பதிவு செய்த நாள்

28 பிப் 2018
12:13
மெர்சோல்ட் :  மறு விசாரணை

 ‘மெர்சோ: மறுவிசாரணை’ ஒரு பின்காலனிய நாவல். இந்தியர்களுக்குக் காலனிய, ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பாகப் பின்பாக என இருவேறு வாழ்க்கை உண்டு. எனில், பிந்தைய வாழ்க்கையைப் பின்காலனியம் என்று அடையாளப்படுத்தவும் முடியும். 

தமிழிலக்கியத்தில் விடுதலைப் போராட்டக் காலத்தில் தீவிரமாக இயங்கிய எழுத்தாளர்களிடையே இந்தப் பின்காலனியத்தை மறு ஆக்கம் செய்யும் எழுத்து மனோபாவம் இருந்ததற்கான சான்றுகள் என்று எவையும் தென்பட்டதில்லை. அதிகபட்சமாக அன்றைக்கு எழுத்திலக்கியத்தைக் கைக்கொண்டிருந்தவர்கள் உயர்மட்டக் குடியினராக இருந்ததும் அதன் காரணமாக இருக்கலாம். 

அன்றைய எழுத்திலக்கிய ஜாம்பவான்கள் ஆங்கிலேய அரசுக்கு மிகுந்த இசைவான தன்மையையும் கொண்டிருந்தார்கள் என்பதைத் தங்கள் நூல்களில் வெளிப்படுத்தினார்கள். எல்லா நாவல்களிலும் அட்டையிலும் தலைப்புடன் சேர்த்து, பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் தங்களுக்கும், தேசபக்தர்களுக்கும் அல்லது அவரது புத்தகங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிவிக்கும் விதத்தில் ஆங்கிலத்தில் விவரங்களும் இணைக்கப் பட்டிருந்தன. 

இன்றும் அரசியலில் கோளோச்சிக் கொண்டிருக்கும் உயர்சாதி இந்துக்கள், இந்திய கலாச்சாரத்தின், தேசப்பற்றின் மாண்பைப் பேசினாலும் அது வெறும் பாவனையாகவே இருக்கிறது. காரணம் இவர்கள் பதவிக்காகச் செல்வம் சேர்ப்பதற்காக எதையும் விட்டுக்கொடுத்த நிகழ்வுகள் வரலாறு முழுக்கச் செழித்துக் கிடக்கிறது. இசைந்து போகும் மனநிலை இவர்களுக்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. 

ஆனாலும், பின்காலனியத்துவப் படைப்புகள் ஆங்கிலேயே அரசால் பெருமளவு பாதிக்கப்பட்ட மற்ற சமூக மக்களிடமிருந்து வந்திருக்க வேண்டும். அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனியாதிக்கத்து எதிராக நடந்ததுபோன்ற பெரும் பாதிப்புகள் ஏதும் நம்முடைய பின்காலனிய தேசத்தில் ஏற்படவில்லை. அவர்கள் இந்திய பாகிஸ்தானப் பிரிவினை போராட்ட்த்தின் சாதகப் பலனை தங்களுடைய காலனிய ஆதிக்கத்தின் நனவிலி மன்ங்களுக்கு ஏற்ப கட்டமைத்துக் கொண்டார்கள். 

அதன் எதிர்வினை பிரிவினையின் வரலாறு பதிவான அளவுக்கு ஆங்கிலேய காலனியத்துக்கு எதிரான ‘கம்பலை எழுத்துக்களை’ பின் காலனிய காலத்தில் நாம் எதிர்கொள்ளவில்லை. வரலாற்றுப் பதிவுகளாகச் சில நூல்கள் உள்ளன என்றாலும் அவை நேர்கோட்டில் பின்காலனிய எதிர்ப்பலைகளைக் கொண்டதல்ல.. 

இன்னமும் சொன்னால் வெள்ளைக்காரனே பரவாயில்லை என்பதுபோன்ற தோற்றம் மக்கள் மனத்தில் மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்திலும் உலவ பின்வந்த ஆட்சியாளர்கள் காரணமானார்கள். 

ஆல்பர் காம்யுவின் படைப்புகளில் அரேபியர்கள் முகமின்றி உலாவுவதைப் பற்றின விமர்சனங்களைப் படிக்கவேண்டி வந்தபோது பெரிய நெருடல். செரிப்பதற்குச் சிரமமாக இருந்தது. இப்போது, இவ்வளவு காலத்துக்குப் பிறகு தங்களுக்கு மறுபக்கம் உண்டு என்று சொல்லக் கூடிய ஓர் அல்ஜீரியனின் ஆக்ரோஷம் மிகுந்த வரிகளாக மறுவிசாரணை இருக்கிறது. தங்களது பின்காலனிய வாழ்வை அது இலக்கியப் பிரதியாகப் பதிவு செய்கிறது. 
‘அந்நிய’னின் தொடர்ச்சியான காமெல் தாவுதின் இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல்: பிரெஞ்சு மூலத்தில், ‘அந்நியன்’ புத்தகத்தில் உள்ள மொத்த எழுத்துகள் (நிறுத்தற்குறிகளையும் சேர்த்து) எவ்வளவோ, துல்லியமாக அதே அளவு இந்தப் புத்தகத்தில் இருக்கும்படி காமெல் தாவுத் கவனமாகப் பார்த்து எழுதியிருக்கிறார்.

-ஜீவா, சென்னை. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)