இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மறையாளர் கான்ஸ்டாண்டின் நோபள் பெஸ்கி. தமிழ் மொழியை நேசித்துச் செம்மைப் படுத்த உழைத்தவர்களுள் முக்கியத்துவம் வாய்ந்த இவர் தன் பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டவர். கத்தோலிக்க மறையைத் பரப்புவதற்காகக் கி.பி1700ம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வருகைதந்த இவர், இம்மொழியின் மீது கொண்ட ஈர்ப்பினால் மதுரை சுப்ரதீபக்கவி ராயரிடம் முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டார். கூடவே, கிரேக்கம், இலத்தீன், இத்தாலி, பிரெஞ்சு, ஹீப்ரு, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளும் கற்றறிந்திருந்தார்.
42 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து கிறிஸ்து இயேசுவின் வரலாற்றை ‘தேம்பாவணி’ என்ற பெருங்காப்பியமாக இயற்றினார். ஜெருசலேம் முதல் மேற்காசியப் பகுதிகள் வரைக்குமான நிலப்பரப்புகளில் நிகழும் இந்தப் புராண காப்பியத்தை 3615 பாடல்களில் தமிழில் எழுதினார். இவருடைய பரமார்த்த குருவின் சீடர்கள் கதைகள் அக்கால குரு சீடர் மரபின் வேடிக்கைகளைப் பகடி செய்யும் விதமாகவும், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் துவக்கமுமாக அமைந்தது.
தமிழ் ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கிய ஆக்கங்களைத் தேடிச்சென்று அவற்றை நூல் வடிவம் கொடுத்தார். திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை, கருணாம்பாள் பதிகம், அழுங்கல் அந்தாதி எனும் நான்கு சிற்றிலக்கியங்களும் இவரால் எழுதப்பட்டவையே.
தமிழ் இலக்கணத்தின் கடினத் தன்மையை இலகுவாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் ‘தொன்னூல் விளக்கம்’ என்ற ஐந்திலக்கண நூலை எளிய உரைநூலாக அளித்தார். திருக்குறளின் அறம், பொருட்பாக்களையும், தொன்னூல் விளக்கத்தையும் இலத்தீனில் மொழிபெயர்க்கவும் செய்தார்.
இன்று மெய் எழுத்துகளின் மேல் வைக்கும் புள்ளி உருவம் வீரமாமுனிவரால் அறிமுகப் படுத்தப்பட்டதே. முன்பு அவை கோடுகளாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் உயிர் எழுத்துகளில் அா, எா, என்ற பயன்பாட்டை ஆ, ஏ, எனச் சீர்திருத்தம் செய்த பெருமை வீரமா முனிவரையேச் சாரும்.
நிகண்டுகள் எனும் கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டு ‘அகராதி’ உருவாக முதற்காரணமாக வீரமாமுனிவரே செயலாற்றினார். இவரது ‘சதுரகராதி’ நூல் தமிழின் முதல் வரலாற்றுக்கால அகராதியாகத் திகழ்கிறது. 96வகைத் தமிழ் சிற்றிலக்கியங்களும் சதுரகராதியில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.