ஓவியங்கள் மூலமாகக் கதையைச் சொல்லும் பாணிக்குப் பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: ”ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையைச் சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது கருத்து. ”பார்வையாளனிடமிருந்து ஒரு அழகியல் சார் - எதிர்வினையைத் தூண்டவோ அல்லது ஒரு தகவலைப் பரிமாறுவதற்காகவோ வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சித்திரங்களின் தொகுப்பே காமிக்ஸ்” என்று ஸ்காட் மெக்ளவுட் கூறுவார்.
சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம். ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்தப் பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும். ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அந்தச் சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.
எந்த ஒரு படைப்பையும் போல, காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. வழக்கமாகப் புத்தகம், நாவல் படிப்பவர்கள் காமிக்ஸ் படிக்கும்போது, அதில் இருக்கும் எழுத்துகளை மட்டும் படித்துவிட்டு, கடந்து சென்று விடுவார்கள். ஆனால், அது சரியான படிக்கும் முறை அல்ல.
ஓவிய வாசிப்பு: எழுத்து சார் படைப்புகளில் இருந்து காமிக்ஸ் வேறுபடுவது, ஓவியங்களாலேயே. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் 60 முதல் 75% வரை ஓவியங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஓவியங்களைப் படிக்கும் பழக்கத்தை, ஆமாம் – படிக்கும் பழக்கத்தைத்தான் – வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓவியங்களைக் கூர்ந்து கவனித்து, நிதானமாகப் படிக்க வேண்டும்.
இலக்கணம்: நல்ல காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒரு கதாசிரியர், ஓவியர் வெறுமனே ஒரு ஓவியத்தை வரைந்து விடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருந்து திடீரென்று வேறு கோணத்தில் ஒரு ஓவியம் இருக்கிறதென்றால், அதற்குப் பின்னர் ஒரு காரணம் இருக்கும்.
ஒவ்வொரு படைப்பாளியும் தனது வாசகர்களுடன் ஒரு பகடி ஆட்டம் ஆடுகிறார். தனது படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் பேசுபொருளைக் கடந்து வேறொரு கருத்தை முன் வைப்பார். அதை Decode செய்யும் வாசகன், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து படைப்பாளிக்கு இன்னமும் நெருக்கமாகிறான்.
நன்றி - அகல் இதழ்