பதிவு செய்த நாள்

05 பிப் 2018
13:42

ங்களுக்கு எழுத்தார்வம் உண்டா? கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவீர்களா?
அப்படி அனுப்பும் படைப்புகள் பிரசுரமானால் மகிழ்ச்சி. ஒருவேளை பிரசுரமாகாமல் திரும்பிவந்துவிட்டால் வருத்தமாக இருக்கும். அடுத்த படைப்பை எழுதுவதற்கு வேகம் வராது.
ஆனால், படைப்புகள் திரும்பிவரும்போது வருந்துவதைவிட, நம்முடைய எழுத்தில் என்ன பிரச்னை என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் நாம் அந்தப் பிழையைத் திருத்திக்கொள்வோம். அடுத்த படைப்பை இன்னும் சிறப்பாக எழுதி வெற்றிபெறுவோம்.
பாரதிதாசன் 'குயில்' என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகைக்குப் பல படைப்புகள் வரும். அவற்றில் சில படைப்புகள் நன்றாக இருக்கும், பல படைப்புகள் மோசமாக இருக்கும்.
குறிப்பாக, 'குயில்' பத்திரிகைக்குக் கவிதை அனுப்பிய பல இளைஞர்கள் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதியிருந்தார்கள். இதைக் கண்டு பாரதிதாசன் மிகவும் வருந்தினார். 'இளங்கவிஞர்க்கு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதினார். இளைஞர்கள் தங்கள் படைப்புகளை மேம்படுத்துவது எப்படி என்று சொல்லித்தந்தார்.
கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன் அவர் எழுதிய அந்த ஆலோசனைகள், இன்றைக்கும் நன்கு பயன்படக்கூடியவை. காரணம், இப்போதும் தமிழில் எழுதுவோர் பல தவறுகளைச் செய்கிறார்கள். அன்றைக்குப் பாரதிதாசன் சொன்ன குறிப்புகள், இப்போது உங்களுக்கும் பயன்படும். உங்கள் எழுத்துத்திறனை மேம்படுத்தும்.
முதலில், நீங்கள் எழுதியதை நேரடியாகப் பத்திரிகைக்கு அனுப்பவேண்டாம். அருகிலுள்ள புலவர்கள், திறனாளர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லவேண்டும். 'ஏதாவது பிழைகள் இருந்தால் திருத்தித் தாருங்கள்' என்று கேட்கவேண்டும்.
இப்போது, அவர்கள் திருத்தித் தந்ததையும் நீங்கள் எழுதியதையும் ஒப்பிடவேண்டும். அப்போதுதான் நீங்கள் செய்த பிழைகள் உங்களுக்கே தெரியும். அடுத்தமுறை அதே பிழையைச் செய்யாதபடி பார்த்துக் கொள்ளலாம்.
இப்படிப் பிழைதிருத்தப்பட்ட படைப்பைப் பத்திரிகைக்கு அனுப்பினால், அவர்களுக்குத் தொல்லை குறையும். உங்களுடைய படைப்பு பிரசுரிக்கப்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். இதுதான் பாரதிதாசனின் ஆலோசனை!
ஆனால், பல இளைஞர்கள் இப்படிச்செய்ய விரும்புவதில்லை என்று வருந்துகிறார் பாரதிதாசன். 'தம் பிழையைப் புலவர் அறியக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு!' என்கிறார்.
தேர்வில் நீங்கள் கேள்விகளுக்குப் பதில் எழுதும்போது, அதை ஆசிரியர் கவனமாக வாசிக்கிறார். பிழைகளைத் திருத்துகிறார். அதன்மூலம் நீங்கள் அந்தப் பாடத்தை இன்னும் சிறப்பாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
அதேபோல், உங்களுடைய கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றையும் பெரியவர்களிடம், குறிப்பாக, இந்தத்துறையில் ஏற்கெனவே அனுபவமுள்ளவர்களிடம் காண்பிக்கத் தயங்கக்கூடாது. அவர்கள் அதை வாசித்து நிறைய திருத்தங்கள் சொன்னால் வருந்தக்கூடாது. இவை எல்லாமே கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்றுதான் நினைக்கவேண்டும். அவர்களுடைய ஆலோசனைகளைப் பின்பற்றி உங்கள் எழுத்தைச் சிறப்பாக்கிக் கொள்ளவேண்டும்.
அனுபவமிக்கவர்களிடம் பழகும்போது, அவர்களுடைய பல்லாண்டு உழைப்பை நாம் எளிதில் கற்றுக்கொள்ளலாம். அதன்மூலம் நாமும் விரைவில் முன்னேறலாம்.

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)