பதிவு செய்த நாள்

16 ஜூன் 2017
18:36

அலுவலக வேலையாக திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தேன். மேசைமேல் அம்மாவிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் கிடந்தது. “வேலூர் மாமா, தன் பொண்ணு கலைவாணியை உனக்கே கட்டித் தர வேணுமின்னு தெனமும் கேட்டுகிட்டே இருக்காரு. சீக்கிரம் பதிலைச் சொல்லு. மாமா வசதி குறைவானவர் என்பதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே. கலைவாணி ஏழைப் பொண்ணுதான் ஆனாலும் குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு.” கடித வாசகங்கள் நினைவில் வந்து போக, ‘ஹும், அம்மா இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்காங்க. இப்பவெல்லாம் அவனவன் வசதியானப்பெண்ணைக் கட்டிகிட்டு வாழ்க்கையில செட்டிலாகிடனும் என்கிற குறிக்கோளோடதான் காலேஜ் படிப்பையே முடிக்கிறானுக. அம்மா என்னடான்னா ‘ஏழைப் பொண்ணு ஏற்ற பொண்ணு...மாமன் பொண்ணு மாலைக் கண்ணு’ன்னு பழைய வசனம் பேசிகிட்டு இருக்கிறாங்க.திருச்சிக்கு வந்ததும் அலுவலக வேலை மதியத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டது. சட்டென்று ஒரு யோசனை. ‘டான் ரவி திருச்சியிலதான் இருக்கான். வீடு கூட புதுக்கோட்டை ரோட்டுலதான் இருக்கு. அவனைப் போய் பார்த்துட்டுப் போனால் என்ன?’ செல்போனை எடுத்து அவனுக்கு அழைத்தான்.

“டேய் திவாகர்... நீ வர்றதுக்கு கேட்கணுமாடா உடனே கிளம்பி வாடா” டான் ரவி சொல்ல, “சரிடா அரைமணி நேரத்துல வந்திடறேன்” என்றேன்.

“எதுக்குடா அரை மணி நேரம்?”

“புதுக்கோட்டை ரோடுலதானே வீடு?” சந்தேகமாய் கேட்டேன்.

“டேய் அது எங்க அம்மா அப்பா வீடுடா. நான் இப்ப என் மாமனார் வீட்டோட செட்டிலாகிட்டேன். சத்திரம் பஸ் ஸ்டாப்புல இருந்து ரெண்டு கிலோ மீட்டர்தான். ஆட்டோக்காரன்கிட்ட ‘சூர்யா காலனி’ன்னு சொல்லு. கொண்டாந்து விட்டுடுவான். ஏழாம் நம்பர் வீடுடா. முன்னாடி பெரிய கருப்பு கேட் இருக்கும்.”

“சரிடா..சரிடா”

ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். ஆட்டோ ஓட ஆரம்பிக்க, என் நினைவு கல்லூரி காலத்திற்குத் திரும்பியது. இந்த ரவி அப்போது கல்லூரியில் பெரிய தாதா. முதலாம் ஆண்டு படிக்கும்போதே மூன்றாம் ஆண்டு மாணவனைத் தாக்கி அவனை ஆஸ்பத்திரி படுக்கையில் போட்டவன். கரடு முரடான முகத்தில் தாறுமாறாக வளர்ந்த தாடியுடனும், எப்போதும் இடுப்பில் சைக்கிள் செயினோடு திரியும் ரவி பல மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில ஆசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாயிருந்தவன். கல்லூரித் தேர்தலில் அவனை எதிர்த்துப் போட்டியிட எவனுமே முன் வராததால் அவனே நிரந்தர மாணவர் தலைவனாக இருந்தான். அதனாலேயே சாதாரண ரவியாயிருந்தவன் ‘டான் ரவி’ ஆனான்.

“இந்த வீடா சார்?” ஆட்டோ டிரவர் கேட்க நினைவுத் திரும்பி இறங்கினேன். கருப்பு கேட்டைத் திற்ந்து உள்ளே நுழைந்ததும் அசந்து போனேன். ‘அடேங்கப்பா எவ்வளோ பெரிய பங்களா! பரவாயில்லை நல்ல செழிப்பான இடத்தைப் பிடிச்சுதான் செட்டிலாகியிருக்கிறான். விஸ்தாரனமான அந்தப் போர்ர்டிகோவை கடக்கையில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுக் கார்களை பிரம்மிப்புடன் பார்த்தபடி வீட்டினுள் சென்றேன். வெகு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்த முன்புற ஹாலின் மத்தியில் போடப்பட்டிருந்த உயர் ரக ஷோபாவில் அசத்தலாய் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி என்னைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

“ரவி...?” என்று கேட்டேன்.

