பதிவு செய்த நாள்

17 பிப் 2018
18:46

 மிழ் வாக்கியத்தில் ஆங்கில வினைச்சொற்களால் நேரடியாக இயங்க இயலாது. செய்தல் அல்லது பண்ணுதல் போன்ற வார்த்தைகளின் துணைகொண்டே பொருள் தர முடியும். உதாரணமாக, cook எனும் வினைச்சொல்லை தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால், அவன் நன்றாக cook செய்தான் என்றே எழுத முடியும். ஆனால், சமை என்பது நேரடியாக இணையும். அவன் நன்றாகச் சமைத்தான்.  அவள் அழகாக smile செய்கிறாள். அவள் அழகாகப் புன்னகைக்கிறாள். அவனுக்கு உடனடியாக help பண்ண வேண்டும். அவனுக்கு உடனடியாக உதவ வேண்டும். இவ்வாறு, சமீப கால எழுத்துச் சூழலில்,  ஆங்கிலச் சொற்களின் புழக்கம் தமிழ் வாக்கிய அமைப்புக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

எளிதான தமிழ் வார்த்தைகளைக் கூட நமது பேச்சு வழக்கில் பயன்படுத்துவது என்பது நகைப்புக்குரியதாகிவிட்டது. 'சீக்ரம் பிரஷ் பண்ணு, அவனுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல, ட்ரை பண்ணா எல்லாமே முடியும்' என இது இயல்பாகிப்போயிற்று. 

எழுத்து நடையில் எழுத்தாளன் இயங்கும்போது செய் எனும் வார்த்தை அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. தமிழ் வினைச்சொற்களும் ‘செய்’யின் துணையோடே இடம்பெறுகின்றன. 

 “அவன் நன்றாகச் சமையல் செய்தான்; அவள் அழகாகப் புன்னகை செய்கிறாள்; அவனுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும்; முயற்சி செய்தால் எல்லாமே நடக்கும்.” போன்ற இடங்களில் இயல்பாகத் திரியும் வினைச்சொற்களின் பண்பை நாம் மறந்துவிட்டோம். கூடவே,  குயில் கூவும், மயில் அகவும், நாய் குரைக்கும், சிங்கம் கர்ஜிக்கும் என ஒவ்வொன்றையும் தனித்துவமான சொற்களால் குறிப்பிடுகிறோம். இதே போல, அதற்குகந்த சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதே அவ்வாக்கியத்திற்கு அழகு சேர்க்கும். 
 இரு பொருள் தரும் சொற்கள் 
 எந்தெந்த வார்த்தைகளைப் பிரித்து எழுத வேண்டும் எவற்றைச் சேர்த்து எழுத வேண்டும் என்பது அடுத்தச் சிக்கல். குறிப்பாக, இரு பொருள் தரும் சொற்களில் மட்டுமாவது கவனமாக இருக்கவேண்டிய தேவையிருக்கிறது. இதனால் பொருள் குழப்பம் நிகழவும், வாசிப்பில் தடங்கல் ஏற்படவும் சாத்தியம் உண்டு. 
அதிகம் பயன்படுத்தும் சில அடிப்படையான சொற்கள்: 

 ‘கூட, தான், போய், கொண்டு’ 
 கூட: 

 உடன் அல்லது சேர்த்து என்றும் இந்தச் சொல்லை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இப்படியான சூழலில் பிரித்தும் பிற இடங்களில் சேர்த்தும் எழுத வேண்டும் 

அது கூட இதையும் அனுப்பிவிடு. 

அதைக் கேட்டும்கூட அவன் திருந்தவில்லை. 
தான்: 

தன்னை, தனக்கு என அர்த்தப்படுத்தும் சூழலில் பிரித்தும் பிற இடங்களில் சேர்த்தும் எழுத வேண்டும். 

அப்படி நடந்தால் தான் அதிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டான். 

அதனால்தான் அவன் நன்றாக இருக்கிறான். 
போய்: 

சென்று என அர்த்தப்படுத்த எண்ணும் சூழலில் பிரித்தும் பிற இடங்களில் சேர்த்தும் எழுத வேண்டும். 

இன்று போய் நாளை வா. 

அது செல்லரித்துப்போய் பல காலம் ஆயிற்று. 
கொண்டு: 

வினையின் காலத்தைக் குறிப்பிடும்போது சேர்த்தும் பிற இடங்களில் பிரித்தும் எழுத வேண்டும். 

நான் சென்றுகொண்டிருந்தேன். 

எதைக் கொண்டு முடிவுக்கு வந்தாய். 
அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழ் நடைக் கையேடு' நூல் இவ்வாறு வாக்கிய அமைப்புகளைப் பிழையின்றி எழுத உதவும் முக்கியமான நூல். 
-த .ராஜன் 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)