பதிவு செய்த நாள்

17 பிப் 2018
18:35

ந்த ஊரில் குறைந்த விலையில் தேங்காய் கிடைக்கும் என்பதை அறிந்துகொண்ட ஒரு வியாபாரி, தேங்காய்களைக் கொள்முதல் செய்வதற்காக அக்கிராமத்திற்கு வந்தார். நல்ல விலையில் பேரம் படிந்தது. தனது மாட்டு வண்டியில் தேங்காய்களை வாங்கி ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

சிறிது தூரம் சென்றபோது வியாபாரியின் வண்டிக்கு முன்னால் ஒரு பெரியவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரிடம் தேங்காய் வியாபாரி, “பெரியவரே! என் ஊருக்குச் செல்ல நான் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து என் ஊருக்குப் போய்விடுவேன். இந்த வழி சரிதானா? எவ்வளவு நேரத்தில் அச்சாலையை அடையலாம்?” என்று கேட்டார். அந்தப் பெரியவர் வியாபாரியையும் வண்டி நிறைய இருக்கும் தேங்காய்களையும் ஒரு பார்வை பார்த்தார். பின்னர், “இது சரியான வழிதான். இதில் நீங்கள் மெதுவாகச் சென்றால் இன்னும் அரைமணி நேரத்தில் அச்சாலையை எட்டிவிடுவீர்கள். ஆனால் வேகமாகப் போனால் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகலாம்.” என்றார்.

அதைக் கேட்டதும் தேங்காய் வியாபாரிக்கு எரிச்சல் வந்தது. ‘இந்தக் கிழவருக்குப் பித்து பிடித்திருக்கிறது போல, அல்லது திமிர் அதிகமாக இருக்கலாம். வேகமாகச் சென்றால் எங்காவது தாமதமாகப் போய்ச் சேருவோமா! ஏதோ பிதற்றுகிறார். இவரிடம் போய் யோசனைக் கேட்டோமே’ என்று  மனதுக்குள் முணுமுணுத்தபடி வண்டியை வேகமாக ஓட்டினார்.

சிறுது தூரம் சென்றதும், சாலை குண்டும் குழியுமாக இருந்தது. அதிலும் அதே வேகத்தில் வண்டியைச் செலுத்தினார். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பிரதான சாலையும் அதில் போகும் வாகனங்களும் தெரிந்தன. அதைப் பார்த்ததும் உற்சாகத்தில் இன்னும் துரிதமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.

அப்போது பாதையில் கிடந்த ஒரு பெரிய கல்லில் வண்டியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் வண்டி பக்கவாட்டில் சட்டென்று சரிந்து கீழே விழுந்தது. வியாபாரி வண்டியில் ஏற்றியிருந்த தேங்காய் அத்தனையையும் சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடியது.

நல்லவேளையாகத் தேங்காய் வியாபாரிக்குக் காயம் எதுவும் இல்லை. கீழே விழுந்த வியாபாரி, மாட்டை அவிழ்த்து அருகில் இருந்த மரத்தில் கட்டினார். பின்னர் வண்டியைத் தூக்கி நிறுத்திவிட்டு, தேங்காய்களைப் பொறுக்கி மீண்டும் வண்டியில் போட ஆரம்பித்தார்.

எல்லாம் முடிந்து, மீண்டும் வண்டியில் மாட்டைப் பூட்டி, அவர் வண்டியை எடுத்து, பிரதான சாலையை அடைந்தபோது, ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகி இருந்தது. அப்போதுதான் அந்தப் பெரியவர், “மெதுவாகச் சென்றால், இன்னும் அரை மணி நேரத்தில் சென்றுவிடுவீர்கல். ஆனால் வேகமாகப் போனால் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகலாம்’ என்று சொன்னது நினைவிற்கு வந்தது. அவரைப்போய்த் தவறாக நினைத்துவிட்டோமே என்று வியாபாரி வருந்தினார். அப்பெரியவரின் மதிநுட்பத்தை மனதுக்குள் வியந்தபடி தன் ஊரை நோக்கி வண்டியை நிதானமாகச் செலுத்தினார்.

- மாயன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)