பதிவு செய்த நாள்

22 ஜூன் 2017
11:10

வாசிப்பு ஒரு பேரனுபவம். கைக்கொள்ள வேண்டிய வாழ்வியல் கலை. தேடலும், பெரிய மெனக்கெடலும் தேவைப்படாத இன்றைய சூழலில், வாசிப்பு என்பது நுனிப்புல் மேயும் மேலோட்டமான வழக்கமாகவே உள்ளது. நூல்களும், ஏடுகளும் எளிதில் கிடைக்கும் இன்றைய தகவல் மற்றும் இணைய யுகத்தில், வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பது சந்தேகமே. யோசித்துப் பாருங்கள், நூல்கள் என்பவை கைக்கெட்டாத தருணத்தில், வாசிப்பு என்பது அரிதாக, அதிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமேயான கௌரவ அடையாளமாக இருந்த காலகட்டத்தில், வாசிப்பை நேசிக்கும் எளியவன் ஒருவன் என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருந்திருக்கும்? அதுவும் புத்தகங்களை எரிக்கும் சர்வாதிகார ஆட்சி நிலவும் நாட்டில்? 

முதலாம் உலகப்போருக்குப் பின் 1938-ல் ஜெர்மனியில் வசிக்கிறாள் லீசல் (Liesel) என்ற 12 வயது சிறுமி. எழுதப் படிக்கத் தெரியாதபோதும் புத்தகங்கள் மீது அளவற்ற ஈர்ப்பு லீசலுக்கு. எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு, புத்தகங்கள் எங்கே கிடைத்தாலும் தேடித்தேடிப் படித்தாள். தேர்ந்த வாசிப்பு அவளை எழுதவும் வைத்தது. அவள் அப்படி என்ன எழுதினாள்?

தீவிர கம்யூனிஸ்டான லீசலின் தாய், கம்மியூனிஸ்டுகளுக்கும் யூதர்களுக்கும் பாதுகாப்பற்ற ஹிட்லரின் ஆட்சியில் தன் இரு குழந்தைகளையும் வேறொரு தம்பதியரிடம் ஒப்படைத்துவிட்டு ரயிலில் பயணிக்கிறார். போருக்குப் பின்னான கடும்பஞ்சத்தினால் வழியிலேயே லீசலின் தம்பி பசியால் மரணித்துவிடுகிறான். அவனது இறுதிச்சடங்கில், மதபோதகர் தவறவிடும் புத்தகத்தை லீசல் தன்னோடு வைத்துக் கொள்கிறாள். அதுதான் அவளுக்குக் கிடைக்கும் முதல் நூல்.

இரண்டு குழந்தைகளை எதிர்பார்த்த அந்த தம்பதியரிடம் லீசலை மட்டும் ஒப்படைத்து விட்டு அவள் தாய் சென்றுவிட, வளர்ப்புத் தந்தை மட்டுமே முதலில் அவளுடன் சிநேகமாகிறார். பள்ளியில் வாசிக்கவோ எழுதவோ தெரியாது என்பது தெரிந்துவிட சக மாணவர்களால் கிண்டலுக்கு ஆகிறாள் லீசல். அன்றிரவு அவளின் வளர்ப்புத் தந்தை லீசல் கையிலிருந்த புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறார். அவள் வாசித்த முதல் நூலே வாழ்வின் இறுதி நிமிடங்களுக்குப் பிறகு உச்சரிக்கும் தத்துவங்களும் வசனங்களும் அடங்கிய புத்தகம். வீட்டின் அடித்தளத்தில் லீசலுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக்கொடுத்து, அதன் சுவரெங்கும் புதிய சொற்களை எழுதிப் பயிற்றுவிக்கிறார் அவள் தந்தை. காட்சிகள் வண்ண வண்ணமாய் விரிகின்றன. 

தி புக் தீஃப் திரைப்படம்
தி புக் தீஃப் திரைப்படம்

ஒரு இனத்தின் அறிவுசார் ஆதாரங்களை அழிப்பதே அந்த இனத்தை அழிப்பதற்கான எளிய குறுக்கு வழி என்பதற்கு உலக வரலாறெங்கும் எத்தனையோ துயர உதாரணங்களைக் கூற முடியும். யாழ் நூலகம் பற்றியெரிந்ததுவரைக்கும் எண்ணெற்ற உதாரணங்கள் ரத்தத்தால் தோய்ந்தவை. உலக சர்வாதிகாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்று அடையாளமான ஹிட்லரும் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்தவர்தான். ‘நாஸி புத்தக எரிப்பு’ இயக்கத்தை துவக்கி, அதை நாடுமுழுதும் பரவச் செய்தார், குறிப்பாக நாஸிக்களுக்கு எதிரான புத்தகங்கள் ஹிட்லரின் முதல்குறி. 

