தலைப்பு : வியாபார நரி
ஆசிரியர் : ஃபையனா சொலாஸ்கோ, தமிழில் : சரவணன் பார்த்தசாரதி
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : 150/-

பதிவு செய்த நாள்

27 பிப் 2018
16:48

உங்கள் எல்லோருக்கும் மரங்கொத்திப் பறவையைத் தெரியும் தானே? மரத்தைப் பற்றிக்கொண்டு இருக்கும் அதன் கூர்மையான நகங்களையும், மரங்களைக் கொத்தி துளையிடும் வலிமை மிகுந்த அலகையும் பார்த்திருப்பீர்கள். மற்றெந்தப் பறவையையும்விட இதற்கு அவை எப்படி வந்தன என்பது பற்றிய ஒரு ரஷ்ய நாடோடிக் கதைதான் இது.

கா
ட்டில் இர்னடு ஓநாய்கள் வசித்தன. அவற்றிற்கு வயதாகிவிட்டது. முன்போல் அவற்றால் வேட்டையாட முடியவில்லை. எனவே, ஆற்றைக் கடந்து, காட்டின் இன்னொரு பகுதிக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்தன.

கணவர் ஓநாய் ஆயுதங்கள் தயாரிக்கும் கொல்லர் வேலைகளில் கைதேர்ந்தது. அதனால் படகு ஒன்றைக் கட்டுவதற்கான மரத்தைத் தேடி காட்டிற்குள் சென்றது. மனைவியோ புதிய இடத்தில் வாழத் தேவையான தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு, தள்ளாத வயதில் மெதுவாக அசைந்து ஆடி ஆற்றங்கரையை அடைந்தது. அங்கே தன் கணவருக்காகக் காத்திருக்கத் தொடங்கியது.

அப்போது ஆற்றில் படகை ஓட்டிக்கொண்டு போன நரியொன்று, கரையிலிருக்கும் பெண் ஓநாயைப் பார்த்தது. அக்கரைக்குப் போவதற்காகத்தான் அது காத்திருக்கிறது என்று உணர்ந்துகொண்ட நரி, பெண் ஓநாயைப் பார்த்து, “நான், தங்களைக் கொண்டுபோய் அக்கரையில் விடுகிறேன். வருகிறீர்களா?” என்று கேட்டது.

கணவர் வரும் வரையில் காத்திருப்பதைவிட, நரியுடன் படகில் அக்கரைக்குச் சென்று, வாழத் தகுதியான இடம் பார்த்து வைக்கலாம் என்று எண்ணிய அதுவும், “சரி.” என்று சொல்லிற்று. தன்னுடைய பொருட்களையெல்லாம் அந்தப் படகில் வைத்துவிட்டு, தானும் ஏறி அமர முயன்றது அந்தப் பெண் ஓநாய்.

“நீங்களும் ஏறினால் படகு மூழ்கிவிடும். எனவே, நான் முதலில் இந்தப் பொருட்களைக் கொண்டுபோய் அக்கரையில் இறக்கிவைத்துவிட்டுத் திரும்பி வருகிறேன்.” என்றது நரி.

‘அதுவும் நல்ல யோசனைதான்.’ என்று நினைத்த ஓநாய், கரையிலேயே நின்றுகொண்டது. நரி தன்னுடைய படகைக் கிளப்பியது. ஆற்றின் அக்கரைக்குப் போகவேண்டிய படகு, வேறு பக்கமாகப் போகத் தொடங்கியது. முதலில் அசட்டையாக இருந்த ஓநாய், சிறிது நேரம் கழித்துதான் நரி தன்னுடைய பொருட்களைத் திருடிச்செல்கிறது என்பதையே புரிந்துகொண்டது. ஏமாற்றம் தாங்கமுடியாமல் அங்கேயே அமர்ந்து அழத்தொடங்கியது.

