பதிவு செய்த நாள்

17 ஜூன் 2017
13:31

 ஒர் ஆசிரியர் தன் மகனும் ஆசிரியராக வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் தன் மகனும் நம்மைப் போலவே எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசை எந்த ஒரு எழுத்தாளுமைக்கும் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது. ஆனால் அது சாத்தியமாகியிருக்கிறது 21 ஏ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன் என்ற முகவரியில் இருக்கும் வீட்டில். தமிழ் படைப்பிலக்கியத்தின் இருபெரும் தூண்களான தி.க.சியும் - வண்ணதாசனும் தான் அவ்வீட்டில் வசித்த ஆளுமைகள். அதனினும் சிறப்பு, இவ்விரு படைப்பாளர்களுக்கும் கிடைத்த சாகித்ய அகாடமி விருது. தி.க.சி கட்டுரைகள் தொகுப்பிற்கு 2000ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. வண்ணதாசனின் ஒரு சிறு இசை என்கிற சிறுகதை தொகுப்பிற்கு இந்தாண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது/  ஒரே வீட்டில் இரண்டு சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற பெருமை வேறு எந்த மொழிப் படைப்பாளர்களுக்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை. துருவன் என்ற புனைபெயரில் துவக்க காலத்தில் எழுதி, பின்னர் இலக்கிய விமர்சகராக மாறியவர் தி.க.சிவசங்கரன். அவரது மகனான சி.கல்யாணசுந்தரம், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இருவரும் இலக்கியவாதிகள் என்பதையும் தாண்டி பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே, வங்கியில் பணியாற்றியவர்கள். பெரியவர், தாம்கோஸ் வங்கியில் பணியாற்றியவர். வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர். இருவருக்குமே, இலக்கியத்தில் வழிகாட்டியாக விளங்கியவர் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். தி.க.சிக்கும், வல்லிக்கண்ணனுக்கும் கொஞ்சம்தான் வயது வித்தியாசம். தி.க.சி.யின் முதல் சிறுகதை வண்டிக்காரன் , அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வண்டிக்காரரின் துயர வாழ்க்கையை பேசுகிறது. வண்ணதாசனின் முதல் சிறுகதை ஏழையின் கண்ணீர் , கல்யாணி அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளி கம்பாசிடர் கல்யாணி என்பவரின் பாடுகளை பேசுகிறது. 

தி.க.சி.க்கு தொடக்க காலத்தில் வாசிப்புக்கு களம் அமைத்து தந்தது திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமே, பிற்காலத்தில் வண்ணதாசன் அவர்களுக்கும் புத்தக வாசிப்பில் களம் அமைத்து தந்தது. வங்கியில் பணிபுரிந்த காலத்தில், தொழிற்சங்கம் அமைத்து தீவிரமாக பணியாற்றியதால், தி.க.சி.அவர்கள் பரமக்குடி,சேலம் எடப்பாடி, கொச்சி, சென்னை என இடமாற்றம் செய்யப்பட்டார். எழுத்தராக பணியில் சேர்ந்த வண்ணதாசன், வங்கி அதிகாரியாக பதவி உயர்வு செய்யப்பட்ட பிறகு, நிலக்கோட்டை,சென்னை, அம்பாசமுத்திரம், தெற்குகோனார் கோட்டை ,என பல இடங்களுக்கும் மாற்றலில் சென்றார். தி.க.சியிடம் பேச்சுக் கொடுத்தால் நம்மை விட அதிகமாக அவரே பேசிக் கொண்டிருப்பார். ஆனால், வண்ணதாசன் இதற்கு நேர்மாறானவர் . அதிகமாக பேச மாட்டார். ஆனால், மௌனமாக நம்மை வாசித்துக் கொண்டிருப்பார். தேர்வு செய்து சொற்களை பேசுகிறாரோ என்று எண்ணுமளவுக்கு பேசுவார். ரொம்பப் பிரியமாய் தோளில் கைபோட்டோ, அல்லது கைகளை எடுத்து தனது கைகளில் வைத்துக் கொண்டோ பேசுவதும் உண்டு. அவரது தொடுதலில் அவரது நேசத்தை,மௌனமாக நம்முள் கடத்துவார். 

