பதிவு செய்த நாள்

20 பிப் 2018
18:20

ராமச்சந்திர கவிராயர் என்பவர், மிகச்சிறப்பாய்த் தனிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். அருமையான சித்திரக்கவிகளை இயற்றியுள்ளார்.

சித்திரக்கவி என்பது நால்வகைக் கவிதைகளில் ஒன்று. ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பவை அந்நால்வகைக் கவிதைகள். ஆசுகவி என்பது ஒரு பாடுபொருளைக் கொடுத்ததும் உடனே செய்யுளாக்கிச் சொல்வது. மதுரகவி என்பதில் உள்ள மதுரம் இனிமையைக் குறிக்கும். ஒரு கவிதையில் சொற்சுவையும் பொருட்சுவையும் அமையும்படி இனிமை ததும்பப் பாடுவது மதுரகவி.

சித்திரக்கவி என்பது கவிதையைக் கேட்டதும் மனக்கண்ணில் அது கூறும் நிகழ்வுகள் சித்திரமாக எழும்படி பாடுவது. சித்திரக்கவிக்குப் பொருத்தமாக சித்திரம் வரைந்து அதன் கலையின்பத்தைப் பெருக்க முடியும். வித்தாரக்கவி என்பது, ஒரு பொருளைச் சொன்னதும் அதனைப் பலவகைகளில் விளக்கியும் பெருக்கியும் பாடுவது.

இன்று நாம் எழுதும் தனித்தனிச் சிறு கவிதைகளை இந்நால்வகைக்குள் பொருத்திப் பார்க்கலாம்.

இராமச்சந்திர கவிராயர் தொண்டை நாட்டில் ஒராசுநல்லூரில் பிறந்தவர். பிற்காலத்தில் சென்னையில் வசித்தார். சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கூன் சண்டை நாடகம், இரணியவாசகப்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

புகழ்பெற்ற கவிதை வரியான  “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?”என்ற பாடலை எழுதியவரும் இவரே. வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்தேன் என்பதை, அலைச்சுவை ததும்ப ஒரு பாடலில் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் இது...

“கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்
பொல்லாத வொருவனைநான் நல்லாய் என்றேன்
போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேன்னெக் கில்லை என்றான்
யானும்என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.”

கற்காத ஒருவனைப் படித்தவனே என்றேன். காடுகளை வெட்டி வீழ்த்துபவனை நாடாளும் அரசனாய் என்றேன். பொல்லாதவனை நல்லவன் என்றேன். போர்க்களம் காணாதவனைப் புலிகளின் அரசனே என்றேன். சூம்பிப் போன தோளை மல்யுத்தம் செய்யும்  தோள் என்றேன். கொடுக்காத கையுடயவனை வள்ளல் என்றேன். இப்படி இல்லாதவற்றை எல்லாம் சொன்ன எனக்கு அவனும் இல்லை என்றான். என் குற்றத்தை உணர்ந்து பேசாமல் செல்கின்றேன்.

- தமிழ் மலை வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)