பதிவு செய்த நாள்

15 பிப் 2018
11:21

ஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1855 ஜனவரி 19-ல் பிறந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

தந்தையார் வக்கீல் கணபதி ஐயர், தாயார் தனம்மாள். திருவையாறு தாலுக்கா பள்ளியிலும், பின்னர் தஞ்சாவூரில் இருந்த எஸ்.பி.ஜி. மிஷன் பள்ளியிலும் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் வென்றார். இரண்டு ஆண்டுகள் தஞ்சாவூர் எஸ்.பி.ஜி.கல்லூரியில் படித்து எஃப்.ஏ. யில் தேர்வு பெற்றார். இதுதான் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் கல்வி நிலையங்களானது. அவருடைய பதிமூன்றாம் வயதில் தந்தை காலமானார். இவர் மீனாட்சி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1874ஆம் ஆண்டில் சென்னை சென்று அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது முடும்பை வீரராகவாச்சாரியாரின் அறிமுகம் கிடைத்தது. சுப்பிரமணிய ஐயரின் அரசியல் வாழ்வுக்கு வீரராகவாச்சாரியாரின் நட்பு பெருமளவில் உதவியது.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர்.

ஜி.சுப்பிரமணிய ஐயர்
ஜி.சுப்பிரமணிய ஐயர்

பின்னாளில் தலைமை ஆசிரியராக உயர்ந்த அவர், திருவல்லிக்கேணியில் தொடங்கிய பள்ளியில் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு பயிற்றுவித்தார். ஜாதி, மத வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் சீர்திருத்தக் கொள்கையுடன் இயங்கிய அவர், ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகைகளின் இந்து மத வெறுப்பையும் சாடியவர்.

சென்னையில் 1850-களில் தொடங்கப்பட்ட இலக்கியச் சங்கங்கள், அரசியல் சமூகப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை வளர்த்தெடுத்தன. இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகளை அனுப்பிவந்த ‘டிரிப்ளிகேன் லிடரரி சொசைட்டி’யில் சுப்பிரமணிய ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரது அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளுக்கு இந்தச் சங்கம் அடித்தளம் இட்டது.

1878-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்படுவதை ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. இந்தக் காலகட்டத்தில், ஆங்கிலம் கற்றவர்களிடம் அரசியல் விவாதங்களைப் பரப்பும் நோக்கில் ‘தி இந்து’ ஆங்கில இதழைத் தொடங்கினார்.

1882-ல் சுதேசமித்திரனைத் தொடங்கினார். இதில் துணை ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்களில் குருமலை சுந்தரம் பிள்ளை, பாரதியார் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘விகடதூதன்’, ‘வெற்றிக்கொடியோன்’ போன்ற இதழ்கள் சுதேசமித்திரனைப் பின்பற்றி அரசியல் விமர்சனம் செய்தன என்று ஆங்கிலேய அரசின் அறிக்கையிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தமிழுக்கு அவர் அளித்த வார்த்தைகள், பிற இதழ்களால் பின்பற்றப்பட்டன.

சமூக சீர்திருத்தக் கொள்கையில் தீவிரமாக இயங்கிய சுப்பிரமணிய ஐயர், சொந்த வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார். 10 வயதிலேயே கணவனை இழந்த தனது மகளுக்கு, மறுமணம் நடத்த முடிவுசெய்தபோது பலத்த எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அவரது மகளின் மறுமண வாழ்க்கை கசப்பானதாக இருந்ததும், இளம் வயதிலேயே அந்தப் பெண் மரணமடைந்ததும் அவரை வருத்தமுறச் செய்தது.

தீண்டாமைக்கு எதிராகவும் அவர் பல கட்டுரைகள் எழுதினார். ‘எத்தனை கொடூரக் குற்றம் செய்தாலும் பிராமணர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாது’ என்று திருவிதாங்கூர் தலைமைச் செயலாளர் சட்டம் கொண்டுவந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். ‘கொடூர மூடபக்தி’ என்று அதை விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற 72 அறிஞர்களில் இவரும் ஒருவர்.

விபின் சந்திரபாலர், கோபால கிருஷ்ண கோகலே, ஏ.ஓ. ஹியூம் போன்ற தலைவர்களின் அபிமானத்தைப் பெற்றவர் சுப்பிரமணிய ஐயர். அரசியல் கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முதல் தலைவரும் அவர்தான்.

1882ஆம் வருஷம் “சுதேசமித்திரன்” பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் இது நாள் இதழாக மலர்ந்தது. மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு வந்து ஒரு பத்திரிகையாளராகவும், அதன் மூலம் ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் ஆவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஜி.எஸ். மகாகவியை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் இவரே.

‘சுதேசமித்திரன்’ எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாயின. இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் இவரது உடல்நிலையை அதிகம் பாதித்தது. எனினும் இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1915இல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார்.

பத்திரிகைத் துறையின் முன்னோடி, மகாகவி பாரதியை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த உத்தமர், சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது 61ம் வயதில் 1916இல் காலமானார்.

தொகுப்பு : வேணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)