பதிவு செய்த நாள்

19 பிப் 2018
12:47

பாரி வள்ளல் போரில் இறந்து விட்டான். அவனது இரண்டு மகள்கள் அங்கவை, சங்கவை இருவரும் ஆதரவில்லாமல் நிற்கிறார்கள். பாரியின் நண்பரான கபிலர், அவ்விரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முயற்சி எடுக்கிறார். அதற்காக விச்சிக்கோ என்னும் அரசனை நாடுகிறார்.

பலாக்கனி உண்ட, கரிய விரல்களை உடைய ஆண் குரங்கு (கடுவன்), தன் மந்தியுடன் (பெண் குரங்கு) மலைமுகட்டில் உள்ள மூங்கில் உச்சியில் உறங்கும். அத்தகைய வளமிக்க நாட்டை உடைய அரசனே! சிறந்த வேற்படையும் யானைப்படையும் கொண்டவனே, விச்சிக்கோவே!

முல்லைக்கொடியானது பாடாது, பரிசும் கேட்காது. ஆனால் அதற்கு தன் தேரையே பரிசாகத் தந்தான் பாரி. அவனது மகளிர் இவர்கள். நீ பகைவரை வென்று தாழ்விக்கும் வலிமையுடையவன். வளமான நாட்டின் அரசன். நான் பாரி மகளிரை உனக்குத் தருகிறேன். அவர்களை மணம் முடித்து இனிதே வாழ்வாயாக... என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

ஆனால் அந்த விச்சிக்கோ என்னும் அரசன், சேர, சோழ, பாண்டிய அரசர்களுக்குப் பயந்து, பாரி மகளிரை மணந்து கொள்ள மறுத்துவிட்டான். கபிலர் மீண்டும் தன்னை வந்து சந்திக்காதபடி கதவையும் இழுத்து மூடச்சொன்னான். இதனால் புலவர்கள் கோபமுற்றனர். அன்று முதல் விச்சிக்கோவையும் அவன் வழி வந்த அரசர்களையும் பாட மறுத்து விட்டனர். மனம் வெறுத்த கபிலர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு குன்றின் மீது அமர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தார்.

பின்னர் ஔவையாரின் முயற்சியால், பாரி மகளிருக்குத் திருமணம் நடந்தது. காரி என்னும் அரசனின் மகன்கள் சோழிய ஏனாதித் திருக்கண்ணன், தேர்வன் மலையன் என்னும் அண்ணன் தம்பிகள், அங்கவை சங்கவை இருவரையும் மணந்தனர்.

கபிலர் பாடிய அந்தப் பாடல்...புறநானூற்றில் 200வது பாடலாக இடம்பெற்றுள்ளது.

'பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்

கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற்
களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே

இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்

யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே
வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன்
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை யடக்கும்
மடங்கா விளையு ணாடுகிழ வோயே.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)