பதிவு செய்த நாள்

12 பிப் 2018
20:33

மா மிஸ் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டார். ஆசிரியர்களுக்கான அறையில்தான் சாப்பிடுவார். அன்று எங்களோடு, மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டது மட்டுமல்லாமல், பின்னர் பொறுமையுடன் பேசிக்கொண்டே இருந்தார். மிஸ்ஸின் குரலில் எப்போதுமே ஆதரவு இருக்கும்; நெருக்கம் இருக்கும்.

காலையில் ஓவியாவோடு ஒரு சின்ன சண்டை ஏற்பட்டுவிட்டது. என்னோடு வழக்கமாக கூடவே சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருபவள், இன்று தர்ஷிணியோடு சேர்ந்து போய்விட்டாள். வருவாள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். கடைசியில் வேகமாக ஸ்கூல் வந்து சேர்ந்தால், வகுப்பில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் ஓவியா. வந்ததே கோபம். “வரமாட்டேன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல?” என்றேன். “உன் கிட்ட ஏன் சொல்லணும்? தர்ஷிணி வந்ததால, அவகூட வந்துட்டேன். நீ தான் லேட்!”

பொய். நான் வழக்கமான நேரத்துக்குத்தான் வந்தேன். ஆனால், ஓவியா முன்னாலேயே கிளம்பியிருக்க வேண்டும். காக்கவைத்ததும் இல்லாமல், இப்போது பொய் வேறு. பேசவே பிடிக்கவில்லை. ஒதுங்கியிருந்தேன்.

மதியம் உமா மிஸ் சாப்பிட வந்தபோது, ஓவியாவும் ஒட்டிக்கொண்டு விட்டாள். நான் மிஸ்ஸிடம் கேட்ட கேள்விகளுக்கு அவளும் மூக்கைநீட்டிப் பதில் சொன்னாள்.
“உன்கிட்ட பேசலை. நான் மிஸ்கிட்டதான் பேசறேன். நீ பதில் சொல்லவேண்டாம்.”
ஓவியாவுக்கு முகம் விழுந்துவிட்டது. மிஸ் அவளையும் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தவர் எதுவும் பேசவில்லை. பின்னர் வேறெதுவோ பேசத் தொடங்கினார். அடுத்து வரவிருந்த பள்ளி நாடகப் போட்டி பற்றி பேச்சு திரும்பியது.
“நான் நாடகம் எழுதறேன் மிஸ்.” என்றாள் ஓவியா.
“கதிர் தான் ஹீரோ. அதுக்கேத்தா மாதிரி கதை சொல்லணும். நீ அவனை விட்டுட்டு ஸ்கூலுக்கு வந்துட்ட. ஒவ்வொரு நாளும் ரெண்டு பேரும் ஒண்ணாதான் வருவீங்க. இன்னிக்கு நீ மட்டும் தனியா வந்துட்ட.”
“தர்ஷிணியோட வந்தேன் மிஸ்.”
“சரி, தர்ஷிணியோட வந்துட்டே. கதிருக்குச் சொல்லல. அவன் காத்திருந்தான். அதனால அவனுக்குக் கோபம். இதுதான் சீன். எப்படி கதையை எடுத்துக்கிட்டுப் போவே. சொல்லு.”
“நான் வேணும்னு செய்யலை மிஸ். தர்ஷிணி வந்துட்டா, சரின்னு கிளம்பிட்டேனே தவிர, இவனை விட்டுட்டு வரணுங்கற எண்ணமில்ல. ஆனால், நின்னு சொல்லிட்டாவது வந்திருக்கணும். சாரிங்க மிஸ்.”
“என்கிட்ட சொல்லாதே. கதிர் கிட்ட சொல்லு.”
ஓவியா பார்வையில் தெரிந்த மன்னிப்பு எனக்கு வருத்தம் தந்தது. வாயில் வார்த்தை வரவில்லை. ஆனால், நெஞ்சார அவள் தன் தவறை உணர்ந்தது தெரிந்தது. எதற்குக் கோபப்பட்டோம் என்றே தோன்றிவிட்டது.
“சாரியெல்லாம் வேண்டாம் மிஸ்.”
அப்புறம் ஒரு சில நிமிடங்கள் பேச்சே இல்லை. எனக்கு அதுவரை இருந்த கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை. மிஸ் அழகாக, கதை மாதிரி உண்மையை வெளியே கொண்டுவந்தது ஆச்சரியத்தைத் தந்தது. காலையில் கோபப்பட்டதை மிஸ் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
சுற்றி எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தனர். வெளியே சத்தம் தான். ஆனால், உள்ளே அமைதியாக, நிம்மதியாக, என்னுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கப்பட்டது என்ற திருப்தி ஏற்பட்டிருந்தது.
“இதுக்குப் பேருதான் ஹூகா (Hygge).” என்றார் உமா மிஸ். “அப்படின்னா என்ன மிஸ்?” ஓவியா கேட்டாள்.
“இது டேனிஷ் சொல். கதகதப்பான, அணுக்கமானன்னு இதுக்கு அர்த்தம் சொல்லலாம். உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான நாடு எது தெரியுமா?”
டேனிஷ் மொழி என்று சொன்னதால், 'டென்மார்க்'க்காக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்தப் பெயரைச் சொன்னேன். “ஆமாம், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அந்த நாடுதான் உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு. ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பல பல்கலைக்கழகங்கள்ல ஆய்வு செய்யறாங்க.”
மகிழ்ச்சிக்கான காரணமாக உமா மிஸ் சொன்ன விஷயம் தான் ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேரம் வகுப்பறையில் மாணவர்களும் ஆசிரியரும் உட்கார்ந்து பேசுவார்கள். இதற்கு 'கூடும் நேரம்' என்றே பெயர்.

