தலைப்பு : சஞ்சீவி மாமா
ஆசிரியர் : கொ.ம.கோ. இளங்கோ
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன்
விலை : 90/-

பதிவு செய்த நாள்

31 ஜன 2018
17:56

சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு புத்தகம் இது. தொடரும் சாதி ஆணவக் கொலைகள், சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு. பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது.. இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம். தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம். அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல்.

தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் என்ற தகழி என்னும் பெருமனிதனின் அந்நாவலே நினைவுக்கு வரும். அந்நாவல் படித்து இரண்டு மூன்று நாட்கள் பெரும் தவிப்பு பற்றி திரிந்திருக்கிறேன். அதற்கடுத்து தோட்டிகள் குறித்த நான் வாசிக்கும் அடுத்த நாவல்.இது. சிறுவர் நாவல் என்பது கூடுதல் ஈர்ப்பு. தோட்டிகள் என்றால் யார், அவர்கள் சமூக வாழ்வியல் நிலை என்ன என்கிற வரலாற்றினை படம் பிடித்திருக்கிறார் நாவலாசிரியர்.

இந்நாவலில் பொதுவெளியை தூய்மை செய்யும் மிக முக்கியமான வேலை செய்யும் தோட்டி சமூக அந்தஸ்திற்கான படிக்கட்டில் தொடுவதற்கு கூட அனுமதியின்றி நிற்கும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்தம் பரம்பரையும் ஒரு “பொதுநன்மைக்காய்” அவமானம் ஏற்றுக் கொள்ள நேரிடும் நிலை மனசினை பிசைகிறது. பேச்சிராசு சாதிய படிக்கட்டில் கீழ் நிலையில் இருப்பினும் அவனைவிட கீழ் நிலையில் இருப்பாரோடு தீண்டாமை பாராட்டுவது இந்நாவலில் தூலமாய் தெரிகிறது. நமக்கு கீழே ஒருவர் என்ற நித்தியமான நிலைக்கு மனிதன் எப்போதும் ஆசைப்படுகிறான். இங்கே பேச்சிராசு சஞ்சீவி என்கிற தோட்டியோடு கொள்ளும் அன்பு, பாசம், நட்பு அவனுக்கு பல தொல்லைகளை தண்டனைகளை தருகிறது. பள்ளியிலும் அது பிரதிபலிக்கிறது. இருப்பினும் அவனது நட்பு சஞ்சீவி மாமாவோடு தொடர்கிறது.

இறுதியாய் அவனது வாழிடத்தில் பஞ்சாலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கிடையேயான மாறுவேடப் போட்டி.யில் பல ஆளுமைகளின் தோற்றத்தில் உடன் படிக்கும் சிறுவர்கள் வர, பேச்சிராசு தான் மிகவும் நேசிக்கும் சஞ்சீவி மாமா என்றழைக்கும் தோட்டி வேடம் போடுகிறான். கையில் மளம் அள்ளும் வாளி போன்ற ஒன்றோடு, ஆனால் உண்மையாகவே மலம் அள்ளப் பயன்படும் பிரத்தியேக கரண்டியோடு. ஆம், அந்த பிரத்தியேக கரண்டி அவனை முழுதுமாய் நம்பி அவனது தந்தை சாதியை உதறி சஞ்சீவி தோட்டியோடு கேட்டு வாங்கிய அவர் பயன்படுத்திய அசல் கரண்டி. அந்த கரண்டியோடு சஞ்சீவி வேட்த்தில் பேச்சிராசு நடித்து முதல் பரிசு வாங்குகிறான். பரிசு பெற்ற கோப்பையோடு நில்லாமல் அந்த கோப்பையில் “சஞ்சீவி மாமா” என்ற பெயரும் பொரித்து பேருவகை கொள்கிறான் பேச்சிராசு. நாவல் முடிவுறுகிறது.

முன்னுரை வழங்கிய எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் அவர்கள், “நாவலை படிக்கும் சிறுவர்கள் இச்சாதியமைப்பின் மீது வெறுப்பு கொள்வார்கள் என நான் நம்புகிறேன்” என்கிறார். அதேதான் எனக்கும் தோன்றியது. பாரதி புத்தகாலயத்தாரின் பெருமை கொள் படைப்பு இது. இதோடு முடியவில்லை இந்த நாவல் குறித்த என் பகிர்தல். இந்நாவலின் இறுதி பக்கத்தில் ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த புகைப்படம் ஒரு சிறுவன் தோட்டி வேடமிட்டு பேசுவதாய் அமைந்துள்ளது. ஆம் அந்த சிறுவன் வேறு யாருமல்ல இந்நாவலின் ஆசிரியர் கொ.மா.கோ. இளங்கோ சிறுவர் கதையாசிரியராக என்னுள் இடம் பிடித்த இம்மனிதர் இந்த நாவலுக்கு பிறகு. சாதி துறப்பாளராக மிக பெரிய மனிதராக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இன்னும் சஞ்சீவி மாமாக்கள் காலம் முடியாத சோகமும் நம் தேசத்தில் தொடர்கிறது.

- ராம் கோபால்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)