ஊர்ப்பொதுவிடத்தில் மக்கள் அனைவரும் தாங்கள் வைத்திருக்கும் புத்தகங்களை கொண்டுவந்து குவிக்கவேண்டும். மறுப்போர் துப்பாக்கி முனையில் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவாரள். நரகம் கண்முன்னே இருப்பதால் போகும் இடம் சொர்க்கமாகத்தானே இருக்கக்கூடும். நாஸிப் படைகள் அநேக வணங்கங்களுடன் ஹிட்லரின் நாமத்தை உச்சரித்து அந்தப் புத்தகக் குவியலை மொத்தமாக எரித்து அழிக்கும். 

லீசல் குடும்பமும் அன்றைய எரிப்புக்கு புத்தகங்களை எரிக்க பணிக்கப்படுகிறார்கள். நகரத்தின் மேயரின் முன்னிலையில் நாஸிப் படைகள்சூழ, மக்கள் தங்களின் புத்தகங்களை அக்குவியலில் கொட்டுகின்றனர், கூட்டத்தில் லீசலும் நிற்கிறாள். திகுதிகுவென ஜுவாலைவிடுகிறது நெருப்புப் பயங்கரம். படையினர் கலைகிறார்கள். அவர்கள் தலைகள் மெல்ல மறைந்தபிறகு எரியும் குவியலுக்குள் பரபரவெனப் பாய்ந்து தனக்கென ஒரு புத்தகத்தை எடுத்து ஆடைக்குள் மறைத்துக் கொள்கிறாள் லீசல். ஆடைக்குள் மறைத்து வைத்த புத்தகத்தை தந்தையிடம் காட்ட, இருவரும் விரைந்து வீட்டிற்குத் திரும்புகிறார்கள். மேயரின் மனைவி  இவர்களின் இந்த ரகசியச் செய்கையை கவனித்துவிடுகிறார்.  

ஹிடலர் படைகளிடமிருந்து தப்பிக்கும் யூத இளைஞன் ஒருவன் லீசலின் வீட்டில் தஞ்சமடைகிறான். தங்கள் வீட்டின் அடித்தளத்தில் உடல்நலக் குறைவான அந்த இளைஞனுக்கு அடைக்கலம் அளிக்கிறார்கள். ஹிட்லர் எதிர்ப்புக் கொள்கையுடைய அந்த இளைஞனுடன் லீசல் நட்பாக, அவன் வாசிப்பின் பல்வேறு கதவுகளை அவளுக்குத் திறந்துவைக்கிறான். அவளின் புத்தகங்கள் மீதான தாகத்தை அவன் தணிக்கிறாரன். தன்னிடம் இருந்த ஒரு புத்தகத்தின் எழுத்துக்கள் மீது, வெள்ளை நிறம் பூசி, எழுத்துக்களை அழித்து,  முதல் பக்கத்தில் ‘எழுதத் தொடங்கு’  என்று குறிப்பிட்டு அப்புத்தகத்தை  லீசலுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அன்பளிக்கிறான். 

மேயர் வீட்டில்  துணிமணிகளைச் சலவை செய்துகொடுத்து, சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துபவள் லீசலில் வளர்ப்புத் தாய். ஒருநாள் சலவை செய்த துணிகளை மேயர் வீட்டுக்கு லீசலிடம் கொடுத்து அனுப்புகிறாள். புத்தக எரிப்பு நிகழ்வில் அவளுடைய ‘ரகசியத்தை’ ஏற்கனவே அறிந்த அவர் தன்வீட்டில் உள்ள நூலகத்தை லீசலுக்காகத் திறந்துகொடுக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வீட்டு நூலக அறைக்குள் அவளை வாஞ்சையாக அழைத்து செல்கிறார். தன்னையே மறந்து அங்குள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றையும் ஆவலோடு பார்க்கிறாள் லீசல். நீ எப்போது விரும்பினாலும் இங்குள்ள புத்தகங்களை வந்து வாசிக்கலாம் என்று கூறுகிறார் மேயரின் மனைவி. உற்சாகம் தாளாமல் தவிக்கிறாள். 

ஒவ்வொரு முறையும் சலவைத்துணிகளை கொடுக்கவரும்போதெல்லாம் மேயரின் மனைவியுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பது லீசலின் வழக்கமாகிறது. இதைக் கவனித்த மேயர் தன் மனிவியை கண்டிக்கிறார். லீசல் துரத்தப்படுவதோடு அல்லாமல் சலவைத் துணிகள் எடுக்கும் வேலையும் பறிபோகிறது. 