1990-ல், நெல்லையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றபோது தான், அதில் துவக்கவுரை ஆற்ற  தி.க.சி.யிடம் ஒப்புதல் வாங்குவதற்கு, சுடலைமாடன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் நாறும்பூநாதன்...மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர்..உங்களை அழைப்பதற்காக வந்துள்ளேன்.. என்று சொன்னமாத்திரத்தில், ஒங்களைத்தான் நல்லாத்தெரியுமெய்யா. உங்களோட ஓர் இரவு ங்குற சிறுகதையை செம்மலர் கரிசல் மலரில் படிச்ச ஞாபகம் இருக்கு. அதுக்குப் பிறகு வேற கதைகள் ஏதும் எழுதியிருக்கீகளா? எப்ப தொகுப்பு போடப் போறீக என்று அவர் சொல்லும்போது, கால் தரையில் இல்லை. அது தான் தி.க.சி., ஆறு வருடங்களுக்கு முன்பு படித்த சிறுகதையை நினைவில் வைத்து, படைப்பாளியை பாராட்டும் பண்பு!

அவர் தாமரை இதழில் ஆசிரியராக இருந்தபோது, இளம்படைப்பாளிகள் எவரிடம் இருந்தாவது நல்ல படைப்புகள் வந்தால், அதை அடுத்த இதழில் பிரசுரித்துவிடுவார். படைப்பாளிக்கு உடனே கடிதம் எழுதி, அடுத்த இதழில் உங்கள் கதை வருகிறது என்று தெரியப்படுத்திவிடுவார். கதை பிரசுரிக்க முடியாத நிலையில் இருந்தால், அதை விவரித்து சம்பத்தப்பட்ட படைப்பாளிக்கு கடிதம் எழுதி, வேறு படைப்பு ஏதும் இருந்தால் அனுப்புங்கள் என்றும் கூறி விடுவார். அவரால் இனங்காணப்பட்ட எழுத்தாளர்களைப் பெரிய பட்டியலாகவே சொல்லலாம். பொன்னீலன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன், பூமணி, நா.காமராசன், தனுசுகோடி ராமசாமி, மு.சுயம்புலிங்கம், வீர.வேலுச்சாமி, இன்குலாப், புவியரசு, வண்ணநிலவன், இளவேனில், சு.சமுத்திரம், பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுச்சாமி, முத்தானந்தம், சி.ஆர்.ரவீந்திரன், மே.து.ராஜ்குமார் என பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இலக்கிய துறையில் தனது பங்களிப்பு குறைவு தான் என்று சொல்லிக்கொள்ளும் தி.க.சி., நான்கு திறனாய்வு நூல்களும், ஆறு மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார். அவர் படைப்பாளிகளை உருவாக்கிய பீஷ்மர் என்று சொல்லலாம். தமிழகத்தின் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு கவிதையோ, கதையோ எழுதி கொண்டிருக்கும் இளம்படைப்பாளி ஒருவனை அவர் இனங்கண்டுகொண்டு, அவனது முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி மேலும் எழுத வைப்பார். 

1964-ல், வங்கிப் பணியை துறந்து விட்டு, சோவியத் நாடு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். எழுத்தாளர் புதுமைப்பித்தனை தனது ஆதர்சனமாக கொண்டிருந்தாலும், வீர வணக்கம் வேண்டாம்  என்று 1956-ல், சரஸ்வதி இதழில் புதுமைப்பித்தன் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். துவக்கத்தில், கிராம ஊழியன் இதழில் சினிமா விமர்சனங்களையே எழுதி கொண்டிருந்தார். பேரா.நா.வானமாமலை அவர்கள் தான், சினிமா விமர்சனம் செய்து வீணாகி விடாதே. அதற்கு பதிலாக புத்தக விமர்சனம் எழுது.. என்று யோசனை கூற, அப்போது முதல், இலக்கிய விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். மார்க்சிய இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தி.க.சி., கலை இலக்கிய பெருமன்றத்திலும், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் கலந்து கொண்டு ஆலோசனைகள் சொன்னவர்.

இவரை சந்திக்க இவரது வீட்டிற்குப் போகும்போது, ஆரஞ்சு பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ வாங்கி செல்வதை காட்டிலும், 50  போஸ்ட் கார்டுகளை வாங்கி சென்று கொடுத்தால், பெருமகிழ்ச்சி கொள்வார். இலக்கிய உலகில் நான் ஒரு தோட்டக்காரன்..எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுகிறேன்..எந்த செடியும் வாடி விடக்கூடாதே என்பது தான் எனது கவலை..இலை தளிர்த்து மொட்டு விட்டு, பூ பூத்தால் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தான்.. என்று சொன்ன தி.க.சி.அவர்களின் படைப்புகளை எல்லாம் ஒருசேர தொகுத்தவர் கவிஞர் வே.முத்துக்குமார். 

