பதிவு செய்த நாள்

01 பிப் 2018
19:10
 புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை புலிநகக் கொன்றை. பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் பயணிக்கிறது. பொன்னா நாவலின் மையமாக இருக்கிறார். பொன்னாவின் தாத்தாவிடமிருந்து ஆரம்பித்து எள்ளு பேத்தி பிறக்கும் வரை நீளுகிறது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவித் தாவி செல்கின்றது. 

பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார்.

ஆண்டாளின் கணவன் கல்யாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். 

நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது. நல்லவேளையாக கதாப்பாத்திரங்களின் குடும்ப வரைபடம் இணைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கவனமின்றி படித்தாலும் குழப்பி விடும் கதையும் நான் லீனியர் தன்மையோடான புனைவு புலிநகக் கொன்றை.

சமயங்களில் கதை தன்மை ஒருமைக்கு தாவுகின்றது. ஆனால், எங்கும் அது உறுத்தவில்லை. கதையின் காலம் மாறும் இடத்தில் இணைப்பாக ஒரு புள்ளி இருக்கின்றது என்பதால் அதிகளவிலான குழப்பங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன.

கதையின் இன்னுமொரு இழையாக அக்கால அரசியல் மாற்றங்கள், நம்மாழ்வாரின் தீவிரவாத இயக்க தொடர்பு, வாஞ்சிநாதன், வ.உ.சி, நீலகண்ட சாஸ்திரி, வ.வே.சு அய்யர் என ஊமைத்துரை வரைக்கும் நிஜ கதாப்பாத்திரங்களாகவே வருகின்றனர்.  தீவிரவாதத் தலைவர்கள், அதிலிருந்து மெதுவாக மாறி காந்தியின் பின்னால் சேர்வதும், கம்யூனிஸ்டுகள், நக்ஸல்களுடன் குடும்பத்தில் ஒரு கிளை அரசியலுடன் இணைந்து தன் வாழ்வை நாசமாக்கிக் கொள்கின்றது, மறுகிளை ஊரோடு ஒத்து வாழ்ந்து தன் வாழ்வை தொடர்கின்றது. நம்பியின் மரணமும் அதன் பின்னால் அவரின் தந்தையின் போராட்டமும் வேறு ஒன்றை நினைவுபடுத்துகின்றது. கேரளாவில் ஒரு மாணவன் இதுபோன்று கொல்லப்பட்டு அவர் தந்தை பல காலம் போராடினார். 

நாவலின் இறுதிப்பகுதி முழுவதும் பல அரசியல் விமர்சனங்கள், விவாதங்கள். கிருஷ்ணன் கம்யூனிசத்தையும், காந்தியையும் ஆதர்சமாக கொண்டவர். அது கதையில் நன்கு தெரிகின்றது. வெறும் சம்பவங்களின் குவியாலாக இல்லாமல், துண்டு துண்டான கதைகளாவும் இல்லாமல், அனைத்தும் சேர்ந்து சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும் இருப்பதுதான் வெற்றி. நாவலின் இறுதியில் வரும் நம்பியின் கடிதமும், மதுரகவியின் குறிப்பும்தான் நாவலின் உச்சம். கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

-ரெங்க சுப்ரமணி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)