பதிவு செய்த நாள்

22 பிப் 2018
17:53

ரோஜாவும் வண்டும் பேசிக் கொள்கின்றன.

“ஏய், நீ வண்டா... வாண்டா? எதுக்கு எப்பப் பார்த்தாலும் என்னையே சுத்திச் சுத்தி வர?”

“அதுவா... எனக்கு ரோஜா மேல ஒரு மயக்கம். அதான் எப்பவும் உன்னையே சுத்திச் சுத்தி வரேன்.”

“எனக்கெல்லாம் உன்மேல மயக்கம் இல்லை. எனக்குப் பக்கதுல இருக்கு பார் இன்னொரு ரோஜா...அது மேலதான் மயக்கம்.”

“சரி பரவால்ல...ரோஜாவுக்கு இன்னொரு ரோஜா மேல வருவது உடன்நிலை மெய்மயக்கம்...வண்டான எனக்கு ரோஜாவான உன் மேல வருவது வேற்றுநிலை மெய்மயக்கம்.”

“புரியலையே.. கொஞ்சம் புரியறமாதிரிதான் சொல்லேன்.”

“சரி...சொல்றேன் கேளு. தமிழில் மெய் எழுத்துக்கள் இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து சொல் இடையில் வருவது இடைநிலை மெய்மயக்கம். இந்த இடைநிலை மெய்மயக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். அதுதான் நான் சொன்ன உடன்நிலை மெய்மயக்கமும், வேற்றுநிலை மெய்மயக்கமும்.”

“இப்பவும் புரியலை...”

“ரோஜாவுக்கு எப்பவும் அவசரம்தான். கொஞ்சம் பொறுமையா கேளு. தமிழில் 18 மெய் எழுத்துகள் இருக்கில்லையா? அதில் ர,ழ தவிர்த்த 16 மெய்களும் சொல் இடையில் இரட்டித்து வரும். அதாவது க தான் ரோஜான்னு வச்சுக்கோ... அந்த ரோஜா பக்கத்துல இன்னொரு ரோஜாதான் மயங்கும். அப்படி மயங்குறது  உடன்நிலை மெய்மயக்கம்.

உதாரணம் : 

க்க் - பக்கம், அக்கா
ம்ம் - அம்மா
ச்ச்  - பச்சை
ஞ்ஞ் - விஞ்ஞானம்
ந்ன் - மன்னன்
ல்ல் - இல்லை

இப்படிச் சொல்லிகிட்டே போகலாம். இந்தச் சொற்களில் மெய்யெழுத்துக்கு அப்புறம் அதையொட்டியே மெய்யே இடம்பெறும்?”

“இப்போ புரியுது. ப்ப் - அப்பா; ண்ண் - எண்ணெய்; ட்ட் - பாட்டி; ற்ற் - வெற்றி... இந்தச் சொற்களையும் உதாரணமா சொல்லலாம்தானே?”

“ஆமா... ஆமா... நீ புத்திசாலி ரோஜா. சீக்கிரம் புரிஞ்சுகிட்ட. ர, ழ இந்த இரண்டும் எழுத்துகள் மட்டும் முடன் மயங்காது.”

“அப்போ வேற்றுநிலை மெய்மயக்கம்ன்னா என்ன?”

“அதுவா... இப்போ ரோஜா இருக்குன்னு வச்சுக்க. அது இன்னொரு ரோஜாவுடன் மயங்காது. ரோஜாவைப் பார்த்து வண்டு மயங்குனா அது வேற்றுநிலை மெய்மயக்கம்”

“நீயே விளக்கமா சொல்லிடு.”

“வெட்கம், தம்பி, அன்பு, தொண்டர்... இந்தச் சொற்களைக் கொஞ்சம் கவனிச்சுப்பாரேன். ட் க வோடு மயங்குது. ம் ப வோட மயங்குது. ன் ப வோட மயங்குது ண் ட வோட மயங்குது.

“புரியுது புரியுது... இதை இன்னமும் தெளிவா சொல்ல முடியுமா?”

“சொல்றேன்.. தமிழ்ச் சொற்களில் க, ச, த, ப தவிர்த்து 14 மெய்களும் சொல் இடையில் குறிப்பிட்ட சில பிற மெய்களுடன் இணைந்து வரும்.

1. ட வும் ற வும் க்,ச்,ப் ஆகியவற்றுடன் மயங்கும். (வெட்கம், நீட்சி, நுட்பம், சொற்கள், பயிற்சி, கற்பு)

2. ம, ப வுடன் மயங்கும் (வம்பு, கம்பி)

3. ந, த வுடன் மயங்கும் (தந்தை, பந்து)

4. ப், ற், க், ச், ம் ஆகியவற்றுடன் ந மயங்கும் (இன்பம், நன்றி, நான்கு, நன்செய், நன்மை)

5. ப், ட், க், ம் ஆகிய மெய்களுடன் ந் மயங்கும் (வெண்பா, தொண்டர், பெண்கள், ஆண்மை)

6. ஞ, ச வுடன் மயங்கும் (இஞ்சி)

7. ங, க வுடன் மயங்கும் (சங்கு)

8. க, ச, த, ப, ம, வ ஆகியவற்றுடன் ய மயங்கும் (செய்கை, பொய்சொல், செய்தி, செய்பவன், வாய்மை, தெய்வம்)

9. க, த, ப, ம, வ ஆகியவற்றுடன் ர மயங்கும் (மார்கழி, தேர்தல், மார்பு, நேர்மை, பார்வை)

10. க, ப, வ, ய ஆகியவற்றுடன் ல மயங்கும் (செல்க, இயல்பு, கல்வி, கல்யாணி)

11. க, ப, வ ஆகியவற்றுடன் ள மயங்கும் (கொள்கை, ஆள்பவன், கொள்வேன்)

12. க, த, ப, ம, வ ஆகியவற்றுடன் ழ மயங்கும் (வாழ்க, ஆழ்தல், வீழ்பவர், ஏழ்மை, வாழ்வு)

13. வ, ய வுடன் மயங்கும் (காவ்யம் அதாவது காவியம்)

“இப்போ புரியுதா?”

“புரியுது புரியுது.. இதுக்கு எதுக்கு இவ்வளவு விளக்கம். ஒரு மெய் அதைத் தொடர்ந்து மெய்யோடு மயங்கினால் உடன்நிலை மெய்மயக்கம். ஒரு மெய் வேறொரு மெய்யோடு மயங்கினா அது வேற்றுநிலை மெய்மயக்கம் . அதானே?”

“அதேதான். ஆனா எந்த மெய் எதனோட மயங்கும்னு உனக்குத் தெரியணும் இல்லையா? அதுக்குத்தான் இத்தனை விளக்கம்.”

“சரி சரி... நான் உன்னைக்கண்டு மயங்குறேனோ இல்லையோ... உன் தமிழைக் கண்டு மயங்கறேன்.”

- நிலா அரசன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)