பதிவு செய்த நாள்

28 பிப் 2018
11:23

இம்மாத உயிர்மையில், சைலபதி அவர்களின் சிறுகதையொன்றை வாசித்தேன். துச்சாதனனின் துகிலுரிப்புச் சம்பவத்தில் இப்படி ஒரு கோணம் இருப்பதை உணர்த்தும் விதமான கதை. கோயிலொன்றில், மிகப் பொருத்தமான வண்ணத்தில் உடையணிந்து அம்மன் சிலை கணக்கா வடிவாகவும் தெய்வீகமாகவும் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டு, ”அரக்கு கலர் பட்டுப்புடவைல எப்படிப் பாந்தமா இருக்கா பாருங்க இந்தப் பொண்ணு ? “ என்று தன் கணவனிடம் வியந்துச் சொல்கிறாள் அவள். 
” துரியன் பொஞ்சாதி மாதிரி அடுத்தவப் புடவைக்கு ஆசைப்படாதடி “ என்று நக்கலாகச் சொல்லிச் சிரிக்கிறான் அவன். 
அருகிலிருந்த பேத்திக்கு ஆர்வம் தொத்திக் கொள்கிறது. அதென்ன தாத்தா துரியன் பொஞ்சாதி ஆசைப்பட்ட கத ? 
எப்படா எவன்டா நம்மக்கிட்ட எதுனா கேப்பான்னு அலைஞ்சிக்கிட்டிருக்க வயது அந்த முதியவருக்கு. அதீத ஆவலுடன் தன் பேத்திக்கு கதை சொல்லத் தொண்டையைச் செருமித் தயாராகிறார். பட்டென்று தன் கணவரை முறைத்து கையமர்த்துகிறாள் அவள். பேத்தியிடம் திரும்பி, ” எல்லாக் கதைகளையுமே ஆம்பிளைங்கச் சொல்லிக் கேக்கக்கூடாது கண்ணம்மா “ 

“ஏன் பாட்டி ?” 

” ஆம்பிளைங்க, பொம்பளைங்களப் பத்திச் சொல்றக் கதைகள்ல பாதிக்குப் பாதி, பொம்பளைங்களப் பத்தின அபாண்டமாத்தான் இருக்கும் ” 

 “சரி அப்ப நீயே சொல்லு.” 

 சகுனி கூட நடந்த சூதாட்டத்துல தர்மன் நாடு, நகரம், சொத்து, பத்து போக, அவங்க அஞ்சு பேரையும் வச்சும் தோத்துப் போயிடறான். மிஞ்சுனது திரெளபதி. அவளையும் வச்சி ஆடி தோத்தாச்சு. வெற்றிக் களிப்புல, ”இங்க சபைக்கு இழுத்துட்டு வாங்கடா அவள “ ன்னு உத்தரவு போடறான் துரியோதனன். 

அண்ணன் ஏதோ நல்ல காரியம் செய்யச் சொல்லிட்டாப்பல துள்ளிக்கிட்டு அந்தப்புரத்துக்கு ஓடுறான் துச்சாதனன். அங்க போனா வவுத்து வலியில துடிச்சிக்கிட்டு கவுந்துப் படுத்துக் கெடக்கா பாஞ்சாலி. 

 “கெளம்பு கெளம்பு சபைக்கு” 

 “அடப்போடா,  நானே வீட்டுக்குத் தூரமாக் கெடக்கேன், அங்கெல்லாம் வர முடியாது, போ போ.” என்கிறாள்.  

ஆம்பளைக்குத் தெரியுமா வீட்டுக்குத் தூரம்ன்னா ? அவ ஏதோ உளறிக்கிட்டிருகான்னு அந்தக் கிறுக்கன் நம்பறான். அதப்போய் அண்ணன்காரங்கிட்டயும் சொல்றான். அவ வீட்டுக்குத் தூரம்ன்னுல்ல, நாட்டுக்கே தூரமாயிருந்தாலும் இப்ப இங்க வந்தாகணும் என்று பாஞ்சாலியோட முடியப் பிடிச்சி தரதரன்னு அரசவைக்கு இழுத்துட்டு வந்து நிறுத்தறான் துச்சாதனன். 

