பதிவு செய்த நாள்

06 பிப் 2018
13:26

  தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பா.வே.மாணிக்க நாயக்கர். சென்னை பொறியியல் கல்லூரியில் பொறியாளர் பட்டம்பெற்று ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையில் பணியாற்றிய பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியது. 

தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், கணக்கியல் ஆகிய துறைகளில் தமது ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டவர் பா.வே.மாணிக்க நாயக்கர்.  தொன்மையும், தெய்வத்தன்மையும் கொண்ட மொழி தமிழே என்றும், தமிழால் உலக மொழிகளை எழுதவும் முடியும், எழுதிப் படிக்கவும் முடியும். உலகில் தோன்றிய அனைத்துக் கலைகளையும் தமிழில் எழுதவோ, எழுதி அறியவோ முடியும் என்பதே இவர் ஆய்வு. 

1917இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியக் கழகத்தின ஆண்டு விழாவில் தமிழ் எழுத்துகளின் அமைப்பு முறைகளை விளக்கும் தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் (The Tamil Alphabet its Mystic Aspect )எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் உயிர் எழுத்துகளான பன்னிரண்டு எழுத்துகளில் குறில் எழுத்தான 'ஒ' எழுத்து சிறப்பானது என்றும், அதுவே எல்லா எழுத்துகளுக்கும் மூல எழுத்தும் என்றார். இதற்கு திருமூலரின் ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓமெனும் என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை சான்று காட்டினார். 

மேலும், அவர் தமிழ் எழுத்துகளை ஒலியியல் (phonetics) என்றும், வடிவியல் (Form) என்றும் வகைப்படுத்தினார். ஒலி உச்சரிப்பைப் படித்தவர்கள் தவறாகவும், கல்வி பயிலாத மக்கள் சரியாகவும் பயன்படுத்துவதாகக் கூறியதோடு, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் தமிழ் உச்சரிப்பை ஆங்கில எழுத்துகளில் அச்சிட்டு இருப்பதைக் கண்டித்துப் பேசினார். 

“அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி” என்ற தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.  மறைமலையடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கக் கொள்கையில் பற்றுறுதியோடு விளங்கினார். மறைமலை அடிகள் இவரைத் தம் நாட்குறிப்பில்,“இவர் ஓர் தனித்திறமார் பேரறிஞர் (மேதை)” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார். 

மாணிக்க நாயக்கர் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. அதில் முதன்மையான மூன்று கட்டுரைகள் அக்கால மெய்யியல் அறிஞர்களிடமும், மொழியியல் அறிஞர்களிடமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கினவை. அவை: 

1. The Tamil Alphabet and it's Mystic 

2. The Evolution of Intellect in Co- ordination with God 

3. Tamil Phonetics.  

மேற்கண்ட மூன்று கட்டுரைகளில் முதலிரண்டும் மெய்யியல் தொடர்பானது. அடுத்தது தமிழ் ஒலி இலக்கணம் பற்றியது.

1920ல் சேலம் நகராட்சிக் கல்லூரியில், தமிழகம் எனும் தலைப்பில் “இலெமூரியாக் கண்டம்” குறித்த மாணிக்க நாயகரின் உரை அறிவியல் நோக்கோடு இருந்தது.  

1923ல் மு.இராகவையங்கார் எழுதிய தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி நூலினை மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டது. இந்த நூலினைப் படித்த மாணிக்க நாயகருக்கு பல்வேறு ஐயங்கள் எழுந்தன. இவர் தாம் பணியாற்றிவந்த பெர்காம்பூரில் (ஒடிசா) இருந்து நான்கு கடிதங்கள் எழுதினார். இவற்றுக்கு மு.இராகவையங்கார் இரண்டு கடிதங்கள் வாயிலாக வினா வகையில் பதில் எழுதினார்.  மாணிக்க நாயக்கர் எழுதிய கடிதங்களைப் படிப்போருக்குத் தொல்காப்பியத்தில் அவருக்கிருந்த ஈடுபாடு தென்படும். ஆகவே, திரு.வி.க. அவரை “தொல்காப்பிய கடலை நாளும் கடைவார்” என்றார்.   மூவரும் எழுதிய எட்டு கடிதங்களையும் தொகுக்கப்பட்டு “தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி” நூலாக வெளிவந்தது. 

அவரெழுதிய பெரும்பாலான ஆங்கிலக் கட்டுரைகளையும், தமிழ்ச் சொற்பொழிவுகளையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான 'செந்தமிழ்ச் செல்வி' ஏடு வெளியிட்டது. நீதிக்கட்சி ஆதரவாளராக விளங்கியதால், பல ஆய்வுக் கட்டுரைகளை ஜஸ்டிஸ் ஏட்டிலும் வெளியானது.

1931ல் சென்னை பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் மறைமலையடிகள் முன்னிலையில் கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்ற தலைப்பில் மாணிக்க நாயக்கர் உரை நிகழ்த்தினார். அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது.  பிற அறிஞர்களும் கம்பராமாயணத்தை எதிர்ப்பதற்கு முன்பே  அதுபற்றின எதிர்க்கருத்துக்களை முன்வைத்தவர் மாணிக்க நாயக்கர். ஈ.வெ.ரா., இவரிடமிருந்தே இராமாயண எதிர்ப்பை கற்றுக் கொண்டார். 

தன் கடைசி காலகட்டத்தில் சென்னை திருமயிலை சன்மார்க்க சகோதரத்துவ சங்க விழாவில் “மொழி முதற் தமிழர் கடவுட் கொள்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருந்து உடல்நலம் குன்றியதால் அவர் கலந்துகொள்ள முடியாமல்  அவரது உரையை மாணிக்க நாயகரின் மகன் குணா மாணிக்கம் வாசித்தார். 

மொழி முதல் தமிழர் தமது கடவுள் கொள்கையை ஏடுகளில் எழுதவில்லை என்றும், தமிழ்மொழி அமைப்பிலே கடவுள் கொள்கை இருப்பதாகவும், கல்லிலோ, மண்ணிலோ தமிழர் வழிபாடு நடத்தவில்லை என்றும், தொல்காப்பியம் கூறுகின்ற கொடிநிலை, கந்தழி, வள்ளி இந்த மூன்றிலும் இறைவன் உருவமற்று அருவமாக இருப்பதாகவும் அவ்வுரை இடம்பெற்றது. 

தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் மாணிக்க நாயக்கர் சென்னையில் உள்ள தமது மாளிகையில்தான் ஓய்வெடுத்து வந்தார். ஒருநாள் தமது சிற்றுந்தைப் பழுதுபார்க்கும் போது அதன் எந்திர சூட்டினால் காலில் புண் ஏற்பட்டது. சர்க்கரையும், குருதி அழுத்தமும் கூடிய நிலையில் புண் ஆறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தமது அறுபதாம் வயதில் 25.12.1931 அன்று காலமானார். வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)