பதிவு செய்த நாள்

04 பிப் 2018
16:48

 “கறுப்பர் நகரம்” எழுத்தாளர் கரன் கார்கியின் மூன்றாவது நாவல். அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் என அவரது முதல் இரண்டு படைப்புகளுக்குப் பின் வெளிவந்த இந்நாவல் வாசகர் தரப்பிலும், படைப்பாளர்கள் மத்தியிலும் வெகுவாகக் கவனிக்கப்பட்டுப் பாராட்டு பெற்ற நூல். 

சென்னையின் பூர்வீக முகங்களைக் கதையாக்கும் கரன் கார்கியின் எழுத்துப்பாணியும் கூட அம்மக்களின் வாய்மொழி நடையில் அமைந்திருக்கும். பெரம்பூர் ஈ.வெ.ரா. நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இன்றைய நூல் அறிமுகக் கூட்டத்தில் கரன்கார்கியின் கறுப்பர் நகரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

வாசகசாலையின் சார்பாக, முரளி ஜம்புலிங்கம் நாவல் குறித்துப் பேசும்போது, அதன் உள்ளீடான அரசியல், மதங்கள் இந்நகரைச் சேர்ந்த எளிய மக்களின் அன்றாடங்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஆகியவை குறித்து விவரித்தார். 

இந்நிகழ்ச்சி குறித்து எழுத்தாளர் கரன் கார்கியிடம் பேசும்போது அவர் தன்னுடைய இந்தப் படைப்பிற்கான புறக்காரணிகளாக அமைந்த வாசிப்பு, படைப்புகள் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். கரன் கார்கி பேசியதிலிருந்து… 

“சென்னையின் கறுப்பர் நகரத்தின் குடிசை வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டவன் நான். நிறைய வாசிக்க வாய்ப்புகள் கிடைத்த சூழலில் என் வீட்டில் இருந்தது. அந்த வயதிலே என்னுடைய சித்தப்பா எனக்கு ரஷ்ய இலக்கியங்களை அறிமுகப் படுத்திவைத்தார். 

வா.ரா., சின்னச் சாம்பு, சுந்தரி மாதிரியான என்னுடைய ஆரம்பக்கால வாசிப்பைத் திசைதிருப்பி, சார்லஸ் டிக்கன்ஸன், அகதா கிறிஸ்டி, இருபெரும் நகரங்கள், மொழிபெயர்ப்புகள் என வீச்சு நிறைந்த பிரதிகளின் மீது திருப்பி விட்டவர் அவர். நான் வாசித்த எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் எனக்குள் தாக்கத்தை விளைவித்துக் கொண்டே இருந்தன. அந்தச் சமயத்திலே நான் எழுதத் துவங்கிவிட்டேன். 

ஒரு நல்ல வாசகன் நிறைய வாசிப்பான், ஒரு பெரும் வாசகன் தன் வாழ்வையும் சமூகத்தையும் எழுதத் துவங்கி விடுவான். நான் இரண்டாம்பட்சத்தின் ஆளாக இருந்திருக்கிறேன். என்னுடைய பதினாறு வயதுக்குள்ளாக முதல் எழுத்துப் பயணம் துவங்கிவிட்டது. ஆனபோதும் 27வயதில் எழுதி முடித்த முதல் நாவல் 40ம் வயதில் தான் வெளியானது. அதற்குப் பின்னால் இருந்த கசப்பு வழிந்த அனுபவங்கள் என்னை இலக்கியச் சமூகத்தின் மீதான புரிதல் கொண்டவனாக மாற்றிப் போட்டது. 

சிறுவயதில் என் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த நண்பர்களின் பெற்றோர்கள் என்னைக் குறித்து அவர்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி குறிப்பிடும் ஒரே வார்த்தை, ‘அந்தப் பையனைப் பார் எப்படிப் படிக்கிறான். எப்படி நீட்டாக இருக்கிறான்’ என்பவையே. அதுகுறித்து நான் பெருமிதமடையாவிட்டாலும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பரவலான வாசிப்புதான் எனக்குப் புரியவைத்தது. 

கரன் கார்கி
கரன் கார்கி

 

 

இடையே, கே. டானியலின் பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் என ஐந்து நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. பூமணியின் ‘பிறகு’ நாவலையும் வாசித்தேன். இவை அனைத்தும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் தீவிரமானவை. நிலங்களும், நாடுகளும், பிராந்தியங்களும் தான் வேறு. எல்லா மனிதர்களும் எல்லாக் காலகட்டங்களிலும் துன்பத்தில் உழன்றுகொண்டு, அழுக்கு, சச்சரவு, சாதியம் என்கிற தன்மைக்கேற்ற சுழலில் சிக்குபட்டுக் கிடக்கிறார்கள். கடல்கடந்து போனபிறகும்கூட மனிதர்கள் சாதிய அமைப்பின் மூலமாகச் சுரண்டப் படுவதை இவர்களது எழுத்தின் வழியாக எதிர்கொண்டேன். 

ஆரம்பத்திலிருந்தே ரஷ்ய இலக்கியத் தாக்கத்திலிருந்து வளர்ந்திருந்தாலும், என்னுடைய மண்ணிற்காக எழுதத் தொடங்கியவன் நான். எந்தத் தேசத்தில் மருத்துவம் படித்தால் என்ன? என்னுடைய சிகிட்சை என் மண்ணிற்கானது, என் மக்களுக்கானது தானில்லையா. அந்த எண்ணம்தான் என் மக்களின் பேச்சுமொழியின் வழி அவர்களது புறவுலக அரசியலைப் பேச வைத்தது. அந்த அரசியல்வெளியின் ஒரு கூறுதான் கறுப்பர் நகரம்” என்று முடித்தார். 

 - எழுத்து : கார்த்திக் புகழேந்தி 


வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)