சபைல அம்புட்டு ஊரு சனமும் இருக்கு. தோத்துப் போன அஞ்சு புருஷமாரும் தலை குனிஞ்சி நிக்குதுங்க. அத்தனை பேருக்கு முன்னால துரியோதனன் சொல்றான். 

 “அவ சேலைய உரிடா “ 

எங்கயாவது அண்ணன்காரனே அவன் தம்பிகிட்ட ஒரு பொம்பளச் சேலைய உருவச் சொல்வானா ? ஊருக்குள்ள தப்பு செய்யறவன் எல்லாம் முடிஞ்சவரைக்கும் தன் வீட்டுக்குள்ளார பயந்து இருப்பான். திருடன் கூடத் தான் திருடறது தன்னோட வீட்டு ஆளுங்களுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான் நினப்பான். அதவிட்டுட்டு, நான் இன்னார் கழுத்தை அறுத்து இப்படித் திருடி வித்துச் சம்பாரிச்சுத்தான் உனக்குக் கொண்டாரேன்னு ஒரு திருடன் தம் பெருமைய வீட்ல பேசுனா, அவன் அண்ணன், அப்பன், தம்பி, அம்மா, பொண்டாட்டில்லாம் சாணியக் கரைச்சு அவன் மேல ஊத்தணுமா வேணாமா? பிஞ்ச செருப்பால அடிச்சி விரட்டணுமா வேணாமா? அப்படிச் செய்யாத குடும்பமெல்லாம் ஒரு தரமான குடும்பமா என்ன?  ஆனா பாரு, இங்க அண்ணன் தன் தம்பிகிட்ட பாஞ்சாலி சேலைய உருவுங்கிறான். 

துரியோதனன் அப்பன் காரனுக்குக் கண் தெரியாது, ஆனா அங்க என்ன நடக்குதுன்னு நல்லாப் புரியும். வாய் இருக்கு. ஒண்ணுமே பேசலையே? இதாவது ஆம்பள. அவன் பொண்டாட்டி காந்தாரி ? அவளும் கண்ணக் கட்டிட்டு ஒக்காந்திருக்கறதால எனக்கொண்ணும் புரியல தாயீ கணக்கா, தூண் உச்சில பாக்கறாப்பல தலய தூக்கி வச்சிருக்கா. 

ஆனா இந்த அஞ்சுப் புருஷமார்களுக்கு மட்டும் அந்த வார்த்தையக் கேட்டதும் ரோஷம் பொத்துக்கிட்டு பெருகிச்சு. இந்தக் கோபமெல்லாம் பொண்டாட்டிய வச்சு சூது ஆடறதுக்கு முன்னயே இல்ல இருந்திருக்கணும் ? இப்பப் பொங்கி என்ன பண்ணறது ? எல்லாம் ஆம்பளைங்கிற திமிரு? தோத்தவனுக்கு மட்டுமல்ல ஜெயிச்சவனுக்கும். 

அதான் சபைல வச்சு ஒரு நிராதரவானப் பொண்ணுன்னு கூடப் பாக்காம சேலைய அவுக்கச் சொல்றான். 

துச்சாதனன் நாக்கச் சப்புக் கொட்டிட்டே அவ புடவைல கைய வச்சுட்டான். அவ அவளோட புருஷங்காரைய்ங்களப் பாக்குறா. அம்புட்டுப் பயகளும் தலையக் கவுந்த மேனிக்கு இருக்கானுங்க. யோக்கினுங்க. சட்டத்துக்குக் கட்டுப்பட்டவங்க. இப்ப ஜெயிச்சவனுக்கு அவனுங்க அடிமைங்க. நிச்சயம் தன்னைக் காப்பாத்த வரவே மாட்டானுங்க. 

