பதிவு செய்த நாள்

17 பிப் 2018
18:12

ந்த ஊருக்கு வியாபார விஷயமாக வந்திருந்த செல்வந்தர் ஒருவர் மதிய உணவுக்கு நல்ல உணவகம் தேடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அவரது எதிரில் முல்லா நடந்துவர, அவரிடம் ‘நல்ல உணவு விடுதி எங்குள்ளது’ என்று கேட்டார். முல்லாவும் அதற்கு பதில் சொல்லிவிட்டு தன் போக்கில் நடக்கலானார்.

படிப்பாளியும் செல்வந்தருமான அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஓர் ஆள் கிடைத்த மாதிரி இருக்கட்டும் என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் ஒப்புக்கொண்டார்.

இருவரும் உணவு விடுதிக்குச் சென்றனர். ‘அன்றைய ஸ்பெஷல் உணவு என்ன?’ என்று சர்வரிடம் கேட்டார் முல்லா.

‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் அவர். முந்தைய நாள்தான் மீன்பிடி தடைக்காலம் முடிந்திருந்தது. அதனால், அவர் புதிய மீன் என்று அழுத்திச் சொன்னார்.

“இரண்டு துண்டுகள் நல்லதாகக் கொண்டு வாருங்கள்” என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து உணவக சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது.

அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமுமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டார். முல்லாவின் செய்கையால் துணுக்குற்ற செல்வந்தர், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, “முல்லா, நீங்கள் நடந்துகொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத செயலாகும்” என்று பொரிந்து தள்ளத் தொடங்கினார். அவர் சொல்வதையெல்லாம் மிக பொறுமையாகக் கேட்டுக்கொண்டு வந்தார் முல்லா. அவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ஐயா?” எனக் கேட்டார் முல்லா.

“நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகயால் மீன் துண்டின் சிறிய பகுதியையே எடுத்திருப்பேன்” என்றார்.

“அப்படியா,  ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு” என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த செல்வதரின் தட்டில் வைத்தார் முல்லா.

- காயம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)