பதிவு செய்த நாள்

30 ஜன 2018
14:18

    'பால் சக்கரியா' மலையாள இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத நாமம். 2001ல் அவரெழுதிய “இதுதான் என் பெயர்” நாவலின் மலையாள மூலம் வெளியானது.  இதை நாவல் என்பதா? நெடுங்கதை என்பதா? தெரியவில்லை. ஆனால் இந்தக் கதை ஒரு நாவலின் வடிவிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.அடிமை இந்தியாவில் பாதுகாப்பாக இருந்த மஹாத்மா காந்தியை 1948-01-30ம் திகதி மாலையில் சுதந்திர இந்தியாவில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.  அவரை கோட்சே சுட எத்தனித்த கனத்தில் இருந்து, அவனைக் காவல்நிலையத்தில் வைத்து 'உன் பெயர் என்ன?' என காவல்நிலைய அதிகாரி கேட்கும் வரையான காலப்பகுதிதான் இந்தக் கதை நடக்கும் காலம். ஆனால் இடையில் கதை எங்கெல்லாமோ நகர்கிறது. 

கோட்சே தனது பக்க நியாயத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதாகக் காட்டப்படுகிறது. அவன் இந்திய மக்களை நிறைய கேள்வி கேட்கிறான். காந்தியைச் சாடுகிறான். உங்களுக்காக காந்தியை கொன்ற என்னை மஹாத்மா என்றழையுங்கள் என வாதிடுகிறான். கதை மாறி மாறி நகர்கிறது. மூன்றாம் நபர் கதை சொல்லியாகவும், கோட்சேயே கதை சொல்லியாகவும் மாறி மாறி வருகிறார்கள். 

மதவாதமும் அடிப்படைவாதமும் கேள்வி கேட்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கை விளக்கப்படுகிறது. இப்படியாக அற்புதமாக எழுதப்பட்ட நாவல் இது. நிச்சயம் ஒருமுறை வாசிக்கலாம். 

இந்தப் புத்தகத்தில் சக்கரியா எழுதிய இரண்டு முன்னுரைகள் இணைக்கப் பட்டிருக்கிறது. முதலாவது 2001ம் ஆண்டு எழுதிய முன்னுரை. மற்றது 2016ம் ஆண்டு எழுதிய முன்னுரை. பின்னதில் இந்த நாவல் மலையாளத்தில் அறவே விவாதிக்கப்படவில்லை என்று குறைபாட்டுக்கொள்கிறார். தமிழ் இலக்கியச் சூழலை மெச்சுகிறார். 

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு அது எப்படி தன்னைப் பாதித்தது என எழுதுகிறார். தமிழ் இலக்கியம் மற்றைய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதன் அவசியம் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். மலையாளத்தில் இருந்து பஷீரின் எல்லாப் புத்தகங்களும் தமிழிலும் கிடைக்கிறது. அசோகமித்திரனின் எல்லாப் புத்தகங்களும் மலையாளத்தில் கிடைக்குமா? தெரியவில்லை. 

-உமையாள் பெரிந்தேவி
இந்நாவலுக்கான அறிமுகக் கூட்டம் இன்று வாசகசாலை சார்பில் சென்னை அசோக்நகர் வட்டார நூலகத்தில் நடைபெறவுள்ளது. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)