பதிவு செய்த நாள்

15 பிப் 2018
15:53

 இருத்தல்
இரை தேடும் பறவையை விட்டு விடு

அதன் பசி அதற்கு
போஸ்டரைக் கிழித்துண்ணும் மாட்டைப் பார்க்கிறாய்

போகட்டும் விடு; புற்கள் தென்படவில்லை

வேறு கதியில்லை அதற்கு
‘குக் பக்’கெனக் குரலெழுப்பிப் படபடத்துப் பறந்து

அமர்ந்து இடம் வலம் விழியுருட்டும் புறாக்கள் அழகுதான் 

அதன் பதற்றம் அதற்கு; ரசித்து விட்டுச் செல்

கைப்படுத்திப் பற்றி மென்மையாய்த் தடவ ஆவலுறாதே
குரலால் சமிக்ஞை செய்து கூரலகால் தரை கீறி

சிதறும் சாதப்பருக்கையுண்ணும் காகங்கள் 

அதன் விதி அப்படி 

விட்டுவிடு இருந்து விட்டுப் போகட்டும்
உன் பசியுறைக்கும் போது 

எதையும் மறந்து சாப்பிடத் துணிகிறாயே

அதைச் செய்
கண்டதையெல்லாம் கற்பனித்து

கவிதை எழுதாதே
பறவைக்கு இரை

மாட்டுக்கு போஸ்டர்

புறாவுக்குப் பதற்றம்

காகத்துக்கு கரைந்துண்ணல்

உனக்கு உன் பசி போலத்தான்

அததற்கு அதனதும்.

நினைவுச் சுருள்
நினைவைக் கூர்தீட்டி எரிகிறது வெம்மை

என்னை மன்னித்து விடு

இத்தனைக்கும் காரணம் நான்தான்

மனதின் ஆழத்திலிருந்து

சூட்சுமமாய்ப் பரவிக் கொண்டிருக்கும்

ஒலியற்ற வார்த்தைகளை

உனக்குக் கடத்திக் கொண்டிருக்கிறேன்

துளித்துளியாய்க் கவிழ்ந்து வழிந்து கொண்டிருக்கும்

காலத்தால் முறியடிக்க முடியாத நம்முலகை 

திசைவெளியெங்கும் தேடித்தேடி

கைகூடச் செய்திருக்கும் இப்பருவம்

மிச்சமிருக்கும் தருணங்களை

தனிமையும் வெறுமையுமற்று

வெண்மணியைக் கோர்க்கும் நேர்த்தியோடு

கோர்த்துக் கொண்டிருக்கிறாய்

இழை பிசகாமல் வருடப்படும் ஆன்ம மீட்டலுக்காக 

காத்திருக்கிறது இசைக்கருவி

கனவெனச் சுருள்கிறது காலம்.அவரவர் முகம்
சடசடத்து உதிரும் உலரிலை

கையறு நிலையில் ஓங்கி நிற்கும் மரம்

மெல்ல நீவி இதழ் விரித்து மொக்கவிழும் மலர்

சிக்கலில்லாத சிறகடிப்பில் வண்ணத்துப்பூச்சிகள்

சிறுவாய் திறந்து காற்றிலசையும் வெண் தும்பை மலர்கள்

பகலைத் தேய்த்து இரவைப் புணரும் பொழுது

அனுபவத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் காலம்

வெறிச்சோடித் தனித்திருந்த வெறுமை

புரண்டு திரும்பியெழுகிறது
எத்தனையோ முகங்கள்

எத்தனையோ மனங்கள்

அத்தனையிலிருந்தும் 

ஒற்றையாய்ப் பற்றிப் பிடுங்கி 

தனக்கென வைத்துக் கொள்ள ஓர் முகம்

தனக்கென வைத்துக் கொள்ள ஓர் மனம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)