உலகின் முதல் வெள்ளையரல்லாத காமிக்ஸ் சூப்பர் ஹீரோ மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர் (Black Panther). 2018 ஃபெப்ரவரியில் MCUவில் (தமிழில், மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) இவரது Stand Alone படம் வர இருக்கிறது. இவரை இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறைக்கும், இலக்கியம் படிக்கும் புதிய தலைமுறைக்கும் மீள் அறிமுகம் செய்ய, சென்ற ஆண்டு டநஹஷி கோட்ஸை வைத்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தார்கள். முதல் இதழிலேயே விற்பனையில் சாதனை புரிந்த அந்தக் காமிக்ஸ் தொடருக்குப் பிறகு, இப்போது பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான நெடிம்மா ஒகோர்ராவை வைத்து புதிய தொடரை ஆரம்பித்து இருக்கிறார்கள். தலைப்பு: Long Live the King – Part 1
கதாசிரியர்: நெடிம்மா ஒகோர்ரா
ஓவியர்: ஆந்த்ரே லிமா அரவூஜு
கலரிஸ்ட்: க்ரிஸ் ஹொல்லரான்
லெட்டரிஸ்ட்: ஜிம்மி பெத்தான்கோர்ட்
பதிப்பாளர்: மார்வல் காமிக்ஸ்
எடிட்டர்: டெவின் லூயிஸ்
கதை, வகான்டா என்று ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் மட்டும்தான் வைப்ரேனியம் என்ற ஒரு அரிய உலோகம் கிடைக்கிறது. அந்த உலோகத்தை வைத்து, உலகின் மிக முன்னேறிய சமூகமாக, விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்ற நாடாக வகான்டா உருவெடுத்தது. வைப்ரேனியத்தைக் கைப்பற்றப் பலரும் முயல, வகான்டாவின் காவலனாக கருஞ்சிறுத்தை (ப்ளாக் பான்த்தர்) என்ற நாயகன் உருவெடுக்கிறான். வேதாளர் (The Phantom) கதைகளில் வருவதைப்போல, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் ‘ப்ளாக் பான்த்தர்’ ஆக இருக்கிறார்கள். ப்ளாக் பான்த்தர்தான் நாட்டின் அதிபரும் கூட. தற்போதை ப்ளாக் பான்த்தராக ட்டி சாலா என்ற இளைஞர் இருக்கிறார்.
எப்படி நமது ஊரில் மின்சாரத்தைக் கொண்டு எல்லாம் இயங்குகிறதோ, அதைப்போலவே வகான்டாவின் அனைத்து இயந்திரங்களும் வைப்ரேனியத்தைக் கொண்டே இயங்குகிறது. ஏடிஎம் முதல் மருத்துவமனை வரை
வகான்டாவின் அனைத்து எந்திரப் பயன்பாடுகளுக்கும் எனர்ஜி சோர்ஸ் ஆக வைப்ரேனியத்தையே பயன்படுத்துகிறார்கள்.
திடீரென்று ஒருநாள், ஒரு பயங்கரமான மிருகம் வகான்டாவை நோக்கி வருவதை ப்ளாக் பான்த்தர் பார்க்கிறார்.
அந்த மிருகத்தின் வருகையால், வகான்டாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து இயந்திரங்களும் செயலிழக்க, மக்கள் தடுமாறுகிறார்கள். நிலநடுக்கத்தால் பல இடர்கள் உருவாக, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. ஓரளவிற்குச் சுமூகமான பிறகு, வகான்டாவின் இந்த நிலைமைக்குக் காரணமானவர்களைத் தேடி ப்ளாக் பான்த்தர் புறப்படுகிறார்.
இதுவரையில் ப்ளாக் பான்த்தர் படிக்காதவர்கள், இத்தொடரில் இருந்து ஆரம்பிக்கலாம். மெதுவான ஆரம்பம். நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என்று பல தளங்கள், தொலைக்காட்சிகளைப் போல சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கி வருவதைப் போல, இப்போது உலகின் நம்பர் 1 இணைய காமிக்ஸ் தளமான காமிக்ஸாலஜியும் சொந்தமாக காமிக்ஸ் கதைகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. முதல் முயற்சியாக, மார்வல் காமிக்ஸ் உடன் இணைந்து, 15 நாட்களுக்கு ஒன்று என ஆறு பாகங்களைக் கொண்ட இந்த ப்ளாக் பான்த்தர் காமிக்ஸ் தொடரை ஆரம்பித்து உள்ளார்கள்.