அங்கே வந்த மரங்கொத்திப் பறவை ஒன்று, நடந்த எல்லாவற்றையும் ஓநாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது. பிறகு, நரி சென்ற திசையிலேயே அதுவும் பறந்து போனது. அந்தக் காட்டின் மறுபகுதியில், அந்த ஆறு வளைந்து திரும்பும் இடம் ஒன்று இருந்தது. மரங்கொத்தி அந்த வளைவை ஒட்டியிருந்த மரமொன்றில் போய் அமர்ந்துகொண்டது.

நரி, தன் படகில் அந்த வழியே போவதைக் கண்டதும், “அய்யா, நரியாரே! என்னைப் படகில் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று கேட்டது மரங்கொத்தி, “வா. ஏறிக்கொள்.” என்றது நரி. படகில் ஏறிக்கொண்ட மரங்கொத்தி, படகின் முன்புறம் இருந்த பைகளுக்குப் பின்னால் போய் மறைவாக நின்றுகொண்டது. நரியின் கவனத்தைக் கவராமல் அது படகின் அடிப்பகுதியில் தனது அலகினால் ஓட்டை போட்டது. சிறிது நேரத்தில் படகிற்குள் தண்ணீர் வரத்தொடங்கியது.

“நம்மால் இந்த ஓட்டையை அடைக முடியுமா?” என்று கவலையுடன் கேட்டது நரி.

“கட்டைகளை இணைத்துக் கட்டியிருக்கும் நார்தான் பிரிந்திருக்கிறது. படகைக் கரையோரமாக நிறுத்தி கயிற்றை வைத்துக் கட்டிவிட்டோம் என்றால், கவலையில்லாமல் நாம் மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.” என்றது அந்த மரங்கொத்தி.

அவை இரண்டும் படகைக் கொண்டு வந்து கரையை ஒட்டி நிறுத்தின. கயிற்றைத் தேடி நரி காட்டிற்குள் போக, மரங்கொத்தியோ படலிலேயே நின்றுகொண்டது. நரியின் தலை மறைந்தவுடன், அங்கிருந்த சில குச்சிகளை வைத்து ஓட்டையை நறுக்கென்று அடைத்துவிட்டுப் படகைக் கிளப்பியது.

அது நடு ஆற்றிற்குப் போன பிறகு அங்கே வந்த நரி, “ஏய் திருடா நில்” என்று கத்தியது.

“நரியே! நீ என்னைத் திருடன் என்று சொல்லாதே. நீதான் திருடன். இந்தப் பொருட்கள் எல்லாம் உன்னுடையவை அல்ல என்பதையும், அதன் சொந்தக்காரர்கள் யார் என்பதையும் நான் அறிவேன்” என்றபடியே படகை வேகமாகச் செலுத்தியது மரங்கொத்தி.

அந்த மரங்கொத்தி, படகு நிறையப் பொருட்களோடு வயதான அந்த ஓநாய் தம்பதியை வந்து சந்தித்தது. தொலைந்துபோன தங்களுடைய பொர்டுகள் கிடைத்த மகிழ்ச்சியில் “உனக்கு ஏதாவது தர வேண்டும்.” என்றன ஓநாய்கள்.

தங்களுடைய பொருட்களில் இருந்து பளபளப்பான ஓர் உடையை எடுத்து அதனிடம் கொடுத்தது பென் ஓநாய். அதை அணிந்து கொண்டதும் மரங்கொத்தி மிகவும் அழகாக மாறிவிட்டது.

கொல்லரான ஆண் ஓநாய், தன் பங்கிற்கு இரும்பால் ஆன அலகையும், கூர்மையான கால் நகங்களையும் மரங்கொத்தியிடம் வழங்கியது. அவற்றை அணிந்துகொண்ட பின் மரங்கொத்தியின் உருவமே மாறிவிட்டது. அது அவர்களிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டது.

இப்படித்தான், மரங்கொத்திக்கு பளபளப்பான சிறகுகளும், இரும்பைப்போல் உறுதியான அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும் உருவாகின.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)