் சொல்லுங்க, வெல்லம் வந்ததும் நானே கூப்பிடறேன்.''
''சரிங்க'' என்றான் முகுந்தன். தன் வீட்டு எண்ணைச் சொல்லத் தொடங்கினான். ''ஏழு- ஒன்பது -ஆறு...சுழியம்... ''
அண்ணாச்சி எழுதாமல் தலையைச் சொறிந்தார். ''தம்பி, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க...''
''ஏன் அண்ணாச்சி? நான் தெளிவாத் தமிழ்லதானே சொல்றேன்?''
''ஆமா, ஆனா நமக்கு அது இப்ப பழக்கமில்லாம போயிடுச்சே. டெலிஃபோன் நம்பர்ன்னாலே நைன்- எயிட்- ஃபோர்--ன்னு சொல்லிப் பழகிட்டோமே.''
முகுந்தன் சிரித்தான். ''அண்ணாச்சி, நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா இப்ப சுத்தமா மாறிட்டேன்'' என்றான். ''இப்பல்லாம் எங்கே எண்களைச் சொல்றதுன்னாலும் தமிழ்லதான் சொல்றேன். அதேமாதிரி கிழமைகளை சன்டே, மன்டேன்னு ஆங்கிலத்துல சொல்லாம, ஞாயிறு, திங்கள்ன்னு தமிழ்ல சொல்றேன். மார்னிங், ஆஃப்டர்நூன், ஈவினிங், நைட்டுக்குப் பதிலா காலை, மதியம், மாலை, இரவுன்னு சொல்றேன்.
அதேபோல, கடிதம் எழுதினா தமிழ்ல முகவரி எழுதறேன். வங்கிப் படிவங்கள், வெளியூர்ப் பயணச்சீட்டு, முன்பதிவுப் படிவம்ன்னு எல்லாத்தையும் தமிழ்லதான் எழுதறேன். இதெல்லாம் எங்க தமிழய்யாவோட அறிவுரை.''
''அப்படியா தம்பி? இதெல்லாம் ரொம்பக் கஷ்டமாச்சே? சுழியம்னா எனக்கு திடீர்னு ஒண்ணுமே புரியல... அப்புறம்தான் பூஜ்ஜியம்ன்னு புரிய ஆரம்பிச்சது...'' என்றார் அண்ணாச்சி.
'' அதேதான் அண்ணாச்சி. நம்ம மொழி நமக்குக் கஷ்டமா இருக்குமா? ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்படுவோம், அதுக்கப்புறம் இதுதான் எளிதா இருக்கும்.''
''நீங்க இப்படித் தூய தமிழ்லயே பேசும்போது என்னைமாதிரி மத்தவங்க குழம்பினா என்ன செய்வீங்க?''
''இன்னொருவாட்டி அதையே திருப்பிச் சொல்வேன். அவங்களுக்குப் புரியாத சொற்களை விளக்குவேன். இதைத்தான் எங்க தமிழய்யாவும் சொன்னாரு. மு.வரதராசனார்ங்கற அறிஞரோட யோசனை இதுன்னும் விளக்கினாரு.''
''இதனால என்ன லாபம் தம்பி?''
''அண்ணாச்சி, இன்னிக்கு நான் ஒண்ணு, ரெண்டுன்னு தமிழ்ல எண்களைச் சொல்லும்போது நீங்க புரியாம குழம்பினதுக்குக் காரணம் என்ன? உங்களுக்கு அந்த எண்கள் தெரியாதா? நல்லாத் தெரியும். ஆனா, பழக்கமில்லை. அதனாலதானே குழம்பினீங்க? கடந்த பல ஆண்டுகளா நாம அந்த எளிய எண்களைப் பயன்படுத்தாம இருந்ததாலதானே இப்ப இந்த நிலைமை? இதை நாமதானே மாத்தணும்?
வழக்கமான பேச்சுலயும் அலுவலகம், தொழில் நடவடிக்கைகள்லயும் குடும்பத்தினர், நண்பர்களோட பழகும்போதும் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினால்தானே இந்தமாதிரி இன்னும் பல விஷயங்களை நாம மறக்காம இருக்க முடியும்? அப்பதானே தமிழ்மட்டும் தெரிஞ்சவங்ககூட மத்தவங்களோட நல்லாப் பழகி, தொழில், வேலைவாய்ப்புன்னு முன்னேறமுடியும்? இதைத்தான் மு.வரதராசனார் சொல்லியிருக்கார்.''
''நல்லது தம்பி''என்றார் அண்ணாச்சி. ''இப்ப நீங்க மறுபடியும் உங்க வீட்டுத் தொலைபேசி எண்ணைத் தமிழ்ல சொல்லுங்க, நான் யோசிக்காமல் ஒவ்வொண்ணா எழுதிக்கறேன்.'' என்றார் சிரித்தபடி.
- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)