பதிவு செய்த நாள்

25 பிப் 2018
03:20

     

 கேரளாவில் அரிசிதிருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மது என்னும் பழங்குடி மனிதர் குறித்து நாடு முழுமைக்குமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. எழுத்தாளர் இரா.முருகவேள் தனது சமூக வலைதளப் பதிவில் பழங்குடியினர் வாழும் பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமை, பட்டினிச் சாவுகள் குறித்து காலனியாதிக்க காலத்தின் அடக்குமுறைகளை முன்வைத்து  எழுதியிருந்தார். அவருக்கு எதிர்வினையாக கவிஞர் போகன் சங்கர், இடதுசாரிகள் ஆட்சியிலே பழங்குடியினர்களின் இறப்புகள் அதிகம். அதைச் சொல்லாமல் தவிர்ப்பது இடதுசாரி எழுத்தாளரான இரா.முருகவேளுக்குச் சரியானதல்ல என்கிற ரீதியில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
 

எழுத்தாளர் இரா.முருகவேள் பதிவு 
காலனியாட்சிக்கு முன்பு சமவெளிகள் போலக் காடுகளில் தனியுடமை இல்லை. காடு முழுவதும் பழங்குடி இனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. விவசாயமும் எரித்துப் பயிரிடும் கூட்டு் விவசாயமாகவே இருந்தது. 

ஆங்கில ஆட்சி பழங்குடி மக்களிடையே தனி உடமை பற்றிய பட்டயங்களோ ஆவணங்களோ இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பகுதி காடுகளைப் பேரரசின் பயன்பாட்டுக்கு என்று ரிசர்வ் காடுகளாக அறிவித்தது. ஒரு பகுதி காடுகளை ரெவின்யூ காடுகள் என்று சொன்னது. ஜமீன்கள், கோவிலகங்கள் எனக் கீழிருந்த பெரு நில உடமையாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் சமவெளி மக்களின் பயன்பாடுக்குத் திறந்து விடப்பட்டன. 

பழங்குடி மக்களை வெள்ளை அரசு பணயக் கைதிகளாகவே பயன்படுத்தியது. அவர்களை வதைத்து வறுபுறுத்தி வேலை வாங்கிக் காடுகளில் தேக்கும் யூக்கலிப்டஸும் பயிரிட்டது. மரம் வெட்டுவதற்காகக் கூப்புச் சாலைகள் அமைத்தது. ரிசர்வ் காட்டில் வராத அவர்களின் நிலங்கள் சமவெளி பேராசைக்காரர்களால் ஆகிரமிக்கப்பட்டன. விஷகன்யா என்ற மலையாள நாவல் வயநாட்டில் குடியேறிய சிரியன் கிருத்துவர்களைப் பற்றிய சோகக் கதை. ஆனால் அது பழங்குடி மக்களின் நிலங்கள் ஆகிரமிக்கப்பட்ட கதை. மக்கள் அடிமையாக்கப்பட்ட கதை. சமெவெளி மக்களால் அடிமையாக்கப்பட்ட ஒரு பழங்குடி இனத்தின் பெயர் பணியர் (பணி செய்பவர்கள்) என்று ஆகிவிட்டது. 

முதுமலையில் பழங்குடி மக்கள் ஆடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு தேக்கு பயிரிடச் செய்யப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த கிராம்ங்கள் இருந்த இடங்களையே மறந்து போயினர். 

இந்தியா முழுவதும் நடந்த இந்தக் கொடுமைகளின் காரணமாகப் பழங்குடி மக்களுக்கும் வெள்ளை அரசுக்கும் இடையே சுமார் 150 யுத்தங்கள் நடந்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறக்கப்பட்ட வரலாறு அது. 

