பதிவு செய்த நாள்

20 ஜூன் 2017
17:39

எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் எழுதிய அவரது ஐந்தாவது புத்தகமான ‘வேர்பிடித்த விளைநிலங்கள்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.17) அன்று வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வெளியிட  இயக்குநர் ஆடம் தாசன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் மற்றும் பத்திரிகையாளர் ரோகினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் பாக்கியம் சங்கர் பேசியபோது “எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் எங்களுக்கு அண்ணன் போன்றவர். வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடிய நல்ல மனிதர். அவருடன் சமீபமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்த பிறகே அவர் எழுத்துக்கு அப்பால் அவரை அறிந்துகொள்ள முடிந்தது.” என்று அவருடனான நட்பு குறித்த விஷயங்களைப் பகிருந்துகொண்டார்.

அடுத்ததாகப் பேசிய பத்திரிகையாளர் ரோகினி “ஒரு பத்திரிகையாளராக ஜோ.டி.குரூஸை நான் அறிவேன். ஒரு எழுத்தாளரைப் பேட்டியெடுத்து அதனை எடிட் செய்து வெளியிடுவதற்குள் நிறைய மெனக்கெட வேண்டியதிருக்கும். ஆனால், ஜோ.டி.குரூஸைப் பேட்டியெடுக்கப் போனால் அதுமாதிரியான சிரமம் இருக்காது. மனிதர் பேசும்போது எடிட் செய்தது போலதான் பேசுவார். அவ்வளவு நேர்த்தியான பேச்சுக்குச் சொந்தக்காரர் அவர்” என்று அவருடனான பத்திரிகை அனுவத்தில் இருந்து நிறைய விஷயங்களைப் பேசினார்/.

சிறப்புரையாற்றிய கரு.ஆறுமுகத்தமிழன் “நான் தொடர்ந்து ஜோ.டி.குரூஸ் படைப்புகளை வாசித்துக்கொண்டு வருகிறேன். சமகால அரசியலையும் கடந்த கால நினைவுகளைப் பகிரும் அவரது கதாபாத்திரங்கள் கதைக்கு கச்சிதமாக இருக்கும். இதுவரை அவர் எழுதிய நாவல்கள் மற்றும் கதைகளின் மாந்தர்களைப் பற்றிய குறிப்புகளையும் அவர் சந்தித்த மறக்க முடியாத மனிதர்களையும் ‘வேர் பிடித்த விளைநிலங்களில்’ பதிவு செய்திருக்கிறார். 

இது அவருடைய தன்வரலாறு என்று சுருக்கிவிட முடியாது. தன்னுடைய வளர்ச்சிக்கு உதவிய, உறவுகள் நண்பர்கள், வழிப்போக்கர்கள் என அனைவரைப்பற்றியும் பாந்தமாக இதில் எழுதியுள்ளார். ஏற்கனவே ஜோவின் கதைகளைப் படித்தவர்களுக்கு ‘அட இந்தக் கதாபாத்திரத்தைப் பத்தி போன நாவல்ல படிச்சமே’ என்று மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. அந்தளவுக்கு ஜோவின் எழுத்துகள் எளிதில் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.” என்றும், ஜோடி குரூஸின் இந்துத்துவ அரசியல் குறித்த சில விமர்சனங்களையும் முன்வைத்துப் பேசினார்.

கவிஞர் அகரமுதல்வன் பேசுகையில் “ஜோ.டி.குரூஸின் முந்தைய புத்தகங்கள் எல்லாம் அளவில் பெரியதாகவும், அதிக விலை கொண்டதாகவும் இருந்ததால் என்னால் படிக்க இயலவில்லை. ஆனால், வேர் பிடித்த விளைநிலங்களைப் படித்து முடித்த பிறகு ஒரு விஷயம் எனக்குத் தோன்றியது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் ஒரு நல்ல வாசகன், இதன் தாக்கத்தில், ரத்தமும் சதையுமாக நெய்தல் மண் சார்ந்து ஐந்து கதைகளையாவது எழுதிவிட முடியும்.” என்று பேசினார்.

கடைசியாக ஏற்புரையாற்றிய ஜோ.டி.குரூஸ், “பொதுவாக என்னை இந்துத்துவ அடிப்படைவாதத்திற்குள் அடைக்க நினைக்கிறார்கள். நீங்கள் யார் என்னை குறிப்பிட்ட வட்டத்திற்கு அடக்குவதுற்கு,  நீங்கள் வெளியே இருந்து பேசிக்கொண்டிருப்பதை, நான் அதை உள்ளே இருந்து செய்துகொண்டிருக்கிறேன். இதற்குப் பெயர்தான் சக்கர வியூகம். நான் எந்த துவத்துக்குள்ளும் அடங்காதவன். அப்படி ஏதும் பெயர் வைக்க நினைத்தால் அதற்கு ஜோ.டி.குரூஸ்தனம் என்று சொல்லிவிட்டுப் போவேன்.” என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.

புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட ஜீவா படைப்பகம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)