பதிவு செய்த நாள்

24 பிப் 2018
15:26

 “இந்தியாவின் கரிசக்காட்டுப்பூ” என்றழைக்கப்பட்ட பெண் எழுத்தாளர் யார் தெரியுமா என்று வழக்கம்போல நேற்றைய உரையாடலுக்கான தலைப்பை அப்படி முன்னால் தூக்கிப் போட்டார் நண்பர் பாஸ்கர்.

“கமலா தாஸ் தானே?” என்றேன் நான்.

“பரவாயில்லையே மலையாள இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே” என்றார் அவர்.

“அடைமொழியில் இருக்கிற கரிசல் என்கிற சொல்தான் அவரைத் தெரிந்துகொள்ள உதவியது மற்றபடி மலையாள இலக்கிய அறிமுகமெல்லாம் பெரிய அளவில் கிடையாது. புனத்தில் குஞ்ஞப்துல்லா, பஷீர், தகழி இப்போது மனோஜ் குரூர் என்று தமிழில், அதுவும் எனக்கு அறிமுகமான வெகுசிலரை, அவர் படைப்புக்களை நேசிக்கிறேன் அவ்வளவுதான்” என்றேன்.

“கமலா தாஸ் வாசித்ததில்லையா அப்போ”

“பெயர் தெரியும்.. கொஞ்சம் வாழ்க்கை விவரணைகள் தெரியும். ‘எண்ட கதா’வைப் படித்துவிட்டு அவர் கொடுத்த ஸ்டேட்மெண்ட், பிறகு அதிலிருந்து பின்வாங்கியது, தனியாகக் கட்சி ஆரம்பித்தது என்று சில பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“ஹாஹா... மொத்தமா அப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனா எங்க அப்பா கமலா தாசை ஒருதலையாகக் காதலித்தவர்னே சொல்லலாம்” என்றார்.

நான் சிரித்தேன்..

பிறகு, “சரி அவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்களேன். நீங்க சொல்லும்போது தனி ருசிதான்” என்றேன். மனிதர் பதிலுக்குச் சிரித்தார். பேச்சு இரண்டரை மணி நேரம் நீடித்தது.

“ கடும் எதிர்வினைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பேர்போனவர் மலையாள எழுத்தாளர் கமலா தாஸ். ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் கமலா. மலையாளத்தில் மாதவிக்குட்டி என்ற பேரில் எழுதிக் கொண்டிருந்தார்.

ஆரம்பங்களில் கவிதைகள் எழுதிய 
‘மாதவிக்குட்டி’யின் தாயார் நளபாட் பாலாமணி அடையாளப்பட்ட மலையாளக் கவிஞர். அப்பா விஎம்.நாயர் மாத்ருபூமியில் எடிட்டர். தாய்மாமா நளபாட் நாராயணமேனன் எழுத்தாளர். இப்படிக் குடும்பம் முழுக்க எழுத்துச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது.

திருச்சூர் புன்னையூர் குளத்தின் எளிய பெண் மக்களின் வாழ்க்கையைக் கதைகளாகவும், கவிதைகளாகவும் எழுதித்தள்ளினவரின் படைப்புகளுக்குத் தனித்த வாசகர் வட்டமே உருவாகியிருந்தது. ‘தணுப்பு’, 
‘பக்‌ஷியோட மரணம்’ சிறுகதைத் தொகுப்புகளும், 
‘பாளையன்’, ‘டயரிக்குறிப்புகள்’,‘நீர் மத்தளம் பூத்தகாலம்’ ‘வம்சத்தவர்’, ‘வண்டிக்காளைகள்’ நாவல்களும் அவரது முக்கியமான ஆக்கங்கள்.

பெண் உடல் சுதந்திரம் குறித்துத் தெளிவான அதேநேரம் காத்திரமான எழுத்துக்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. கார்ல் மார்க்ஸைப் படித்து, வியந்து தன்னை ஓர் மார்க்ஸியவாதியாக அறிவித்துக் கொண்ட அவர், ‘லோக் சேவா’ என்ற கட்சியைத் துவங்கி பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் அவரது துணிச்சலை மொத்த மலையாள இலக்கிய உலகமும் எதிர்ப்புகளோடும் ஆதரவோடும் கவனித்தது.

தனது சுயசரிதையான ‘எண்ட கதா’ நூலில் இடம்பெற்றிருந்த பாலுணர்வு விவரிப்புகளை எனக்கேயுரியது என்று அறிவித்து, பிறகு அதனை மறுதலித்தார். ஒருகட்டத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய கமலா தாஸ் ‘இந்த மதம் தான் தனக்குப் பாதுகாப்பானது’ என்று தன் பெயரை கமலா சுரைய்யா என்று மாற்றிக் கொண்டார்.

ஆனால், அடுத்தச் சில வருடங்களிலே ‘எந்த மதத்தோடும் தனக்குத் தொடர்பில்லை. எங்குமே பெண்களுக்கான உரிய மரியாதை கிடைப்பதில்லை’ என்று சுயபிரகடனம் செய்துகொண்டார்.

எழுத்தாளர், கவிஞர் என்ற அடையாளங்களைத் தாண்டி, பத்திரிகையாளர், அரசியலாளர், கேரளாவின் சாகித்ய அகாதமியின் துணைத்தலைவர், வன உயிரின காப்பகத் துணைத்தலைவர், குழந்தைகள் சினிமா அமைப்பின் தலைவர் எனப் பன்முகங்கள் அவருக்கு இருந்தன.

தன் இறுதிக் காலத்தைப் புனே நகரத்தில் கழித்த கமலாதாஸ் மறைந்தபோது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திருவனந்தபுரம் துவங்கி, கொச்சி வரைக்கும் ஆயிரக்கணக்கில் வாசகர்கள் குவிந்திருந்தார்கள். அதற்குச் சிலவாரங்கள் முன்பே தன்னுடைய ‘நளபாட்’ இல்லத்தைக் கேரள சாகித்ய அகாதமிக்கே எழுதிவைத்திருந்தார்.

-கார்த்திக் புகழேந்தி வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)