உரத்து உற்சாகமாய் பேசும் தி.க.சி.யும், அதிர்ந்து பேசாத அமைதியாய் தனது இருத்தலை வெளிப்படுத்தி கொள்ளாத கவிஞர்.வே.முத்துக்குமாரும் எப்படி தோழமை உணர்வோடு இருந்தார்கள் என்பதுதான் எனக்கு இன்று வரை ஆச்சரியமாகவே உள்ளது.
***

பள்ளியில் படித்த காலத்தில், விளையாட்டு வகுப்பில் விளையாடாமல் மரத்தடியில் அமர்ந்து வாதான்கொட்டை மரங்களின் கொப்புகளில் சுற்றி திரிந்த அணில்களை ரசித்துக் கொண்டிருந்த வண்ணதாசன், இயல்பாகவே தாவரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால் தானோ என்னவோ, கல்லூரியில் படிக்கும்போது, இயற்கை அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தார். தாவரங்கள் மீதும், இயற்கையின் மீதும் பேரன்பு கொண்டவர் வண்ணதாசன். 

இளம்வயதில் வண்ணதாசன், வல்லிக்கண்ணன் - தி.க.சிக்கு எழுதிய கடிதங்களை வெகுவாக ரசித்து படித்தார் .  இலக்கியத்தை தவிர, வேறு எதுவும் அதில் இல்லை. வல்லிக்கண்ணனின் இலக்கியத்தரம் வாய்ந்த எழுத்துக்கள்தாம், நான் எழுதப்படிக்க உதவிய சிலேட்டு என்று சொல்கிறார் வண்ணதாசன். இவரது கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதை தொகுப்பு 1976ல் வெளியானது. மிகுந்த கலைநயத்துடன் அச்சு நேர்த்தியுடன் வெளியான இந்நூல் அக்கு பரந்தாமனால் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் இது.  தொடர்ந்து, 1978ல், சமவெளி என்ற தொகுப்பும், 1984ல், பெயர் தெரியாத ஒரு பறவை என்ற தொகுப்பும், 1999ல், மனுசா மனுசா  தொகுப்பும், 1992ல், கனிவு என்ற தொகுப்பும், 2000 ல் கிருஷ்ணன் வைத்த வீடு தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் 2000ம் ஆண்டு கல்யாண்ஜி கவிதைகள் என்ற தொகுப்பாக  வெளி வந்துள்ளது.

ஈரமான வாழ்க்கையை கோரமாக பார்ப்பதற்கு வண்ணதாசனுக்கு சம்மதமில்லை. இந்த உலகம் வண்ணத்துப் பூச்சி மயமானது என்று யாரும் சொல்லவில்லை. வண்ணத்துப்பூச்சிகளே அற்றது இவ்வுலகு என்று யாரும் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க அன்பு அற்றவர்களாகி  விட்டோமா என்ன, இன்னும் இல்லையே. இந்த இன்னும் என்ற வார்த்தைகளின் கீழே வருபவைகள் தாம் என் கதைகள்.. என்று தனது படைப்புக்களின் ஊற்றுக்கண்ணை காட்டுகிறார் வண்ணதாசன். பேருந்தில் வரும்போது,  அழும் குழந்தையை வாங்கி, தனது தோளில் சாய்த்து தட்டி கொடுத்து எங்கம்மையை யார் அடிச்சா...எங்கம்மைல்லா  என்று சொல்லும் மீசை வைத்த பொலிஸ்காரரை தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் தொகுப்பில் காட்டியிருப்பார். 

இவரது படைப்புலகம் அன்புமயமானது.  ஈரம் கசியும் விழிகளோடு பிச்சைக்காரியை, வெள்ளையடிக்கும் நாராயணனை, முடி திருத்தும் இளைஞனை, கோட்டிக்காரி பொன்னம்மாவை சித்திரம் போல வரைந்திருப்பார். அன்றாடம் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களையே இவர் தனது கதைகளில் உலவ விட்டிருப்பார். ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்து பேசுவது இப்போது குறைவு. பேச்சு குறைய குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின் அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது  என்று சொல்லும், வண்ணதாசனுக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. 

ஆனாலும், அவரிடம் பேசுவதை காட்டிலும், அவரது மென்மையான கைகளை எடுத்துக் கைகளோடு சேர்த்துக் கொள்வதே போதுமானதாக இருக்கிறது. தாமிரபரணியின் குளுமையை என்னால் உணரமுடிகிறது.
- இரா.நாறும்பூநாதன் வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)