அயோக்கியன் சட்டத்தை மீறுறான். யோக்கியன் உசுரே போனாலும் பொத்திட்டு நிக்கிறான். இங்க பொண்டாட்டி மானம் பெருசா, தங்களோட உசுருங்க பெரிசான்னு பாத்தா, உசுருதான் முக்கியம்ன்னு கேவலமான பொறப்பா நிக்கானுங்க. ஒரே வழி அண்ணன கூப்பிடறதுதான். 

திரெளபதியோட அண்ணன் எந்த ஊரு நாட்டுக்குப் போறபோதெல்லாம் அங்க அங்க கிடைக்கிற நல்ல சேலைகளைத் தன் தங்கைக்குன்னு பாத்து வச்சிருப்பான். அதெல்லாம் அவளுக்கு வாங்கிட்டுப் போய்த் தரணும்ன்னு அவன் நினைக்கிறதுண்டு. ஏன்னா அவனுக்குன்னு இல்ல, எந்த அண்ணனும் ஒரு புடவையைப் பார்த்தா முதல்ல இது நம்ம தங்கைக்கு எடுக்கணும்ன்னுதான் நினைப்பான். அப்புறம்தான் பொண்டாட்டிக்குச் சரிவருமான்னு நினைப்பான். 

“கண்ணா, கிருஷ்ணா, கோவிந்தா”ன்னு தன் அண்ணனோட எல்லா பேர்களையும் உதவிக்குக் கூப்பிட்டுக் கதறுறா திரெளபதி. 

அண்ணன் காதுல தங்கச்சியோட அபயக் குரல் உடனடியாக் கேக்குது. அந்தக் குரல் எதுக்குன்னும் புரியுது. தன்னோட தங்கச்சிக்காகப் பாத்து வச்சிருந்த அத்தனை ஆயிரம் சேலைகளையும் உடனடியா ஒவ்வொண்ணா அவளுக்கு அனுப்பி வைக்கிறான். 

பாஞ்சாலியோட சேலை சிவப்பு கலர். உருவறான். பாதி உருவிட்டான், ஆனா அது இப்ப ஆரஞ்சுக் கலர்ல இருக்கு. பாஞ்சாலியப் பாக்குறான், அவளோட செவப்புச் சேல இவன் கைல, தூக்கிப் போட்டுட்டு ஆரஞ்ச உறிச்சா அவ சேலை பச்சைக் கலர்ல இருக்கு, இவன் கைல ஆரஞ்சுக் கலர் சேலை. பச்சைய உரிச்சா மஞ்சள், மஞ்சள உரிச்சா ஊதா. ஊதாவத் தரைல போட்டுட்டு பிங்க சர சரன்னு இழுக்கிறான். மெரூன் கலர்ல பாஞ்சாலி தகத் தகன்னு மின்னுறா. 

இவன் உரிக்க உரிக்கச் சேலை கலர் மட்டும் மாறல. சேலையோட வடிவழகும் மாறுது.  

சபைல ஆம்பிளைங்க மட்டுமில்லாம பொம்பளைங்களும் இருந்தாங்கன்னு நாம காந்தாரிய மட்டும்தான நினச்சிருப்போம் ? அவ்வளவு நேரம் கமுக்கமா இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் வாளவிருந்த கூட்டம், மலை போலக் குவியற இந்த கலர் கலரான, வழிவழகான சேலை அழகில் மயங்கி, ஆர்ப்பரிச்சு வெளிப்படுது. ஆளுக்கு நாலுன்னு தனக்குப் பிடிச்ச நிறங்கள்ள அள்ளி எடுத்துட்டு அந்தப்புரத்துக்குப் பாயுதுக. அரக்கு கலர்ல மான் சரிகை போட்ட ஒரு சேலைய உருவிப் போட்டதும் கட்டுப்படுத்திக்க முடியாம துரியோதணன் பொண்டாட்டி பாய்ந்தோடி அள்ளிக்கிட்டு ஓடறா. இவளோட இடுப்புல இருந்த மேகலையத்தான் கர்ணன் உருவியிருப்பான். எடுக்கவோ, கோர்க்கவோன்னு சந்தேகமே படாம அசடு வழிஞ்சிக்கிட்டிருந்த கர்ணனப் பாத்துக் கேட்டவன் துரியோதனன். 

