பதிவு செய்த நாள்

26 பிப் 2018
17:18

வியா திண்டாடிப் போய்விட்டாள். இரவில் இரண்டு மூன்றுமுறை என்னை அழைத்தாள். இயற்பியலில் அவள் கேட்ட சந்தேகங்களுக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை. ஓவியாவும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து, இயற்பியலில் இரண்டு மூன்று சார்ட்டுகளை வரைந்தும், எழுதியும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும்.

நாளை மறுநாள், பள்ளியில் அறிவியல் கண்காட்சி. என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று தெரியும். ஆனால், அவற்றின் அர்த்தம் முழுமையாகப் புரிந்தால் தானே, சார்ட்டை தயாரிக்க முடியும்?

“சொந்தமா எழுதும்போது, அவ்வளவு சந்தேகம் வருது மிஸ்? நான் படிக்கற ஃபிசிக்ஸ் எங்கம்மாவுக்கும் தெரியலை. அப்பாவுக்கும் தெரியலை. அப்புறம், கதிரைத்தான் கேட்டேன். அவனும் குழப்பிட்டான். என்ன பண்றதுன்னே தெரியல மிஸ்?”

“கிளாஸுல மிஸ் நடத்தும்போதே கேக்கவேண்டியதுதானே? அதை அடிப்படையா வெச்சுதானே சார்ட் செய்யச் சொல்லுவாங்க?” உமா மிஸ் கேட்டார்.

“உண்மைதான் மிஸ். அப்போ புரிஞ்சா மாதிரி இருந்தது. வீட்டுக்குப் போய் அதே சோதனைகளையும் பாடத்தையும் திருப்பிப் படிச்சா, நிறைய சந்தேகம் வந்துடுச்சு மிஸ்.”

“ஓவியா கரெக்டா சொன்னா மிஸ். கணக்குக்கூட அப்படித்தான். கிளாஸ்ல கணக்குப் போடும்போது நல்லா புரியுது. வீட்டுக்குப் போய் அதையே திருப்பி ஒர்க் பண்ணினா, சரியாவே வரமாட்டேங்குது மிஸ்…” என் நீண்டநாள் புராணத்தை மீண்டும் உமா மிஸ்ஸிடம் சொன்னேன்.

“இதை ரொம்ப சுலபமா தீர்க்க முடியும். பல நாடுகள்ல ஃபிளிப்டு லேர்னிங் முறை வந்துடுச்சு. பல ஸ்கூல்கள்ல இதைப் பயன்படுத்தறாங்க” என்று மிஸ் சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது, மாணவர்கள் வகுப்பில் செய்வதை வீட்டில் செய்ய வேண்டும், வீட்டில் செய்வதை வகுப்பில் செய்யவேண்டும். கல்வி கற்கும் முறையையே திருப்பிப் போடும் முறை இது.

“ஆமா, நீங்க உங்கள் வீட்டு கம்ப்யூட்டர்லேயே எல்லா பாடங்களையும் வீடியோவா பார்த்துக்கலாம். உங்களோட ஸ்பீடுக்கு ஏத்தாமாதிரி, நிறுத்தி, நிறுத்திக்கூடப் பார்த்துக்கலாம். கூடவே, அவங்க சொல்றது புரியலன்னா, அதை குறிச்சு வெச்சுக்கலாம். திருப்பிப் போட்டுப் பார்க்கலாம். எல்லாமே உங்க செளகரியத்துக்கு ஏத்த மாதிரி செஞ்சுக்கலாம்.”

“அப்போ கிளாஸ்ல என்ன செய்யணும் மிஸ்?”

“இத்தனை நாளா வீட்டுல என்னவெல்லாம் செஞ்சீங்களோ, அதை வகுப்புல செய்யணும். பிராஜக்ட் செய்யணும், கணக்கு பிராக்டீஸ் செய்யணும், சார்ட் எழுதணும், சந்தேகங்களைக் கேக்கணும், அறிவியல் சோதனை செய்து பார்க்கணும்… எல்லாத்தையும் நடைமுறை ரீதியா புரிஞ்சுக்கறதுக்கான இடமா வகுப்பு மாறிடும்.”

“இதுல என்ன செளகரியம் மிஸ்?” ஓவியா கேட்டாள்.

“வகுப்புல இரண்டு விஷயங்கள் நடக்குது. ஒண்ணு, உங்களுக்குப் பாடங்களைச் சொல்லித் தரணும். இன்னொண்ணு, நீங்கள் அதை மனசுல வாங்கிக்கிட்டீங்களா, புரிஞ்சுக்கிட்டீங்களான்னு பார்க்கணும். பெரும்பாலும் வகுப்புகள்ல முதல் விஷயம் தான் நடக்கும். இரண்டாவது விஷயத்துல அவ்வளவு கவனம் செலுத்த முடியாது. காரணம், நேரம் கிடையாது. அல்லது வேற வேலை வந்துவிடும். ஃபிளிப்டு கற்றல் முறையில, முதல் வேலையை நீங்களே செஞ்சுடுவீங்க. இரண்டாவது வேலையில ஆசிரியர் உதவியோட இன்னும் நல்லா செய்யமுடியும்…”

“ஓ! அப்போ, அப்பா அம்மாவுக்கு ஒரு கவலையும் இல்ல.”