சுதந்திர இந்தியா அரசியல் சட்டத்தின் 5வது ஷெட்யூல் பழங்குடி பகுதிகளுக்கு விஷேஷ உரிமைகள் அளித்தாலும் தேயிலைத் தோட்டங்கள், சுரங்கங்கள், அணைகள், பெரும் உடமையாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் ஆகியவை இருந்த காடுகள் 5 வது ஷெயூலின் கீழ் கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுதான் காடுகளில் நிலவும் கலக மனநிலை. அருந்ததி ராய் வாக்கிங் வித் காம்ரேட்ஸ்லில் சொல்வது போல மாவோ பிறந்ததற்கு முன்பிருந்தே நடந்து வரும் போர் இது. 

அட்டப்பாடி பள்ளத்தாக்கின் பெரும்பகுதி நிலம்பூர் கோவிலகம் என்ற கேரள ஜமீனின் கீழிருந்தது. பழசிராஜா, மப்ளா எழுச்சி கதைகளில் அடிபடுமே அதே நிலம்பூர் கோவிலகம். தமிழகக் கேரளப் பகுதிகளில் இறுதியாக அரசின் கட்டுப்பாடுக்குக் கொண்டு வரப்பட்ட பகுதி இதுதான். இன்று வனத்துறை இந்திய நிலப்பரப்பில் 11 சதவீத நிலப்பரப்பை தன் இரும்புப் பிடியில் வைத்துக் கொண்டு பெரும் நிலப்பிரபுவாக இருக்கிறது. 


ரிசர்வ் காட்டில் இல்லாத பல பழங்குடி மக்களின் நிலங்கள் கீழிருந்து வந்த மலையாளி தமிழ் மக்களால் கைப்பற்றப்பட்டு அவற்றுக்கு அரசால் பட்டாவும் வழங்கப்பட்டது.

 

இந்தக் குடியேறிகளும் ஆசிரமங்களும் அரசும், அகழிகளும் மு்ள்வேலிகளும் மின்சார வேலிகளூம் அமைத்துத் தங்கள் நிலங்களைக் காப்பதாலும் யானைகளின் வழித்தடங்களில் பெரும் அணைகளும் சுரங்கங்களும் அமைப்பதாலும் யானைகளும் மான்களும் காட்டெருமைகளும் பழங்குடி மக்களிடம் எஞ்சியிருக்கும் நிலங்களைத் தாக்குகின்றன.  

சொந்த நிலங்களில் பயிரிட முடியாதவர்கள், ரிசர்வ் காட்டிலிருந்து வனந்த்துறையால் துரத்தப்பட்டவர்கள், நிலங்களைக் குடியேறிகளின் இழந்தவர்கள் செங்கல் சூளைகளிலும் கேம்ப்கூலி மில்களிலும் வதை படுகின்றனர். 

எங்கள் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காடு தொடங்கிவிடுகிறது. மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லமுடியாத ஆனால் நடப்பு சூழலைப் புரிந்து கொள்ள முடியாத பல பழங்குடி ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். யானையைத் தடி கொண்டு அடித்தவர், சிறுத்தை உலாவும் ஓடையருகே மாடுகளை விட்டுவிட்டுப் புல்லில் படுத்துத் துங்கியவர் என்று. தங்கள் உலகுக்கும் இந்தப் பேராசைக்காரகள் உலகுக்கும் இடையே ஒரு மாய உலகில் வாழ்பவர்கள் இவர்கள். 

ஒரு மது அல்ல. வீரப்பன் வேட்டையில் கொல்லப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கோவை மன்னார்க்காடு சிறைகளில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் என்று அடைக்கப்பட்டு டிபி வந்து உயிர் விட்டவர்கள், மில்களில் வதைபடுபவர்கள்... 

உத்பலேந்து சக்ரவர்த்தியின் வங்காள மொழிப்படம் போஸ்ட்மார்ட்டம். பசி தாங்க முடியாமல் காட்டில் தற்கொலை செய்து கொண்ட ஒரு சந்தால் பழங்குடியின் உடலை போஸ்ட்மார்டம் செய்யாமல் கொடுக்க முடியாது என்று போலீஸ் சொல்லிவிடுகிறது. 

