பதிவு செய்த நாள்

26 பிப் 2018
15:46

பாட்டிலேயே விடுகதைகளும் புதிர்களும் போடுவது அக்காலத்துப் புலவர்களின் விளையாட்டு. அவர்கள் ஒரு பாட்டைக் கூறிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கான விடையைத் தேடி ஊரே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும். கடைசியில் பாட்டைச் சொன்ன புலவரையே தேடிப்பிடித்து “புலவரே… இந்தப் பாட்டுக்கான விடையைத் தாங்களே கூறிவிடுங்கள்… எங்களால் ஆவல் தாங்க முடியவில்லை…” என்று வேண்டுவார்கள்.

ஊரார் படும்பாட்டைக் கண்டு மெல்லச் சிரிக்கும் புலவர் அந்தப் பாட்டுக்கான விடையைக் கூறுவார். விடை கேட்டு மெய்சிலிர்க்கும் கூட்டம் புலவரை வியந்து பாராட்டும். அப்படி எண்ணற்ற விடுகதைத் தனிப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

'பூனைக்குப் பதினேழுகால்
புள்ளினத்துக்கு ஒன்பதுகால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை
மாட்டுக்குக் கொம்பில்லை'

பூனைக்கு எப்படிப் பதினேழு கால்கள் இருக்க முடியும்? புள்ளினங்கள் எனப்படுகின்ற பறவைகளுக்கு ஒன்பது கால்களா ? யானைக்கும் பதினேழு கால்களா ? காலில்லாத ஆடு உண்டா?
கொம்பில்லாத மாடு உண்டா? ஒன்றும் விளங்கவில்லைதானே!
பதினேழு கால் என்பதைப் பெருக்கல் வாய்பாட்டில் கொண்டுவந்தால் என்ன வரும்?
பதினேழு கால்கள் எத்தனை?
17 X ¼ = 4 ¼

விடை : நாலே கால். பூனைக்கு நாலே (நான்கு) கால். விடை வந்துவிட்டதா ?
புள்ளினத்துக்கு ஒன்பது கால் என்றால் எப்படி? அதற்கும் பெருக்க வேண்டும்.
9 X ¼ = 2 ¼

விடை : இரண்டே கால். புள்ளினத்துக்கு இரண்டே கால். அதாவது பறவைகளுக்கு இரண்டு கால்கள்.
யானைக்கும் நாலே கால்.

ஆட்டுக்குக் காலில்லை. ஆடு என்று எழுதும் போது நெடிலுக்குப் போடுகின்ற (கா, சா, தா) துணைக்கால் பயன்படுத்தமாட்டோம். அதனால் ஆட்டுக்குக் காலில்லை.

மாட்டுக்குக் கொம்பில்லை. மாடு என்று எழுதும்போது (மெ, மே, கெ, கே) பிற எழுத்துகளுக்குப் பயன்படுத்துகின்ற ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்புகளைப் பயன்படுத்தமாட்டோம். அதனால் மாட்டுக்குக் கொம்பில்லை.

- மகுடேசுவரன்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)