பதிவு செய்த நாள்

09 பிப் 2018
17:38

 குழந்தைகள், தாத்தா பாட்டியிடம் கதை கேட்ட காலம் போய், இப்போது அவர்களே தனக்குப் பிடித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் சொல்லும் சுவாரசியமான குட்டிக்கதைகளைப் இதழாகக் கொண்டு வருகிற முயற்சியில் உருவானதுதான் ‘பஞ்சு  மிட்டாய்’ சிறுவர் இதழ்.

“பெங்களூருவின் துபரஹள்ளியில் இருக்கும் இரண்டு அபார்ட்மெண்ட்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து கதை குழந்தைகளுக்குக் கதை சொல்லுகிற சிறிய நிகழ்வை ஏற்பாடு செய்தோம். அதில் நிறைய குடும்பங்கள் தங்களின் குழந்தைகளோடு ஆர்வமாக கலந்துகொண்டார்கள்.

பஞ்சுமிட்டாய் நிகழ்வு
பஞ்சுமிட்டாய் நிகழ்வு

வாரம் வாரம் இந்நிகழ்வை நடத்தி வந்தோம். இதுவரை தொடர்ந்து ஐம்பது நிகழ்வுகளை நடத்தியிருக்கிறோம். முதலில் குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லும் நிகவாகத் தொடங்கி, பிறகு குழந்தைகளே நிறைய கதைகளை எழுதி, அவர்களுடைய பாணியில் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 குழ்நதைகளாவது கலந்துகொண்டு கதை சொல்கிறார்கள். கதைகள் மட்டுமல்ல ஓவியங்கள் போன்ற அவர்களின் இன்னபிற படைப்புகளுக்கும் நாங்கள் ஊக்கம் கொடுக்கிறோம். குழந்தைகள் சொல்லும் கதைகளுக்கு ஏற்ப ஓவியம் வரையும் குழந்தைகளிடம் சொல்லி படங்களை வரைந்து கதைக்குப் பயன்படுத்துகிறோம்.

அவர்கள் சொல்லும் கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்க, அவற்றை அப்படியே தொகுத்து ‘பஞ்சு மிட்டாய்’ என்கிற இணைய இதழ் ஒன்றை உருவாக்கி, அதில் 4 இதழ்களாக வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது ஐந்தாவது இதழை அச்சு இதழாக கொண்டுவந்திருக்கிறோம். பெங்களூருவைக் கடந்து தமிழகம் முழுவதும் இந்த இதழ் அனைத்துக் குழந்தைகளின் கைகளில் போய் சேர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இந்த இதழில் முழுக்க முழுக்க குழந்தைகளின் படைப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 சதவிகிதம் தான் மற்ற படைப்புகள் வெளியாகின்றன. கதை சொல்லல் நிகழ்வு குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிந்து, தூரத்தில் இருப்பவர்கள் கூட இந்தக் கதை சொல்லல் நிகழ்வில் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொள்கிறார்கள். மூன்று முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் இதில் கலந்துகொள்கிறார்கள்.” என்கிறார் பஞ்சு மிட்டாய் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரபு.

மேலும், ஜெயக்குமார், ஷர்மிளா, ராஜேஷ், அருண்கார்த்திக், திவ்யா ஆகியோர்களும் இதில் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள். இப்போது பஞ்சுமிட்டாய் கதை சொல்லும் நிகழ்வுகளை தமிழகம் முழுக்க நடத்தத் திட்டமிட்டு, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் எழுத்தாளினி இலக்கிய வட்டம் மூலமாகவும்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியீட்டு விழாவும் நடந்திருக்கிறது.

“குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களின் போக்கிலேயே அவர்களுடைய திறனை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது” என்கிறார்கள் பஞ்சுமிட்டாய் குழுவினர். 

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)