மக்கள் பொறுமையுடன் காத்திருகின்றனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும் அவனது அம்மா கேட்கிறார்.
“அந்தக் குடல்களில் ஒரு பருக்கை சோற்றையாவது பார்த்தீர்களா?”
***
கவிஞர்.போகன் சங்கர் எதிர்வினை:
 “எழுத்தாளர் முருகவேள் கேரளத்தில் ஆதிவாசி பிரச்சினை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அவர் மேல் மதிப்புண்டு.ஆனால் இந்தப் பதிவில் அவர் சொல்லாமல் மவுனமாக விட்டுச் சென்றிருக்கிற இடங்கள் அந்த மரியாதையைச் சிதைத்திருக்கிறது.அந்தப் பதிவில் அது ஏதோ வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற பிரச்சினை என்பது போன்ற ஒரு பிம்பத்தை மட்டும் மிகக்கவனமாக எழுப்பி இருக்கிறார்.வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஐந்து வருடங்களில் ஐனூறுக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நடைபெற்றதில்லை.கேரளத்தில் ஆதிவாசிகளிடையே இன்னமும் பட்டினிச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் இடது சாரிகள் காங்கிரஸ் ஆட்சிகள் தான் மாறி மாறி நடந்துவருகின்றன.அதிலும் இடது சாரிகளின் ஆட்சியில்தான் ஆதிவாசிகள் அதிகம் இறந்திருக்கிறார்கள். 
அவர் ஆதிவாசி விமோசன முன்னணி பற்றி எழுதவில்லை.ஆதிவாசிகோத்ர சபா பற்றி எழுதவில்லை.முதங்கா சமரம் பற்றி எழுதவில்லை.அரளம் சமரம் பற்றி எழுதவில்லை.செங்காரா சமரம் பற்றி எழுதவில்லை.அரிப்பா சமரம்,பொட்டனசிரா போராட்டம்...என்று அவர் எழுதாத விசயங்கள் நீள்கின்றன.இவற்றில் கலந்துகொண்டு அடக்குமுறையாலும் பட்டினியாலும் இறந்த ஆதிவாசிகளின் எண்ணிக்கை அதிகம்.அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் முதலில் சேர்ந்து அவர்களது இரட்டை வேடம் கண்டு கசந்து வெளியேறிய ஆதிவாசி சமூகப் போராளி ஜானு பற்றி எழுதவில்லை.தனிப்பட்ட முறையில் ஆதிவாசிகளின் வனங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பெரு நிலக்கிழார்கள் பற்றியும் அவர்களில் பெரும்பாலோனோர் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்புடையவர்கள் என்பது பற்றி எழுதவில்லை.அவர்கள் ஆதிவாசிகளுக்குக் கொடுத்த உறுதிமொழிகளைத் திரும்பத் திரும்ப மீறுவது பற்றி எழுதவில்லை. 
அந்தப் பதிவில் அவர் எழுதியிருப்பது வெள்ளைக்காரர்கள் கொடியவர்கள்.ஆதிவாசிகளுக்கு உலகம் தெரியவில்லை என்பதுதான்.முத்தாய்ப்பாய் மரபுப்படி ஒரு பழைய வங்காளத்திரைப்படத்திலிருந்து உணர்ச்சிச் சொட்டு. 

நல்லது. லால் சலாம்.”
***
இது தொடர்பாக, காட்டுவளத்தை அரசியல் கட்சிகள் எவ்வாறு காப்பகப்படுத்தி பழங்குடியின வாழ்க்கையைச் சிதைத்தது என்பது தொடர்பான நீண்ட உரையாடல் எழுத்தாளர்கள் இருவருக்குள்ளும் நடைபெற்றது.  

இரா.முருகவேள்,போகன்சங்கர்
இரா.முருகவேள்,போகன்சங்கர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)