நல்லவேள, கண்ணுக் கட்ட அவுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்ததாலக் காந்தாரி வரல. துரியோதனன் மற்றும் அவனுடைய சகோதரர்களின் மனைவிமார்கள் சேலைய அள்ளிக்கிட்டுப் போய்க் கண்ணாடி முன் நின்று தங்களுக்குப் பொருத்தமான சேலைகள் எதுவென்று ஒவ்வொன்றாய் உடுத்தி அவிழ்த்து என்று ஏகப் பொருத்தமானதை உடுத்தி அரசவைக்கு வந்து இதெப்படி இருக்கு என்று வெட்கமில்லாமல் தங்கள் கணவரிடமும், ஊராரிடமும் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்குதுகள். 

இன்னொருபுறத்தில் துச்சாதனன் மட்டுமல்லாது எவனெவனோ பாஞ்சாலி சேலைகளை உரிக்க முயன்று களைத்துச் சரிந்துக் கிடக்கின்றனர். மலைபோல சேலைகளுக்குச் சமமாக அவர்களும் மலைபோல் மயங்கிக் குவிந்து கிடக்கிறார்கள். 

கண்ணனுக்குத் தன் தங்கையின் மானம் காக்கப்பட்டது என உணர்ந்த அடுத்த விநாடியில், அனைத்துச் சேலைகளும் மாயமாகின்றன. கெளரவர்களின் மனைவிமார்களின் சேலைகளும். 

யாரை நிர்வாணமாக்க முயன்றார்களோ அவள் இப்போதும் புதுச் சேலையில் அப்படியே இருக்க, இவர்களுடைய மனைவிகள் அவைகளுக்கு முன் திடுக்கென நிர்வாணமாய் நின்றனர். முழு உடலை மறைக்க இரு கைகள் போதாமல் அவள்கள் அலறிக்கொண்டு அந்தப்புரம் ஓடியக் காட்சியைக் கண்டு நகைக்காத ஆளில்லை. 

 “என்ன பாப்பா பாக்குற ? நூறு பொம்பளைங்க சேலையில்லாம ஓடறதப் பாத்துக் கேலி பண்ணிச் சிரிக்கறது பாவமில்லையான்னுதான நினைக்குற ?” 

திரெளபதி சேலைய பிடிச்சி இழுத்தவன் இவளுக நூறு பேருல ஒருத்திக்குப் புருஷன், ஒருத்திக்கு மச்சினன், பல பேருக்கு அம்மா ஸ்தானம், பொம்பளப் புள்ளய அவ இஷ்டம் இல்லாமத் தொடுறியாடா நாயேன்னு ஒருத்தி கூடக் கேக்கல. இங்கன்னு இல்ல. ஊர் உலகம் எல்லாம் இதான நடக்குது ? என்ன பண்ணினாலும் எம் புள்ள, எங்கண்ணன், எந்தம்பி அப்புறம் எப்படி விளங்கும் ? இன்னொரு பொம்பளைக்கு இன்னைக்கு நடந்தது நாளைக்கு எவனாலயாவது நமக்கும் நடக்கும் என ஏன் அவங்களுக்குத் தோண மாட்டேங்குது ? மானமுள்ள பொண்ணுன்னா துச்சாதனன் பொண்டாட்டி அவனுக்குச் சாப்பாட்டுல விசத்த வச்சிருக்கணும். அப்படி அவ அன்னிக்குச் செஞ்சிருந்தா பொம்பளப்புள்ளைய அவமானப்படுத்தறதுக்கு முன்னாடி எல்லாப் பயகளும் கொஞ்சமாவது யோசிப்பானுங்க. அதனால அவ மாயச்சேலை மறைஞ்சு அவ அவமானப்பட்டது சரின்னு நான் சொல்ல வரல. ஆனா அது தப்புமில்ல. என்று முடிக்கிறாள்.  
உயிர்மை பிப்ரவரி 2018 

-ராகவேந்திரா, திருப்பூர். வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)