“நீங்க?” என்று அந்தப் பெண் கேட்டத் தோரணையில் ஒரு திமிர் இருந்தது.

“அவரோட ஃப்ரெண்ட். காலேஜ் மெட்”

மேலும் கீழுமாய் தலையாட்டிய அந்தப் பெண்மணி பூ  ஜாடியைத் துடைத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ‘டேய் மணிகண்டா, ரவியை வரச் சொல்லுடா” என்றாள்

ஏற்கனவே அப்பெண்மணியின் அபார உயரத்திலும், ஆணையொத்த கம்பீரத்திலும் மிரண்டு போயிருந்தேன். அவள் ரவியைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டதில் மேலும் மிரண்டு போனேன். அநேகமாக இவள் ரவியின் மாமியாராகவோ அல்லது மனைவியுடைய தமக்கையாகவோதான் இருக்க வேண்டும்.

லுங்கி பனியனில் ஒரு வேலைக்காரத் தோற்றத்தில் வந்தவனை நம்ப முடியாமல் பார்த்தேன். ‘இவனா...இவனா? ரவி’

“வா திவாகர்...நல்லாயிருக்கியா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டவன், அந்தப் பெண்மணிப் பக்கம் திரும்பி “இது என் காலேஜ் ஃபிரண்ட். பேரு திவாகர்” என்றான் பவ்யமாய்.

“ம்..ம்ம்” என்று அலட்சியமாய்த் தலையாட்டியவளை என்னிடம் காட்டி, “திவா...இவங்க என் வைஃப்” என்றான் ரவி.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “எங்கோ... ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

ஒரு சிறிய கணத்தில் ரவி அவளைப் பார்த்து எதையோ ஜாடையில் குறிப்பிட, அவள் புரிந்துகொண்டு என்னைப் பார்த்து “ம்ம் உட்காருங்க” என்றாள். உட்கார்ந்தேன்.

“அப்புறம் ரவி ரொம்ப வருசமாச்சுப் பார்த்து...எப்படியிருக்கே? எத்தனை குழந்தைக...என்னப் படிக்கிறாங்க?” என்று கேட்டேன்.

அவன் பதில் சொல்லாமல் தன் மனைவியைப் பார்த்தான். அவள் “ரெண்டு பசங்க வெளியூர்ல படிக்கிறாங்க” என்றாள்.

நான் மேலே பேச வாயெடுக்க, அவள் என்னைக் கையமர்த்திவிட்டு ரவியிடம், “போய் உங்க ஃப்ரெண்டுக்கு குடிக்க எதாச்சும் கொண்டு வாங்க” என்றாள்.

உள்ளே சென்ற ரவி திரும்பி வரும் வரை நான் எதுவும் பேசவில்லை. அவளும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ரவியுடன் வந்த வேலைக்காரச் சிறுமி, எனக்கு மட்டும் காபி கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

அமைதியாய் காபி பருகி முடித்து மெல்ல எழுந்து, அவர்கள் இருவரையும் பார்த்து ‘அப்ப நான் புறப்படுறேன்’ என்றேன்.

“அதுக்குள்ளார என்ன அவசரம். நைட்டுதானே பஸ்? கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டுப் போகலாம்ல திவாகர்?” ரவி சொன்னான்.

“அவருக்கு ஏதாவது வேலையிருக்கும். அதான் புறப்படறார். நீங்க ஏன் அவரைத் தொந்தரவு பண்றிங்க?” என்ற அப்பெண்மணி என்னைப் பார்த்து “ம்...நீங்க கெளம்புங்க” என்றாள்.

‘ஹி ஹி அது வந்து....ரொம்ப வருசமாச்சுல்ல அதான்” என்று ரவி வழிய விருட்டென்று வெளியேறிய நான் அங்கிருந்து நேரே பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டேன்.

மறுநாள்...

‘வசதியான வீட்டுப் பெண்ணைக் கட்டினால் தாதாவும் சாதா ஆகிவிடுவான் என்கிற ஞானோதயம் பெற்றுவிட்ட காரணத்தினால், அம்மாவிற்கு உடனே கடிதம் எழுதினேன் “வேலூர் கலைவாணியையே நிச்சயம் செய்துவிடுங்க” என்று.

- முகில் தினகரன்,

கோயமுத்தூர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)