“ஆமாம். நீங்கள் ஒரு சப்ஜெக்டை நல்லா புரிஞ்சுக்கிட்டீங்களான்னு தான் அவங்க பார்ப்பாங்க. இன்னிக்குப் புரிஞ்சுக்கறதுதான் பெரிய சவாலா இருக்கு. போன ஆண்டு படிச்சது இந்த ஆண்டு உங்களுக்கு ஞாபகமிருக்கா? இருக்காது. ஏன் தெரியுமா? நீங்கள் ஒவ்வொரு பாடத்தையும் புரிஞ்சுக்கிட்டு, மனசுல பதிய வெச்சுக்கறது இல்ல. எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சோ, அவ்வப்போது, கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கிட்டோ ஒப்பேத்திடறீங்க. ஆனால், ஃபிளிப்டு கற்றல் முறையில, எல்லாத்தையும் வகுப்பறையிலேயே செஞ்சு பார்ப்பீங்க. மத்த மாணவர்களோடவும் வகுப்பு ஆசிரியரோடவும் பேசுவீங்க, விவாதிப்பீங்க… எல்லாமே மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சுடும்.”

“அப்போ, கிளாஸே வித்தியாசமா மாறிடும் மிஸ்?”

“ஆமாம். அது வெறும் கத்துக்கொடுக்கற இடமா இருக்காது. புரிஞ்சுக்க வெக்கற இடமா மாறிப் போகும்.”

“வீடியோ எப்படி கிடைக்கும் மிஸ்?” நான் கேட்டேன்.

“இன்னிக்கு பல நிறுவனங்கள் ஏராளமான சப்ஜெக்ட் வீடியோக்களை இணையத்துல வெளியிட்டு இருக்காங்க. சொல்லப் போனா, கொட்டிக் கிடக்கு. உங்களுக்குத் தேவையான வீடியோக்களை உங்கள் வகுப்பு ஆசிரியர் குறிச்சுக் கொடுத்துட்டா போதும். அதை நீங்கள் கணினியிலோ, ஐபேடிலோ, மொபைல் போனிலோ கூடப் பார்க்கலாம்.” என்றார் உமா மிஸ்.

“நைட்டு தூங்கிட்டா, வீடியோவைப் பார்க்க முடியாதே மிஸ்?” ஓவியா கொஞ்சம் தயக்கத்தோடு கேட்டாள். கூடவே வெட்கமும் கூட.

“மதியம் லஞ்ச் டைம்ல, கம்ப்யூட்டர் அறையில போய் பார்க்கலாம். லைப்ரரியில உட்கார்ந்து பார்க்கலாம். அப்புறம், கிளாஸுக்கு வரலாம். இங்கே வீடியோ பாடம் ரொம்ப நேரம் எடுத்துக்காது. அதைப் புரியவைக்கறது உங்கள் சப்ஜெட்க் டீச்சர்ஸ் நெறைய நேரம் எடுத்துப்பாங்க. அதுதானே உங்களுக்குத் தேவை.”

வீட்டில் கணினி முன் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்காமல், சப்ஜெக்ட் வீடியோக்களைப் பார்ப்பது எவ்வளவு செளகரியம்? அதைவிட, வகுப்பில் வந்து சேரைத் தேய்க்காமல், சுறுசுறுப்பாக ஓடியாடி, சோதனைகளைச் செய்து, பாடத்தைப் புரிந்துகொள்வது இன்னும் சுவாரசியமாக இருக்குமே? யோசிக்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

தகவல் பெட்டகம்

*
ஃபிளிப்டு கற்றல்முறைக்குப் பெரிய அளவில் பங்களித்தவர்களில் முக்கியமானவர் சல்மான் கான் எனும் அமெரிக்கக் கல்வியாளர். உறவுப் பெண் ஒருத்திக்காக, இவர் தனது வகுப்பறைப் பாடங்களை வீடியோ பதிவுசெய்து வைத்தார். அதன் தொடர்ச்சியாகவே 'கான் அகாடமி' என்ற இலவச ஆன்லைன் கல்விச் சேவை தொடங்கியது.

* ஜொனாதன் பெர்க்மன் என்ற மற்றொரு அமெரிக்கர் வேதியியல் ஆசிரியர், இந்தக் கற்றல்முறையை மேம்படுத்தியவர். இவர், சர்வதேச அளவில் இக்கல்விமுறையைக் கொண்டுசெல்லும் வகையில், ஏராளமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

- ஆர்.வெங்கடேஷ்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)