இதன் நோக்கமே, அனைவரும் தங்களுடைய மனக்குறைகளை எடுத்து வைப்பதுதான். ஒருவருடைய பிரச்னையை அடுத்தவர் புரிந்துகொள்வது, அதற்குத் தீர்வு சொல்வது இதன் மூலம் நிகழும். அதைவிட முக்கியமாக, அடுத்தவர் கஷ்டத்தைத் தன்னுடைய கஷ்டமாக நினைத்து, உணர்ந்துகொள்ளும் பக்குவம் பயிற்றுவிக்கப்படும்.

இந்த நேரத்தில் சாப்பிடுவதற்கு என்றே தனியே ஒரு கேக் தயாரிக்கப்படும். அதை மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள், விவாதிப்பார்கள், குறைகளைக் களைவார்கள். பேசி முடிந்தபிறகு, இன்னும் நேரம் இருந்தால் விளையாடுவார்கள்.

“பாடம் பத்தி பேசவேண்டாம். வேற எதுவும் பேசவேண்டாம். வெறுமனே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா, நெருக்கமா பேசிக்கறதுக்கான நேரம் அது. நாம் இன்னிக்கு இந்த மாதிரியான நேரத்தைத்தான் தொலைச்சுட்டோம். வீட்டுலகூட, அப்பா, அம்மா, பிள்ளைகள் ஒண்ணா உட்கார்ந்து பேசி, சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு, இல்லையா?” என்றார் உமா மிஸ். ஆமாம். எந்த அழுத்தமும் இல்லாமல் அமைதியாகப் பேசி எத்தனை நாட்களாச்சு?
“6 வயசு முதல் 16 வயசு வரையுள்ள பசங்க 'ஹூகா'வுல பங்கெடுத்துப்பாங்க. 1870களேருந்து இந்தப் பழக்கம் டென்மார்க்ல உண்டு. 1993இல், அந்த நாட்டு கல்வித் துறையில இப்படிப்பட்ட 'ஹூகா' நடத்தப்படணுங்கறது சட்டமாவே ஆச்சு. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைஞ்சு மன மாற்றங்களைக் கொண்டுவர முடியும்ங்கறதை அங்கே நிரூபிச்சு இருக்காங்க. அந்த நாடே மகிழ்ச்சியா இருப்பதற்கு இந்த 'ஹூகா'வும் ஒரு காரணமோன்னு நினைக்கறாங்க.” என்ற உமா மிஸ், ஓவியாவைப் பார்த்து ஆறுதலாகச் சிரித்தார்.
இனி வாரம்தோறும் மற்ற நண்பர்களோடு சேர்ந்து 'ஹூகா' நடத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நன்றி : பட்டம் இதழ்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)