அதிதியாக வந்த இளைஞனின் உடல்நிலை மோசமடைகிறது. லீசலின் குடும்பமே தங்களால் முடிந்த அளவு ரகசியமாக அவனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். நினைவு தப்பிப் போகும் அவனுக்கு தினமும் ஒரு புத்தகத்தை வாசித்துக் காண்பிக்கிறாள் லீசல். அந்த புத்த்கங்கள் அனைத்தும் மேயர் வீட்டு நூலகத்தில் திருடியவை. எந்த எதிர்வினையும் இல்லாத போதும், அவனுக்காக அவள் தினமும் புத்தகங்களை வாசித்துக் காண்பிக்கிறாள். வாசிக்க வாசிக்க புத்தகங்கள் தீர்கின்றன. தீரத் தீர புத்தகங்களைத் திருடுகிறாள். மெல்ல உடல்நலம் தேறும்  அந்த இளைஞன் இனியும் அக்குடும்பத்திற்கு தன்னால் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். 

போர் மீண்டும் துவங்குகிறது. ஜெர்மன் மீது வான்வழித் தாக்குதல் நடக்கும் இரவுகளில், மக்கள் ஒரு பொதுவான ஒரு பதுங்குக் குழியில் மறைந்துகொள்ள பணிக்கப்படுகிறார்கள். அப்படியோர் இரவில் லீசல் குடும்பமும் மரணபயத்தில் ஒரு பதுங்குக் குழிக்குள் ஒளிந்துகொள்கிறது. மிக அருகில் குண்டுகள் விழும் சப்தம் கேட்கிறது. எப்போது வேண்டுமானாலும் தங்கள் மேலும் வெடிகுண்டுகள் விழலாம். உயிர்ப்பயம் நிறைந்தோடும் வேளையில், அனைவரின் உதடுகளும் சத்தமின்றி பிரார்த்திக்க சூழலெங்கும் மயான அமைதி. 

அமைதியைக் கிழித்து, மெதுவாக கதை சொல்லத் துவங்குகிறாள் லீசல். ஆரம்பத்தில் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள். பிறகு அவளைத் தொடர்ந்து சொல்லுமாறு வலியுறுத்துகிறார்கள். அந்த மரண பயத்திற்கு, அதைவிட கொடிய அந்த மயான அமைதிக்கு அச்சிறுமியின் குரலில் வெளிப்படும் கதை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. அன்பை மட்டுமே போதிக்கும் அந்தக் கதை விடியும்வரை நீள்கிறது. காலையில் தங்கள் பகுதிக்குள் குண்டுகள் தாக்குதல் இல்லை என்பதை உறுதிசெய்து அனைவரும் பதுங்கு குழிக்குள்ளிருந்து வெளியேறுகிறார்கள். அந்த இரவு ஒரு கதைசொல்லியை அந்த மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.

எதிர்பாராத இன்னொரு நள்ளிரவில், குழந்தைகளும் பெண்களும் அயர்ந்து தூங்கும் நேரத்தில் குண்டுமழை பொழியத் துவங்குகிறது. தன் வீட்டின் தரைகீழ் தளத்தில் புத்தகங்களைப் படித்துக் கொண்டே உறங்கிய லீசலைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப் படுகிறார்கள். தாய், தந்தை அவள் பக்கத்துவீட்டு நண்பன் உட்பட அனைவருமே இப்போது உயிருடன் இல்லை. 

கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து காயங்களுடன் காப்பாற்றப்படும் லீசல் அந்த யூத இளைஞன் பரிசளித்துச் சென்ற புத்தகத்தை மட்டுமே எச்சமெனக் கண்டெடுக்கிறாள். திரை இருளாகிறது. ‘லீசல் மெமிங்கர் தன்னுடைய 90வது வயதுவரை ஜெர்மனியின் எழுத்தாளராக வாழ்ந்தார்; அவர் எழுத்துக்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை’ என்ற எழுத்துகள் மின்ன, பிரையன் பெர்சிவல் இயக்கிய The Book Thief  திரைப்படம் முடிவடைகிறது. 

வாசிப்பின் சுவையறிந்த ஒருத்தியின் வாழ்வு இது. வாசிப்பிற்காக எதற்கும் துணியும் ஒரு தீராப் பற்றாளரின் வரலாற்றுத் துணுக்கு இந்தப்படம். சர்வாதிகாரத்திற்கெதிரான அசைவுவாக, மனித உயிரின் மீது செலுத்தும் அன்பாக இத்திரைப்படம் பேசும் விஷயங்கள் நுட்பமானவை. இத்தகைய எந்தப் போராட்டமும் தற்சமயம் தேவைப்படாத இன்றைய நமது சமூகமான வாழ்நிலையில்  வாசிப்பை நாம் கொண்டாடுகிறோமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்று தவறாக இருக்கலாம், ஆனால் அன்றைய சூழலில் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது போல..,களவு புகினும் கற்கை நன்றே..!

- அசோக் ஆராவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)