பதிவு செய்த நாள்

14 பிப் 2018
21:27
“தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்”

 சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. சுநீல் மற்றும் அவனது நண்பர்களைப் போலவே நாவலுக்கு என்று எவ்வித அரசியல் சரித்தன்மையும் இல்லை. நாவலின் இறுதியில் யாரும் திருந்தும் மிகைப் பாவனைகளும் இல்லை. எதிலும் நழுவியோடும் குணவியல்பும் ’இன்றைக்கு வாழ்’ என்ற சித்தாந்தமும், சராசரி மனிதர்களின் மேல் ஒவ்வாமையும் கொண்ட பிச்சைக்காரர்களை வெறுக்கிற சுநீல், வாசக மனத்தில் பெரிய ஆத்ம சுத்தத்தையோ தரிசனத்தையோ வழங்கும் மனிதனில்லை. 

நாவல் தொடங்குகையில் அவனும் அவனது சகாக்களுடைய வாழ்க்கையும் எவ்வாறு இருக்கிறதோ அப்படியே முடிவிலும் இருக்கிறது. இடையே அவர்களது வாழ்வினை சுநீலின் வாயிலாக நாமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறோம். தன் வாழ்வில் அனைத்தையும் கண்ட சுநீல் தன் கீழுள்ள மனிதர்கள் மீது தெரிந்தே அதிகாரம் செலுத்துவதில் சுகம் காண்கிறான். 

பல இடங்களில் தானொரு பிற்போக்குவாதி எனக் காட்டுகிறான். அவன் மீது நமக்கும் அனுதாபமும் தோன்றுவதில்லை. எப்படியாது ஒரு தூய காதலைப் பெற்று தன் அழுக்கினைக் கழுவ எத்தனிக்கிறான். 

ஏற்கனவே பல ‘வாக்குமூல’ நாவல்களைப் படித்தாலும் இந்நாவல் என்னிடத்தில் தனித்த மதிப்பினைப் பெறுகிறது. காரணம் இது நிகழும் காலம். இதில், அந்நாளைய அரசியல் கொதிநிலை ஸ்தூலமாகப் பதிவு செய்யப்படவில்லை எனினும், மனிதர்களின் சிதறுண்ட மனங்களினூடாக ஒரு சித்திரம் வரையப்படுகிறது. 

அட்டைப்படத்தில், நீண்ட கம்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மதிலை உடைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் தப்பிக்க முயல்கிறான். அந்தச் சிறுவனைச் சுநீலாகவும் அந்தக் கம்புகளின் மதிலை சமூகமாகவும், அவனுடைய சக மனிதர்களாகவும் கொள்ளலாம். 
-யா.செ

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)